ZingTruyen.Xyz

கல்யாணம் டூ காதல்

6 ஹாசினியின் மறுப்பு

NiranjanaNepol

 6 ஹாசினியின் மறுப்பு

எல்லாரும் அவங்கவங்க இடத்துல உக்காந்தாங்க.


"ஹாசினி, கெளதம் பக்கத்துல உக்காரு," எங்க அம்மா அவளை என் பக்கத்துல உட்கார வச்சாங்க. நேத்து வரைக்கும் அது என் தங்கை நந்தினியோட சீட்.


நான் ஒரு ஃபுட்டி. 'சாப்பாட்டு ராமன்' அப்படிங்கறதை தாங்க கொஞ்சம் ஸ்டைலா சொன்னேன். சோறு தான் முக்கியம்னு சொல்ற அளவுக்கு நான் மோசம் இல்ல. ஆனா, சோறு ரொம்ப முக்கியம்ங்க. நான் வாழறதுக்காக சாப்பிடல, சாப்பிடுறதுக்காக தான் வாழறேன்னு எங்க அம்மா என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. ருசியா சாப்பிடுறதை விட வேற என்னங்க பெரிய சந்தோஷம் இருக்கு? அந்த விதத்துல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எங்க அம்மா பிரமாதமா சமைப்பாங்க. youtube எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே, டிவியில பாக்குற ரெசிபி எல்லாம், நோட்ல எழுதி வைக்கிறதோடு நின்னுடாம, கொஞ்சமா செஞ்சி ட்ரை பண்ணி பாத்துட்டு, எங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி அதை ஆல்டர் பண்ணி சூப்பரா குடுப்பாங்க. ட்ரெடிஷனல் ஃபுட்னா அம்மா பட்டையைக் கிளப்புவாங்க. அம்மா செட்டிநாடு நாட்டு கோழி குழம்பு வச்சா, நான் அப்பீட்டு... அதோட டேஸ்ட்டுக்கு நான் அடிமை. எனக்குப் பிடிக்கும்னு, அன்னைக்கும் அம்மா அதைத் தான் சமைச்சிருந்தாங்க, இடியாப்பத்தோட...! ஒரு பிடி பிடிக்க வேண்டியது தானே!


ஹாசினியோட தட்டுல இடியாப்பத்தையும் செட்டிநாடு கோழி குழம்பையும் அம்மா வச்சாங்க. பேர் சொல்ல முடியாத ஒரு எக்ஸ்பிரஷனோட அதை அவ பார்த்தா. அவ இதை சாப்பிட்டதில்ல போலருக்கு. அவங்களுக்கு என்ன, இளவரசி...! சைனீஸ், இட்டாலியன், கான்டினென்டல்னு ஸ்டார் ஹோட்டல் பிரேக் ஃபாஸ்ட் இருப்பாங்க. அவளை நான் ஓர கண்ணால பார்த்துகிட்டே இருந்தேன்.


அவ சாப்பிட ஆரம்பிச்சா. முதல் வாய் எடுத்து வச்சிட்டு, நிதானமா டைம் எடுத்து டேஸ்ட் பண்ணா. அவ முகம் மாறிச்சு. அவ கண்ணுல ஒரு மின்னல். அவளுக்கு அது ரொம்ப பிடிச்சி இருந்ததுன்னு அவ முகபாவமே சொல்லுச்சு. அதை என்னால நம்ப முடியல. அவசரப்படாம, நிதானமா, ரசிச்சு சாப்பிட்டா. அவ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் நான் காத்துக்கிட்டிருந்தேன். டேபிள் மேனஸ்னா என்னன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்களே...!


சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம், ஹாசினி எங்க அம்மாவை ஃபாலோ பண்ணி கிச்சனுக்குப் போறதைப் பார்த்தேன். இன்ட்ரஸ்ட் இல்லாத என் ஒய்ஃப், கிச்சனுக்கு போய் என்ன செய்யப் போறான்னு பார்க்குற இன்ட்ரஸ்ட் எனக்குள்ள எழுந்துது. என் கசின்சோட கிண்டலான சிரிப்பைப் பத்திக் கவலைப்படாம, நான் அவளை ஃபாலோ பண்ணிப் போனேன்.அவ பேசுறதைக் கேட்கிற தூரத்துல, கிச்சனுக்கு வெளியிலயே நின்னேன். தன் மருமகளை கிச்சன்ல பார்த்த எங்க அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கல. அவகிட்ட ஓடிப்போய்,


" ஹாசினி உனக்கு ஏதாவது வேணுமா?" 

ன்னு கேட்டாங்க.

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் ஆன்ட்டி."


"கேளு..." வழக்கமா எங்க அம்மா, பொம்பள பிள்ளைங்களை, டா போட்டு பேசுவாங்க. ஆனா ஹாசினியை அப்படிச் சொல்ல அவங்க தயங்கினாங்க. அது ஏன்னு எனக்குப் புரிஞ்சது. ஒரு இளவரசியை அப்படிக் கூப்பிட அவங்களுக்குத் தைரியம் இல்ல.


"நீங்க இன்னைக்கு சமைச்சு இருந்தீங்களே அது என்னது, ஆன்ட்டி? "எங்க அம்மா சமச்ச குழம்பைப் பத்தி அவ கேட்டா.


" செட்டிநாடு கோழி குழம்பு"


" ரொம்ப நல்லா இருந்தது, ஆன்ட்டி"


எங்க அம்மா பளிச்சுன்னு சிரிச்சாங்க. அடுத்து அவ எங்க அம்மா கிட்ட கேட்டது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.


"அந்த ரெசிபியை எனக்குத் தரீங்களா?"


எங்க அம்மாவும் திகைச்சித் தான் போயிருக்கணும், என்னை மாதிரியே! அவங்களும் அவகிட்ட இருந்து அதை எதிர்பார்க்கல. அவ அதை எல்லாம் ட்ரை பண்ணுவான்னு எனக்குத் தோணல. அப்படி இருக்கும்போது எதுக்காக அந்த ரெசிபியை அவ கேட்டா? அவ இயல்பா இருக்குற மாதிரி காட்டிக்க முயற்சி பண்றாளோ? எனக்கு நிச்சயமா தெரியல.


" உனக்கு அது பிடிச்சிருந்தா நான் சமைச்சி குடுக்கிறேன்." எங்க அம்மா தயக்கத்தோட சொன்னாங்க.


" நீங்க சமைச்சி கொடுப்பீங்க தான்..."


அவளை மேல பேச விடாம,


" அதை நீ ஏன் தெரிஞ்சுக்கணும்? நீ ஒரு இளவரசி ஆச்சே... " எங்க அம்மா அதை சொன்னப்போ, அவங்க குரலில் இருந்த தயக்கத்தை நான் உணர்ந்தேன். ஹாசினி சமைக்கிறதை அவங்க விரும்பல.ஹாசினியோட முகம் மாறிடுச்சு.


"இளவரசியா? நான் உங்க பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்குப் பிறகு, நான் எப்படி இளவரசியா இருக்க முடியும்? நான் இப்போ இளவரசி இல்ல." அவ ப்ளெய்னான குரல்ல சொன்னா. அவ குரலை உயர்த்தவும் இல்ல, அவ குரல்ல கோவமும் இல்ல. எல்லா நேரமும் பேலன்ஸ்டா இருக்க அவளுக்கு ட்ரெயினிங் கொடுத்து இருப்பாங்களோ? எங்க அம்மாவைப் பொறிகலங்க வச்சுட்டு, அவ அங்கிருந்து போயிட்டா.


நானும் பொறி கலங்கித் தான் போனேன். அவ சொல்றது சரி தானே! என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்குப் பிறகு, அவ எப்படி இளவரசியா இருக்க முடியும்? ஏற்கனவே அவ எங்க கல்யாணத்தால அப்செட்டா இருந்தா. என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளைக் கல்யாணம் பண்ணதுக்காக அவ அப்செட்டா இருக்காளோ? அவகிட்ட பேசணும்னு நினைச்சேன். அவகிட்ட இருந்து எட்டியே இருக்கிறது வேலைக்காகாது.


பதட்டத்தோட வெளிய வந்த எங்க அம்மா என்னைப் பார்த்தாங்க."அவ அப்செட் ஆயிட்டான்னு நினைக்கிறேன்."


"ஏன் மாம்?"


"அவ என்கிட்ட ரெசிபியைக் கேட்டா. ஆனா நான் கொடுக்கல..."

"ஏன் மாம் குடுக்கல? அவ உங்க கிட்ட கேட்டா நீங்க கொடுத்து இருக்கணும் தானே?"

"அவங்க வீட்ல நிறைய குக் இருக்காங்க. அவ தான் சமைக்க போறதில்லயே டா ..." பரிதாபமா சொன்னாங்க அம்மா.

"அவங்க வீட்ல இருக்குற குக் கிட்ட குடுத்து கூட அவ சமைக்க சொல்லலாம் இல்ல?"

"அப்படின்னா, நான் அதை அவளுக்குக் கொடுக்கிறேன். என்னை தப்பா நினைச்சுக்க வேண்டாம்னு சொல்லுடா."

எனக்கு சிரிக்கத் தோணிச்சு. என்னோட வாழ்க்கை எங்க போகுதுன்னே எனக்குத் தெரியல. நான் போய் ஹாசினி கிட்ட எங்க அம்மாவைத் தப்பா நினைச்சுக்காதேன்னு சொல்லனுமாம். செம காமெடி...

"சரி மாம். நான் சொல்றேன்" னு சொல்லி வச்சேன்.

"உன்கிட்ட நான் ஒன்னு சொல்லனும் டா," எங்கம்மா என் கையைப் பிடிச்சி சொன்னாங்க.

"சொல்லுங்க மாம்." ன்னு அவங்க கை மேல என் கையை வச்சேன்.

" பொண்ணுங்கள புரிஞ்சுக்கறது ரொம்ப கஷ்டமா தெரியும். ஆனா அது அப்படி இல்ல... சாதாரண பொண்ணா இருந்தாலும் சரி, இளவரசியா இருந்தாலும் சரி. கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் இருந்தா போதும். பாக்குறதுக்கு அவங்க ரொம்ப விரைப்பாவும் ஆர்வம் இல்லாமலும் இருப்பாங்க. ஆனா அவங்க மனசோட அடி ஆழத்துல ரொம்ப எளிமையானவங்க. அவங்களுக்குன்னு சில அந்தரங்க ஆசைகள் இருக்கும். அதை அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் காட்டிக்க மாட்டாங்க. ஆனா, யாராவது அதை விருப்பப்பட்டு தெரிஞ்சுக்கணும்னு விரும்புவாங்க. மத்தவங்க தன்னை கொண்டாடணும்னு ஆசைப்படுவாங்க. அவங்க எதிர்பார்ப்பெல்லாம் அவ்வளவு தான். "

என் அம்மா நான் என்ன புரிஞ்சிக்கணும்னு விருப்பப்படுறாங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன். என் அப்பாகிட்ட எங்க அம்மாவுக்கு கிடைக்காத அந்த விஷயங்களைத் தான் அவங்க என்கிட்ட விலாவரியா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்பா செஞ்ச அதே தப்பை நான் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. ஆனா திடீர்னு அவங்க ஏன் அதை என்கிட்ட சொன்னாங்கன்னு தான் எனக்குப் புரியல.

"ஹாசினி என்கிட்ட ரெசிபியைக் கேட்டா. அது விசித்திரமா இல்லயா?" ன்னு கேட்டாங்க.


எனக்கும் அது விசித்திரமா தான் இருந்தது.

"அவ எப்படித் தன்னை வெளிக் காட்டுறாளோ அது அவ இல்லன்னு எனக்குத் தோணுது" ன்னு என் அம்மா சொன்னது எனக்கும் சரின்னு தான் தோணுச்சு. அப்படி இருக்கவும் வாய்ப்பு இருக்கா?

"அவ நடந்துகிறதைப் பார்த்து, இரிடேட் ஆகாத. அவளை கூர்ந்து கவனி. நீ ரொம்ப புத்திசாலி. உனக்கு எதுவுமே கஷ்டமில்ல. இது உன் வாழ்க்கை. அதுல ஜெயிச்சு காட்டு."

சிரிச்சுகிட்டே தலையசைச்சேன். வழக்கம் போலவே அம்மா என் நெத்தியில முத்தம் கொடுத்தாங்க.

"நான் லிவிங் ரூமுக்கு வந்தப்போ ஹாசினி எங்க ரூமுக்குப் போறதைப் பார்த்தேன். அவளை ஃபாலோ பண்ணேன். என் ரூம் கதவு, பாதி மூடி இருந்தது. நான் உள்ள நுழைஞ்சப்போ, அவ ஒரு குறிப்பிட்ட பெயிண்டிங்கைப் பார்த்துக்கிட்டு இருந்தா... ஒரு பொண்ணு கூண்டுக்குள்ள இருக்கிற மாதிரியான ஓவியம் அது. என்னைத் திரும்பி பார்த்துட்டு மறுபடியும் அந்தப் பெயிண்டிங் பக்கம் முகத்தைத் திருப்பிக்கிட்டா.

நான் கதவைச் சாத்தி லாக் பண்ணப்போ அவ ரியாக்ட் பண்ணல.

" உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... "

"கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்"

" உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு எனக்குத் தெரியும்"ன்னு சொன்ன உடனே திரும்பி என்னைப் பார்த்தா.

"எதுக்காக நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு எனக்குத் தெரியல."

பதில் சொல்லாம மறுபடியும் அந்தப் பெயிண்டிங் பக்கம் திரும்பினா.

"அதுக்கு என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" ன்னு கேட்டேன்.

"அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க?" என்னைத் திருப்பி கேட்டா.

"நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. இந்த ரிலேஷன்ஷிப்புக்கு என்னால ஆன பெஸ்ட்டைக் கொடுக்க நினைக்கிறேன்" னு சொன்னேன்.

"யாருக்காக?"ன்னு அவகிட்ட இருந்து புல்லட் மாதிரி கேள்வி வந்தது.

சில நொடி நான் ஸ்தம்பச்சு போனேன்.

"உங்களுக்கும் தான் இந்தக் கல்யாணத்துல விருப்பமில்ல. அதை நீங்களே என்கிட்ட சொன்னீங்க. அதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு. ஆனாலும் அதை என்கிட்ட நீங்க சொல்ல விரும்பல. இப்ப மட்டும் என்ன ஆச்சு? காரணத்தைத் தெரிஞ்சுக்க ஏன் நினைக்கிறீங்க? நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதுக்காகவா? இல்லன்னா, அதை உங்க குடும்பத்துக்காகச் செய்ய நினைக்கிறீங்களா?" அதைக் கேட்டப்போ அவ முகத்துல எந்த ரியாக்ஷனும் இல்ல.

"காரணம் என்னவா இருந்தா என்ன? அதை நான் தெரிஞ்சுக்கணும்" னு சொன்னேன்.

"உங்க மேல திணிக்கப்பட்ட இந்த ரிலேஷன்ஷிப்பை நான் ஏத்துக்குவேன்னு நினைக்கிறீங்களா?"

நான் அமைதியா இருந்தேன்.

"ஆமாம். நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு தான். அதுக்காக விருப்பமில்லாத இதை நம்ம ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. நம்ம ஒன்னும் ரோபோட் இல்ல. எல்லா கமெண்ட்டுக்கும் ஒபே பண்ணிக்கிட்டு, புது வாழ்க்கையை ஆரம்பிக்க... எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு, உங்களை மாதிரியே..." சாரமில்லாம சொன்னா.

அவ தன் ஃபீலிங்சைப் பத்திப் பேசுற அளவுக்கு, அப்படி நான் என்ன சொல்லிட்டேன்?

"இப்போ நான் என்ன செய்யணும்?" னு கேட்டேன்.

"நீங்க நீங்களா இருங்க. என்னையும் நானா இருக்க விடுங்க. அவ்வளவு தான்." னு சொல்லிட்டு ரூமை விட்டுப் போயிட்டா.

அவ போறதையே பார்த்துக்கிட்டு நின்னேன். என்னை அவர் நேரடியா நிராகரிச்சிருக்கா. என்னை நிராகரிச்சா எனக்குப் பிடிக்காது. ஆனாலும் எனக்கு அவ மேல கோவம் வரல. ஏன்னா அவ சொன்னது எதுவும் தப்பில்ல. நான் தயாரா இருக்கேன் அப்படிங்கறதுக்காக அவ மனசை மாத்திக்கணும்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அது மட்டும் இல்லாம, அவ என்கிட்ட கோவமா பேசல. அவ பேச்சுல ஏமாற்றம் தான் தெரிஞ்சிது. எல்லாத்துக்கும் மேல, எனக்கு அவ கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்ல. நான் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுகிட்டேன். அவ எதையோ அவ மனசுல மறச்சு வச்சுருக்கா. இல்லனா அவ ஃபீலிங்ஸ் பத்திப் பேசியிருக்க மாட்டா. அவ வேற யாரையாவது காதலிக்கிறாளா? எனக்கு அப்படித் தான் தோணுச்சு.

அவ பார்த்துகிட்டு இருந்த என்னோட பெயிண்டிங் பக்கம் என் பார்வை போச்சு. அதுல, ஒரு பொண்ணு கூண்டுக்குள்ள இருந்தா. அதுல அவ என்ன பாத்துகிட்டு இருந்தா? அந்தப் பெயிண்டிங்ல எனக்கு ஏதாவது ஹின்ட் இருக்கா? நான் மறுபடியும் லிவிங் ரூமுக்கு வந்தேன்.அதே நேரம், என்னோட அக்கா பொண்ணுங்க மித்ராவும் நேத்ராவும் அங்க வந்தாங்க. லேட்டா தூங்குனதுனால, லேட்டா எழுந்தாங்க போலருக்கு. ஜொலிச்சுக்கிட்டு இருந்த, அவங்களோட புது மாமியைப் பார்த்து அவங்க வாயைப் பிளந்தாங்க. அவங்க என் அக்காவை நச்சரிச்சாங்க.


அக்கா என்னன்னு கேட்டாங்க. அவங்க ஹாசினியை பாயிண்ட் பண்ணாங்க. அக்கா அவங்ககளைப் பார்த்து கண்ணிமைச்சாங்க.அவங்களுக்கு ஹாசினி போட்டிருக்கிற மாதிரி டிரஸ் வேணும். சின்னக் குழந்தைங்க, அப்படித் தானே இருப்பாங்க?


அவங்க ரெண்டு பேரும் ஹாசினி கிட்ட போய் வெட்கத்தோட சிரிச்சாங்க. எனக்கு டென்ஷன் ஆயிடுச்சு. அவங்களை அவ அப்செட் பண்ணிடக் கூடாதே... ஆனா நான் எதிர்பாராத விதமா, அவங்ககிட்ட கை கொடுத்தா ஹாசினி. அது அவங்க தயக்கத்தை விரட்டி அடிச்சுது. எனக்கு நிம்மதியா இருந்தது. அட்லீஸ்ட் குழந்தைங்க கிட்டையாவது அவ கூலா இருக்காளே...அவங்க ரெண்டு பேரோட கையையும் ஒண்ணா பிடிச்சி, ஷேக் பண்ணா.


" ஐ அம் மித்ரா... "


" ஐ அம் நேத்ரா... " ன்னு பெரிய மனுஷிங்க இன்ட்ரோடுயூஸ் பண்ணிட்டாங்க.


" ஐ அம்... " ஹாசினி அவர் பெயரைச் சொல்றதுக்கு முன்னாடி,

"ஹாசினி சேதுபதி..." ரெண்டு பேரும் ஒரே குரல்ல சொன்னாங்க.

"மிஸஸ் ஹாசினி கௌதம்," ன்னு ஹாசினி அதை கரெக்ட் பண்ணதைக் கேட்டு, எல்லாரும் நிசப்தம் ஆயிட்டாங்க, என்னையும் சேர்த்து.

எல்லாரும் அவளை பெருமையா பார்த்தாங்க. ஆனா நான் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்க மாட்டேன்னு ரிஜெக்ட் பண்ணிட்டு, இப்போ அவளை, மிஸஸ் ஹாசினி கௌதம்னு சொல்றா... எதுக்காக இந்தக் கல்யாணத்துல அவளுக்கு விருப்பம் தான்னு காட்டிக்கிறா? எனக்குச் சத்தியமா புரியல.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz