ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 8

Nivethamagathi

என்ன டாக்டரம்மா... செம்ம அழகா இருக்கிங்க.. என்றவாரே அவளது அருகில் வந்தான் அவளது தூரத்து உறவினரான குமார்..

போன திருவிழாவில் தான் பக்கத்து ஊர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதால் ஜெயிலுக்குச் சென்றான்.. எப்படி வெளியே வந்தான் என்று தெரியவில்லை..

அவனைக் கவனியாது தனது தாயிடம் செல்ல நினைத்தவளைக் கைப்பற்றித் தடுத்தான்.. அவள் கையை அவனை அறைய ஓங்குவதற்கு முன்னரே அவனது கன்னத்தில் இடியென ஒரு அறை இறங்கியது..

" எத்தனை தடவை சொல்லிருக்கேன்..வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு.. வந்ததும் இல்லாம என் தங்கை கையவே பிடிக்கறியா " என்று மறுபடியும் அறைந்தான் ஆகாஷ்..

அதற்குள் பெரியவர்கள் வந்துவிட அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்..
கமலா வந்த உடனேயே தலையில் உள்ள காயத்தைக் கண்டு கண்ணீர் வடித்தார்.. பெற்ற மனமாயிற்றே காயம் அவ்வளவு பெரிது இல்லையென்றாலும் வலிக்காமல் இருக்குமா..

" அம்மா.. நீங்க அழுதே அவளப் பயப்படுத்திடுவிங்க போல.. இது சும்மா ரெண்டு ரூபா பேன்ட்டெய்ட்.. அதுக்கு பல லட்சம் மதிப்புள்ள உங்க கண்ணீர வீணாக்காதிங்க " என்று கமலாவைத் தேற்றினான் ஆகாஷ்..

சந்துருவும் அனுவுமே கமலாவை ஆன்ட்டி என்றே தான் அழைப்பார்கள்.ஆனால் ஆகாஷ் மட்டுமே கமலாவை அம்மா என்று உரிமையோடு அழைப்பான்.. இந்த வீட்டிலே அனைவரையும் முகம் கோணாமல் நடத்துவது அவன் மட்டுமே.. சாதனாவிற்கு ஒரு அண்ணன் இல்லையே என்ற கவலையைக் குறைத்தவன் இவன் ஒருவனே..அனுவுக்கும் இவனென்றால் கொள்ளைப் பிரியம்..ஆனால் பிரசாந்திற்கும் இவனுக்கும் தான் ஏழாம்பொருத்தம்.. ஆகாஷிடம் இருக்கும் பொறுமை என்றுமே இவனிடம் இருக்காது.. சந்துருவிற்கும் அனு இவனுடன் நெருங்கிப் பழகுவதால் என்றுமே ஒரு கண்ணுக்குத் தெரியாத வெறுப்பு இருந்து கொண்டே இருக்கும்..

" தனா .. இங்கேயே இரு " என்று கூறிவிட்டு அவளுக்காக அவன் வாங்கி வைத்த புடவையை கொண்டுவந்து கொடுத்தான்..

" அண்ணா எதுக்கு இதெல்லாம் " என்று அவள் மறுக்கவும் இது என்னோட செல்லத் தங்கைக்கு நான் கொடுக்கறது என்று கூறி கைகளில் தினித்துவிட்டான்..

சாதனா அவன் அன்பில் கனிந்து போனாள்.. சிறது நேரம் அவனுடன் பேசிவிட்டு கமலாவுடன் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

சாதனா உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றான் சந்துரு கோபமாக..
அவள் என்ன என்று கேட்கவும் " எதுக்கு அவங்கோடலாம் பேசற.. எனக்குப் பிடிக்கல நீ பேசக்கூடாது " என்றான் கடுப்பாக..

" லூசு போ காமெடி பண்ணாம.. அனு மேல பொசசிவ்வா இருந்தா பரவால.. எம்மேலயுமாடா.. உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லயா.." என்று சிரித்துக் கொண்டே அவனைக் கடந்து சென்றாள்..

அவளது வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த நபரைக் கண்டு சாதனா ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.. அங்கே நின்ற நபர் வேறுயாருமில்லை.. சந்துருவால் துவைத்து வெளுக்கப்பட்ட ராகுல் தான்.. அவள் வந்தவுடன் சடாரென்று அவள் காலிலே விழுந்துவிட்டான்..

கமலா வந்து அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறினாலும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்தது சாதனாவின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையைத்தான்..
அவளும் போனாப் போகிறது என்று மன்னித்துவிட்டாள்..

பெண்கள் எவ்வளவு முன்னேற வேண்டும் என்று நினைத்து அதற்கான படிகளை எடுத்து வைத்தாலும் ராகுல் மற்றும் குமார் போன்ற சிலர் தங்களைக் காட்சிப் பொருளாக மட்டுமே பார்ப்பதைக் கண்டு நொந்துபோனாள்..

திருவிழா சமயமாதலால் இரவு தெருக்கூத்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.. வளர்ந்து வரும் நவீன உலகத்தில் அழிந்துவரும் கிராமியக் கலைகளில் இதுவும் ஒன்று.. சினிமாத் துறையின் தாக்கம் இதை முற்றிலுமாக ஆட்டிப் பார்த்துவிட்டது என்றாலும் வெளியூருக்குக் குடிபெயர்ந்து சென்ற மக்களுக்கு ஒரு கெட் டூ கெதராக இருப்பது இதுவும் ஒன்று..
பார்த்து பார்த்து சளித்த கதை என்றாலும் அதை உற்றார் உறவினரோடு ஓலைப் பாயிலும் தென்னங்கீற்றிலும் அமர்ந்து அண்டை அயலாரின் பிரச்சனைகளை குசலம் விசாரித்துக் கொண்டே பார்ப்பது ஒரு தனி சுகம் தான்..

சாதனாவும் அதற்குத் தான் தயாராகிக் கொண்டிருந்தாள்.. இன்று அவளுக்கு மிகவும் பிடித்த "சத்தியவான் சாவித்திரி" தெருக்கூத்து.. பூஞ்சோலையில் சாதனாவின் பறக்கும் படை ஒன்று அவளுக்காக எப்போதும் பணியாற்றிக் கொண்டிருந்தது.. அது வேறுயாருமில்லை பக்கத்து வீட்டு நண்டும் சிண்டும் தான்..அவளுக்காக இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்..
அவளது குழந்தை மனதால் அனைத்துக் குழந்தைகள் மனதையும் கவர்ந்துவிட்டாள்..

சுந்தரனாரின் குடும்பம் இந்த ஊரில் பெரியத் தலைக்கட்டு..அதனால் அவர்கள் குடும்பம் மட்டும் கூட்டத்தின் கடைசியில் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்..குடும்பத்தார் அனைவரும் இருக்க வேண்டும் வேண்டும் என்பது அவரது அன்புக் கட்டளை..கூத்து தொடங்கி பத்து நிமிடங்களுக்குப் பின்பே சாதனா அவ்விடம் வந்து சேர்ந்தாள்..

அவளைக் கண்டதும் உள்ளூர்க் குழந்தைகள் " அக்கா இங்கவா " எனக் கத்த ஆரம்பித்தனர்..அவர்களது இரைச்சலால் கூத்து தடைபட அனைவரும் அவளையேப் பார்த்தனர்..

பௌர்ணமி இரவில் மஞ்சள் நிற தாவணியில் தேவதையென ஜொலித்தாள்..அவளை இருஜோடிக் கண்கள் விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தது.. அவளோ கூட்டத்தில் யாராவது காலை மிதித்துவிடுவோமோ எனப் பயந்து பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தக் கொண்டு நடந்து வந்து குழந்தையோடு குழந்தையாக ஐக்கியமானாள்..

அவளோடு அமர்ந்து பார்க்க அனுவிற்கும் ஆசைதான்.. ஆனால் அவள் அவளாகவே இருக்க, தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.. மூன்று மணிக்கெல்லாம் பாதிக்கூட்டம் கலைந்து விட , மீதிக் கூட்டம் தூக்கத்தில் தன்னைத் தொலைத்திருந்தனர்.. குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்துச் செல்ல, இவள் மட்டும் இப்போது தனித்திருந்து ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..
அனுவோ பிரசாந்தின் தோளிலே சாய்ந்து கொண்டு எப்போதோ தூங்கிவிட்டாள்..ஆகாஷ் அனுவின் அருகே அமர்ந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருப்பதால் கடுப்பின் உச்சியில் ஒரு ஜீவன் உறுமிக் கொண்டிருந்தது..

ஐந்து மணிக்கு கூத்து முடிந்தது.. தள்ளாடிக் கொண்டு தூக்கத்தில் நடந்து சென்ற சாதனாவைக் கைப்பற்றி இழுத்தது ஒரு ஜீவன்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz