ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 7

Nivethamagathi

பூஞ்சோலை கிராமம்.. கவலைகளின்றி சுற்றித் திரிந்த இளஞ்சிறுமி சாதனாவை என்றும் தனக்குள் ஒரு வட்டத்தைப் போட்டு வாழவைத்த பெருமை இந்தக் கிராமத்தையே சேரும்..

அங்கே உள்ள சிலரது கீழான எண்ணத்தினால் தான், ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடை உணர்ந்தாள்.. சாரதா இல்லத்தில் உள்ளவர்கள் எப்போதும் தன்மீது அன்பையே பொழிந்தாலும் அதனை அனுபவிக்காதபடி ஒரு பனித்திரையை உருவாக்கியது இங்கே தான்..

அதிலும் விஸ்வநாதனின் சிற்றன்னையின் மகன் மற்றும் மகளுக்கு முக்கியப் பங்குண்டு..

இருப்பினும் சாதனா சுதந்திரமாக வலம்வருவதும் இந்த ஊரில் தான்.. தனது தாய் தந்தையரின் பூர்வீக ஊராயிற்றே..தந்தையை நேரில் கண்டதில்லை என்ற போதும் அவரின் வீரதீர செயல்களை ஊரார் வாய்மொழியாகக் கேட்கும் போதெல்லாம் உடல்சிலிர்த்துப் போவாள்..

தந்தை வாழ்ந்த சின்னஓட்டு வீடு.. அதுவே அவளின் இராஜமாளிகை.. இங்கே வந்துவிட்டால் சாரதா இல்லத்திற்குள் நடந்த அவமானங்கள் காற்றில் பறந்து ஓடும்..தனது தந்தையே தன்னுடன் இருப்பது போல உணர்வாள்..சுந்தர மூர்த்தியாரது வீடு இவளது வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருப்பதால் இவளது சுதந்திரத்துக்கு சிறிதும் குறைவில்லை..இந்த வீட்டிற்குள் மட்டுமே சாதனா சாதனாவாக இருப்பாள்.. அதனாலே ஆண்டுக்கு ஒரு முறையாவது வந்து விடுவாள்..

இந்த சந்தோசத்தோடு தனது ஆருயிர் நண்பன் தனது காதலை நேரடியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது செய்கையால் அனுவிடம் ஓரளவு உணர்த்திவிட்டதால் அந்த சந்தோசமும் சேர்ந்து கொண்டது..

பிரசாந்த்திற்கு இந்தக் கிராமத்தோடு அந்த அளவு ஒட்டுதல் இல்லை.. கல்லூரி வரை விடுதியில் தங்கிப் படித்ததால் விடுப்பு இல்லையென்று கூறி தவிர்த்து விடுவான்..இல்லையேல் வந்த ஒரு மணிநேரத்தில் வெந்நீர் காலில் கொட்டியது போல துள்ளிக் குதித்துக் கொண்டு சென்று விடுவான்..
அவனின் சுபாவம் அறிந்து அவனை யாரும் அந்த அளவுக்கு கட்டாயப்படுத்தமாட்டனர்.. ஆனால் இந்த வருடம் சுந்தரம் தம்பதியனரின் கண்டிப்பான அழைப்பால் தவிர்க்க முடியாமல் வந்தான்..

அனுவை சமாதனப் படுத்தும் முயற்சியில் சாதனாவும் பிரசாந்தும் நெருங்கிய நண்பர்கள் ஆகாவிடினும் பார்த்தால் புன்னகையை பரிமாறும் அளவுக்கு நண்பர்களானர்கள்..

அனுவோ சந்துருவின் காதல் 100 சதவீதம் உறுதியான மகிழ்ச்சியில் எதனைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சாதனாவின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டே வந்தாள்..

சந்துருவோ எதனையோப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்..
பிரசாந்த் கூகுள் மேப்பின் உதவியோடு சாலையில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்தான்..அவனுக்கு அனுவைப் பற்றிய கவலை , சாதனா அவனிடம் சந்துருவின் நிலையைப் பற்றிக் கூறியதிலிருந்தே சென்றுவிட்டது..

பூஞ்சோலைக்குள் நுழைந்த உடனே சாதனாவின் முகம் புன்னகையில் ஜொலித்தது...

அனு உடனே எழுந்து வேண்டுமென்றே காரிலுள்ள முன் கண்ணாடியில் தனது முகத்தை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டே " சந்துரு நீ சொல்லு.. இந்த மேக்கப் ஓகேவா.. " என்றாள்.. அவனும் பார்க்காமலே " ஓகே " என்றான்..

" போடா பொறாமை புடிச்சவனே .. அண்ணா நீ சொல்லு.. நான் அழகா இருக்கனா.. நான் போனதடவை வந்தப்பவே ஆகாஷ் அத்தான் என்ன பப்புன் மாறி இருக்கனு சொன்னாங்க..பாத்து சொல்லுண்ணா..இல்ல இன்னும் கொஞ்சம் மேக்கப் போடவா" என்றாள் பாவமாக..

அவனோ அவள் கேட்ட கேள்விக்கு பதிலுரைக்காமல் " டேமிட் .... அவன் எப்படி உன்னப் பார்த்து பப்புனு சொல்லலாம்.. இரு போன உடனே அவன் மூக்க உடைக்கிறேன்..ராஸ்கல்... அதும் அவனுக்காக நீயேன் மேக்கப் போடனும் "என்று கூறி தனது கைமுஷ்டிகளை இறுக்கினான்

அனு என்னவோ சந்துருவை வெறுப்பேத்த தான் அப்படி கூறினாள்.. ஆனால் அதனைப் புரியாத இந்த முட்டாள் அண்ணனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தலையில் அடித்துக் கொண்டாள் அனு..சந்துருவும் சாதனாவும் இதனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்..

பிரசாந்தோ கோபமாக " இப்ப இங்க என்ன நடந்துச்சுனு இப்படி சிரிக்கிறீங்க" என்றான்.. அனுவும் அவனை விட்டுக் கொடுக்காமல் " அதானே " என்றாள்..

" சரி சரி நாங்க சிரிக்கல.. அனு இந்தா உன் பேஸ் கொஞ்சம் ஆயிலா இருக்கு .. தொடைச்சுக்கோ . உங்க அத்தானுக்கு உன்ன பிடிக்காம போயிட போகுது" என்று சந்துரு கர்சீப்பை நீட்டினான்..

நோ தேங்க்ஸ் ..
எங்க அத்தானுக்கு நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும் .. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி " என்று முகத்தை சுழித்தாள்..

அவளை ஒருபுறம் திரும்பிப் பார்த்தவன்
"பிடிச்சிட்டா ரொம்ப சந்தோசம்" என்று
எகத்தாளமாக கூற

" ஹூக்கும்.. இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல " என  அலுத்துக் கொண்டாள் அனு..

இந்த காதலர்கள் பேசும் பாஷை பிரசாந்தைக் கடுப்பேற்ற வேகமாக சென்று வீட்டின் முன்பு காரை நிறுத்தினான்..

அனைவரும் இவர்களை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்..

சாதனா வாசலிலே நின்றுவிட லட்சுமியும் மல்லிகாவும் அவளைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றனர்..

அனுவின் அத்தை கல்யாணி வழக்கம் போல சாதனாவை காயப்படுத்துவதற்கு " என்னம்மா.. சீக்கிரமா வந்தாதான வேலை செய்யமுடியும்.. உங்க அம்மா உள்ள தான் சமைச்சிட்டு இருக்கா.. நீயும் உள்ளபோ " என்று சாதனாவைப் பார்த்து சொல்லிவிட்டு, அனுவிடம்        " மருமகளே என்னம்மா .. இப்படி இழைச்சிட்ட.. வா உனக்காக உங்க அத்தான் நிறைய டவுன்ல இருந்து வாங்கி வெச்சிருக்கான் .. அதெலாம் எடுத்துத் தரேன்" என்று கூறி அவளை மாடிக்கு அழைத்து சென்றார்..

சாதனாவிற்கு இது ஒன்றும் புதிதில்லை.. அதனால் அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..
சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு தனது இல்லத்திற்கு செல்லத் தயாரானாள்.. அப்போது யாரோ தன்னை தவறானப் பார்வையில் உற்றுப் பார்ப்பதை போல உணர்ந்தாள்.. அவளது கை அனிச்சையாக துப்பட்டாவை சரிசெய்தது.. சுற்றியும் தன் கண்களை சுழலவிட்டவள் அந்தப் பார்வைக்கு உரியவனைக் கண்டதும் " பொறுக்கி" என்று வாயில் முனுமுனுத்தாள்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz