ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

9.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு..

விவசாயத்தையும் தாண்டி தொழிற்சாலைகள் கொடிக்கட்டிப் பறக்கத் துவங்கிய காலமது.

புகளூர் .. நகரமயமாகிக் கொண்டிருந்த கிராமம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அப்போது வாசுதேவன் இருபத்தி நான்கு வயது கட்டிளங்காளை..பெரியாரின் தீவிர பக்தன்.
அவனது அடையாளம் என்றாலே கருப்புச் சட்டைதான்.. வாரத்தில் ஆறு நாட்களும் அந்தக் கருப்புச் சட்டைதான். மீதி இருக்கும் ஒரு நாள் மட்டும் அவளவனுக்கு பிடித்த நிறமான அடர்மஞ்சள் நிறச் சட்டையில் அந்தக் கருப்புச் சட்டைக்காரன் காதல்காரனாக மாறிவிடுவான்.. முறுக்கிய மீசையும்..அடர் சுருட்டை கேசமும் அவனுக்கு இன்னும் கம்பீரத்தைச் சேர்த்து கொடுத்தன.. ..

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவன் அந்த ஊரின் மிகப்பெரும் பணக்காரர் மாணிக்கத்தின் தொழிற்சாலையில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மாணிக்கத்தின் மூத்த மகனான சுந்தர் அவருக்கு பிடித்த மருத்துவ துறையினை நோக்கி சென்றிட, தனது உயிர் நண்பனை தனது தந்தையின் அனுமதியோடு அவருக்கு துணையாக பணியில் அமர்த்தினான்.அங்கே வாசுதான்
தொழிற்சங்க தலைவர் பதவியும் வகிக்கிறான்.

 
ஊரில் பாதி பிரச்சனைகளை அவன் தீர்த்துவைக்க, மீதி பிரச்சனைக்கு அவனே காரணமாக இருப்பான்.அவன் காதல் ஜோடிகளுக்கு கடவுள்.. ஆம் ஊரில் காதல் திருமணம் என்றாலோ கலப்புத் திருமணம் என்றாலோ அதில் அவன் தலையீடு இருக்கும். நல்ல ஜோடி என்றால் அதனை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் நடத்தி வைப்பான். சிலசமயம் பெற்றோர்கள் ஜாதி, அந்தஸ்து என எதிர்க்கும் போது தள்ளுமுள்ளு நடத்தியாவாது வெற்றிகரமாக நடத்தி வைப்பான்.தவறான சில ஜோடிகளை பிரித்தும் வைத்திருக்கிறான்.
பெரியாரின் சீடன் ஆதலால் மறுமணம் நடத்தி வைப்பதில் மிகுந்த ஆர்வமுடையவன்.. அவனது இந்த குணத்தால் நட்பையும் பகையையும் ஊர் முழுதுமே சம்பாரித்து வைத்திருந்தான்.
எதிரிகள் அதிகம் இருந்தாலும் யாருக்கும் அவனைத் தொடுவதற்கு தைரியமில்லை..
அந்தளவுக்கு வில்லங்கம் பிடித்த ஆள்..

அவன் இருக்கும் இடத்தில் எப்போதும் வெட்டுக்குத்து என்று ஏதாவதொரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும்.. வாய் பேசும் முன்னே அவன் கை பேசிவிடும். அவனை அடக்குவதற்கு இரண்டே நபர்களால் மட்டுமே முடியும்.
ஒருவர் சுந்தரின் தந்தை மாணிக்கம்.
மற்றொருவர் சுந்தரின் தங்கை பாஹேஸ்வரி. 

மாணிக்கம் மிகவும் நேர்மையான மனிதர்.. அவரைக் கண்டாலே தனது மடித்துக் கட்டிய வேட்டிக் கட்டை அவிழ்த்துவிட்டு கைக்கட்டி நிற்பதுதான் வாசுவின் பழக்கம்.. முதலாளியை காக்காய் பிடிக்க வேண்டி அவன் அவ்வாறு செய்யவில்லை.. அவரது தயவால்தான் எத்தனையோ ஏழை மக்கள் வயிராற சாப்பிடுகிறார்கள் என்றும், ஏழை பணக்காரன் என வேறுபாடு காட்டாது அனைத்து மக்களையும் சமமாக நடத்துபவர் என்றும் அவரைத் தனது வழிகாட்டியாக நினைத்து மரியாதை செலுத்துவான். அவரிடம் பாசம் கலந்த மரியாதை..

மாணிக்கத்திற்குமே வாசுவை மிகவும் பிடிக்கும்.. எந்தளவிற்கு என்றால் தனது மருமகனாக்கி தன்னருகே வைத்துக் கொள்ளும் அளவிற்கு.. அவனின் காதல் விசயம் தெரிந்தும் அதனை அவனே கூறும்வரை கண்டும் காணாது இருக்கிறார்.

அடுத்து அவன் அடங்குவது பாஹேஸ்வரி.. நண்பனின் தங்கை என ஒதுங்கிப் போனவனை துரத்தி துரத்தி காதல் வலையில் சிக்க வைத்தவள்.
மாணிக்கத்தின் செல்ல மகள்.. சுந்தர் கொஞ்சம் சாந்தமானவராக  இருக்க, அவரது தங்கையோ அமைதி என்றால் என்ன என்று கேட்பாள். இலட்சுமி கடாட்சமான முகம்.. ஆனால் அதில் என்றும் கோபம் அமர்ந்திருக்கும்.. கோபம் எந்தளவிற்கு இருக்கிறதோ அதே அளவு பாசமும் அவளிடம் இருக்கும்.. ஆனால் காட்டும் முறையில் கூட சற்று அதட்டல் இருக்கும். அவர்கள் சந்ததியில் பிறந்த முதல் பெண் குழந்தை.. ஆதலால்
அவள் பேச்சை மாணிக்கம் கூட மீற மாட்டார்.
  தனக்கு பிடித்தவர்களை தனது உயிரினை விட பாதுகாக்க நினைப்பாள்.
பள்ளிப் பருவத்தில் இருந்தே வாசுவின் மீது தீராத காதலினை கொண்டு அவனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவள்.

மல்யுத்தத்தில் சிறந்து விளங்கும் வாசுவிற்கே, அவனது பாதுகாப்பு கருதி அவனுக்கே தெரியாமல் இரண்டு பாதுகாவலரை நியமித்தும் இருக்கிறாள்.. வாசுவிற்கு வரும் பாதி எதிர்ப்புகளை முறியடிப்பது அவள்தான். ஆனால் அதுபற்றி அவனுக்குத் தெரியாது.. தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவனை தன் வளையத்துற்குள் பாதுகாப்பாக வைத்திருக்கும் காதல் கண்மணி அவள். தான் சொன்ன சொல்தான் வெற்றியடைய வேண்டும் என்று குறியாக இருப்பவள் விரும்பித் தோற்பது வாசுவிடம் மட்டுமே..

வாசுவும் அவள் தன்மீது கொண்ட காதல் அக்கறை.. அவளது துணிச்சல்.. எதையும் சாதிக்க நினைக்கும் அவளது அறிவாற்றல் என அனைத்தையும் கண்டு வியந்துதான் போவான். அவள் சொன்னாலே அது சரியாகத் தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவான். அந்தளவிற்கு அவள்மேல் நம்பிக்கை.. இருவரில் யார் பெரியவர்கள் என்ற அகந்தை சொல்லுக்கு அர்த்தம் தெரியா காதலர்கள்.
மொத்தத்தில்  இருவரும் ஒருவர்மேர் ஒருவர் அவர்களே  எவ்வளவு என உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு
அளவில்லா காதலினை சுமந்து கொண்டு இருந்தனர்.

அன்று வெள்ளிக்கிழமை.. கருப்புச் சட்டை விடுத்து மஞ்சள் நிறச்சட்டைக்கு தாவி புல்லட்டில் பறந்து கொண்டிருந்தான் வாசு. அவன் செல்லும் வேகமே அவன் பைங்கிளியைத் தேடித்தான் செல்கிறான் என்பதை தெளிவாக உணர்த்தியது.
அவர்கள் வழக்கமாக சந்திக்கும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். என்றும் போல அவனுக்கு முன்னமே அவளும் வந்திருந்தாள். அவர்கள் சந்திப்பு தொடங்கிய இந்த இரண்டு வருடங்களில் அவனும் சீறிக் கொண்டு சீக்கிரம்தான் வருகிறான்.. ஆனால் அவனுக்கு முன் வந்து நிற்கிறாளே இந்த மாயக்காரி  என மனதில் அவளைத் திட்டிக் கொண்டே வந்திறங்கினான்.

அவன் முகத்தைப் பார்த்ததும் அப்படியொரு ஆனந்தம் அவளுக்கு.. அவளது வைரக்கல் மூக்குத்திக்கு ஈடாய் அவள் முகமும் பளிச்சிட்டது.
" என்ன பெரியார் சீடரே.. நேத்துக்கும் பெரிய பஞ்சாயத்துனு கேள்விபட்டேன்.. உங்க கையும் வாயையும் வெச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டியா.. எப்போ பாரு சண்டை.. சண்டைன்னு "

" ம்ச்..வந்ததும் ஆரம்பிச்டயா.. நான் தான் எனக்கு சண்டை போட ஆசையா இருக்குனு எல்லோர்கிட்டயும் போய் வாயக் கொடுக்கற மாறி பேசற.. அவனுங்களா வந்து எங்கிட்டையே சேறுறாங்க..என்ன பண்ண.. பயந்து ஒதுங்கி போக சொல்றீயா.. "

" ஐயோ..இந்த முறுக்கு மீசை அய்யனாருக்கு எங்கிருந்துதான் கோபம் வருதோ "

" அடேங்கப்பா உனக்கு கோபம்னா என்னனே தெரியாது.. ஊரே என்னைப் பார்த்து நடுங்கினாலும் நான் பயப்படறது உன் கோபத்துக்கு தான " என்றதும் அவள் முகத்தில் ஒரு வெட்கச் சிரிப்பு..அதனை இரசனை கொஞ்ச பார்த்து இரசிக்க, அவனை முரைத்து
" சரி பேச்சை மாத்தாத.. என்ன சண்டை நேத்து "

" இந்நேரம் உன் உளவுத் துறைல இருந்து உனக்கு தகவல் வந்திருக்குமே.. எதுக்கு தனியா நான் சொல்லனும் "

" இப்போ நீ சொல்ல மாட்ட"

"யம்மா நெற்றிக்கண்ண தொறக்காத.. நான் நல்ல மூட்ல இருக்கேன். நானே சொல்லிடறேன்.. அந்த தெற்காலத் தெரு இரகுபதி இருக்கானே அவன் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்துட்டான்.. பொண்ணு இன்னும் மேஜர் ஆகல..அதான் ஒரு தட்டு தட்டி அந்தப் பொண்ண வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்.. அதான் அவன் நாலு அடியாள கூட்டிட்டு வந்து ரவுசு வுட்டான்.. நான் என் ஸ்டைல்ல நல்லா  நாளு காட்டு காட்டுனேன்.. "

" உனக்கு இதெல்லாம் தேவையா"
" என்னமா பண்றது.. ஊர்க்காதல்ல ஊட்டி வளர்த்தா தன் காதல் தானா வளரும்னு சொன்னாங்க.அதான்"

" சொன்னாங்க.. சொன்னாங்க நல்லா சொறக்காய்க்கு உப்பில்லைன்னு..ஊருல இருக்கவுங்க கிட்ட உன் வீரத்தை காட்டு.. ஆனா உனைய எங்கப்பாகிட்ட  வந்து பொண்ணு கேட்க சொன்னா மட்டும் பயந்து நடுங்கு.. "

" பாஹீ.. என்னடி பண்றது அவர பார்த்தா எனக்கு பேச்சே வரமாட்டிங்குது. அவரு எனக்கு சாமி மாதிரி.. அவர் பொண்ண நான் விரும்பறன்னு சொன்னா என்ன நினைப்பாரு"

" ஓய் நீயென்ன அவர்கூட பழகுனதுக்கு பொறகா என்னைய விரும்புன.. இல்லைல.. ஏதோ துரோகம் செஞ்ச மாதிரி ப்பீல் பண்ற.. இங்கப்பாரு அவருக்கிட்ட நான் உனைய விரும்பரேன்னு சொன்னா அவரே உனைய நாலு தட்டுதட்டி தாலி கட்ட வெச்சிருவாரு.. ஆனா அதுல எனக்கு என்ன பெருமை.. நீ கெத்தா வந்து மதுரைவீரன் மாதிரி தூக்கிட்டு போயி தாலி கட்டுவன்னு நினைச்சு உன்மேல ஆசை வெச்சா தொடை நடுங்கிப் பயலால இருக்க"

" பாஹீ எனைய ரொம்ப டேமேஜ் பண்ற.எனைய பத்தி தெரிஞ்சும் இந்த மாதிரி பேசறல " என்றவனின் தன்மானம் சீண்டப்பட்டதால் கோபமாகவே பதிலளித்தான்.

" என்ன சொல்லிட்டேனு இப்போ கோபப்படற..நீ"
அவன் அதற்கு பதிலளிக்கவில்லை. கோபமாக வேறுபுறம் திரும்பிக் கொண்டான். அவனை நெருங்கி அமர்ந்தவள் " கருப்புச் சட்டைக்காரனுக்கு கோபம் வந்துடுச்சா..நான் என்ன பண்ணா இந்த கோபம் போகும் "

" எதும் தேவையில்லை போ"

" என்ன வாசு நீ.. எனக்காக சுந்தர் அண்ணா கல்யாணத்துக்கு ஒத்துக்காம இருக்காரு.. நம்ம கல்யாணம் முடிஞ்சாத்தான அவரு பண்ணிப்பாரு.. "

" ம்ம் "

" ஐயா..வாசுதேவரே.. நீங்க சரியான வீரர்தான்.. நான் தெரியாம உங்க தன்மானத்தை சீண்டி விட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோங்க "

" ஹேய்..நமக்குள்ள என்னடி மன்னிப்புலாம்..உம்மேல கோபம் இல்லடி.. நீ சொல்றதும் ஒரு வகைல சரிதான.. ஊருக்குலாம் திமிரா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. ஆனா எனக்குனு வரும்போது பயமா இருக்கேடி.. ஐயா என்னைய தப்பா நினைச்சிட்டா.. அதை என்னால தாங்க முடியாது.. அதான் தயக்கமா இருக்கு.. ஐயா கெட்டவரா இருந்தாக்கூட உனைய தூக்கிட்டு போயிருவேன்.ஆனா ஐயாவும் சுந்தரும் எனைய முழுசா நம்பறாங்க..அதான் "

" முன்னூத்தி பதினேழு "

" என்னடி முன்னுத்தி பதினேழு

" இல்ல..இதே டயலாக்க நீ சொல்றது இதோட முன்னூத்து பதினேழுன்னு சொன்னேன்"

" அப்படியே அடிச்சேன்னு வை" என கையை ஓங்க, கலகலவென்று சிரித்தவள் " நீயி என்னைய அடிக்கப் போற.. போவியா " என்க, " சேட்டை சேட்டை " என செல்லமாக அவளை அடித்தவன் அவள் கைகளை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு
" நீ எப்பவும் இதே மாதிரி சிரிச்ச முகமாவே இருக்கனும் கண்ணம்மா" தங்களது இணைந்த கைகளை பார்த்தவாறே கூறினான்.அவன் குரலில் உள்ள மாற்றம் அவளையும் ஏதோ செய்ய, பாந்தமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டு மென்மையாக" நீ எங்கூட இருக்கவரை என் சிரிப்பு எப்பவும் கூடத்தான் இருக்கும் வாசு.. " என்றவள் கண்கள் மூடிக் கொண்டு அந்த மோன நிலையை இரசிக்க ஆரம்பித்தாள்.

இருவரும் தங்கள் உலகில் சஞ்சரிக்க, தூரத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்டு எழுந்து கொண்டனர்..

" சரிடி.. டைமாயிடுச்சு.நான் வாரேன் "

" எங்கடா..அதுக்குள்ள கிளம்புற.இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாம்ல"

" ஹேய்.. உன்னைய காணோம்னு உங்க ஐயா விசனப்படுவாங்க.. நீ கெளம்பு.. எனக்கும் இன்னொரு ஜோலி இருக்கு "

" சரி சரி கிளம்புறேன்" என திரும்பப் போனவளை கைப்பற்றித் தடுத்து அவள் முகத்தை ஏறிட்டான். சற்று கடுப்புடன்
" எங்கடி உன் பொட்டு.. வெறும் நெத்தியா இருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்ல.. "
தனது நெற்றியை தொட்டு பார்த்தவள் " கல்லு பொட்டு வெச்சுட்டு தான் வந்தேன்.. எங்க விழுந்துச்சுனு தெரிலயே.. " என்றவளின் பார்வை அவன் சட்டையில் விழுக, அவள் சாய்ந்ததின் அடையாளமாய் அங்கே ஒட்டியிருந்தது..

மனதுக்குள் சிரித்துக் கொண்டவள் " ,சரி விடு..நான் வீட்டுக்குப் போய் வெச்சிக்கிறேன் " என்று கூற, அவன் பிடித்திருந்த அவள் கையில் அழுத்தம் கூடியது..
ஆற்றங்கரையோரமாய் வீற்றிருந்த  பொட்டம்மன் கோவிலைக் கண்டவன், அங்கிருந்த குங்குமத்தையும் மஞ்சளையும்
அவள் நெற்றியில் அழகாய் வைத்துவிட்டு " நான் இருக்கும் வரை நீ இப்படித்தான்டி இருக்கனும்..இல்லைனா நான் இருக்கறதும் இல்லாத" அவன் வாயில் விரல் வைத்து தடுத்தவள் " பைத்தியமாடா நீ.. என்ன பேச்சு பேசற.. நீலா பெரியார் பக்தன்னு வெளிய சொல்லாத.. பொட்டு வைக்கலனா இப்படித்தான் பேசுவியா " என அவள் எகிற,

" அதெல்லாம் எனக்குத் தெரியாதுடி.. எனக்கு நீ எப்பவும் மஞ்சள் குங்குமத்தோடு சிரிச்ச முகமாத்தான் இருக்கனும்.. ஒருவேளை நான் செத்தாக்கூட நீ இப்படித்தான் இருக்கனும்..யார் என்ன சொன்னாலும் பொட்டையோ பூவையோ வைக்காம இருக்க கூடாது "

" எனக்கு அந்த நிலைமை எப்பவும் வராதுடா. ஏன்னா இந்த உலகத்துல எப்போ நீ இல்லையோ அப்போ நானும் இருக்கறதுக்கு வாய்ப்பு இல்ல " என்றவளை  அணைத்துக் கொண்டவன் " சாரிடி.. நான் தான் லூசுத்தனமா என்னென்னமோ பேசிட்டேன்.. " என மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்..  அவனது இந்த முதல் அணைப்பில் கரைந்தவள் சுயம் கொண்டு அவனிடமிருந்து பிரிந்து " சரி சரி.. நீ லூசுன்னு தெரிஞ்சுதான உன்னைய காதலிச்சேன்.. அதுக்காக ரொம்ப பீல் பண்ணாத " எனக் கூறி தனது காரினை நோக்கி சென்றவள் ஒரு கவரை அவனிடம் நீட்டினாள்.

அதனை பிரித்துப் பார்க்காமலே வாங்கி " இதோட நூத்தியஞ்சு ஆச்சு நீ இந்தக் கருப்புச் சட்டை வாங்கிக் கொடுத்து.."
என்றான் கேலியாக சிரித்துக் கொண்டு,

" ஹேய்..தப்பா சொல்லாத.. இதோட நூத்தி எட்டு " எனக்கூறி சிரித்துக் கொண்டாள்.

" சிரிக்காதடி.. எல்லோரும் நான் என்னமோ பெரியார் சீடன்னு சொல்லிக்க தான் எப்பவும் கருப்புச் சட்டை போடறேன்னு நினைக்கறாங்க.. எனக்குத் தான தெரியும் நீ வாங்கிக் கொடுக்கற சட்டைய அலமாரில வைக்க இடமில்லமா தினமும் போட்டு போட்டு பழசாக்கி தூக்கிப் போடறேன்னு..
ஏதோ உனக்கு பிடிச்ச ஒரே காரணத்துக்காக ஏதோ இந்த மஞ்ச சட்டைய
போடறதுக்கு பெரிய மனசு பண்ணி சம்மதம் கொடுத்ததால இதை எங்கயாச்சும் நல்ல காரியத்துக்கு போட்டுட்டு போறேன்..உன்னால எங்கம்மா தினமும் எனைய திட்டி தீர்க்குது..
ஏன்டி வாங்கித் தரதும் தான் வாங்கித் தர அந்த நீலக்கலர், சிவப்புக் கலர்னு வேற எதாச்சும் கலர் கலரா வாங்கிக் கொடுக்க கூடாதா "

" கொடுக்கலாம்தான்.. ஆனா அதெல்லாம் இந்த கருப்புச் சட்டை மாறி உனக்கு கெத்தா இல்லையே.. " என்றவள் " நீ அந்தக் கருப்புச் சட்டை போட்டுட்டு  மீசைய முறுக்கி விட்டுட்டு அந்த புல்லட்ல போனா பார்க்க எவ்ளோ அம்சமா இருக்குது தெரியுமா " என அவனை நெட்டி முடித்து "அப்போதான் நம்ம ஊரு பொண்ணுங்க கண்ணெல்லாம் உன்மேல மட்டுந்தான் இருக்கும்.. " என அவன் கன்னம் கிள்ளி செல்லங் கொஞ்சினாள்.

" அடிப்பாவி.. அவளுக எனைய பார்க்கறத இப்படி ரசிச்சு சொல்ற..உனக்கு பொறாமையா இல்லையாடி..கிறுக்கி "

" ஹூம்.. நான் ஏன் பொறாமைப் படனும்.. நீ என்னதான் எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேலி பேசி சிரிச்சாலும் உன் கண்ணு என்னை மட்டுந்தான் தேடும்னு எனக்குத் தெரியாதா வாசு "

தன் மேல் அவள் கொண்டுள்ள நம்பிக்கையினை கண்டு என்றும் போல பெருமை கொண்டவன் காதலோடு அவளைப் பார்த்து வைக்க, அவளும் அதே பார்வையோடு அவனிடமிருந்து விடைபெற்றாள்..  இருவரும் மீண்டும் சந்திக்க அடுத்து வரும் வெள்ளிக்கிழமைக்காக காத்திருக்க வேண்டும் என்பது அவர்களுக்குள் இருக்கும் காதல் ஒப்பந்தம்.

வாசுவை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் வேலையாள் வேலுவிடம் " வேலுண்ணா...
நாகுக்கு டேர்ம் பீஸ் கட்டச் சொன்னனே.. பண்ணிட்டீங்களா " எனக் கேட்க,
பயத்தில் எச்சிலை முழுங்கியவாறே
" இன்னும் இல்லைங்கம்மா.. " எனும்போதே அவரை கை நீட்டி தடுத்தவள்
" வேண்டாம்..எந்த ரீசன்னும் சொல்ல வேணா.. நீங்க மருதுண்ணா கிட்ட இந்த மாச சம்பளத்தை முழுசா வாங்கிட்டு கிளம்பிருங்க..இனி உங்களுக்கு இங்க எந்த வேலையும் இல்ல".

" அம்மா..மன்னிச்சிக்கங்கமா "

அருகில் நின்ற இன்னொரு வீட்டு வேலையாள் மருதுவை நோக்கி " மருதுண்ணா.. " எனக் குரல் கொடுத்ததும் வேலுவை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் மருது.

வீட்டிற்குள் வந்தமர்ந்து கணக்கு வழக்குகளை அவள் பார்க்க ஆரம்பிக்க " ஏன்டி.. பொம்பளப் புள்ளைக்கு பொறுமை அவசியம் டி..பாவம்டி அந்தாளு " என்று பாஹீயை நொடித்தபடியே வந்தமர்ந்தார் மரகதம்.

" அம்மா நீ சும்மா இரு. உனக்கு இதைப்பத்தி ஒன்னுந் தெரியாது"

" என்னடி தெரியாது எனக்கு.. நான் உன்னைய பெத்தவ டி.. அம்மான்னு கொஞ்சமாச்சும் மதிக்குறியா"

" ம்ச்.மா உனைய என்னமா நான் மதிக்கல. எதையும் புரியாமையே பேசு.. நாகு இங்க இருந்தா நல்லா படிக்க முடியாதுன்னு சொல்லி தான பத்தாவதுக்கு ஹாஸ்டல் சேர்த்தி விட்டோம்.. அந்த வேலுக்கிட்ட நாகுவோட ஹாஸ்டல் பீஸையும் டேர்ம் பீசையும் கட்டச் சொல்லி இன்னையோட நாலு நாள் ஆச்சு.அவன் கட்டாததால . அங்கன எந்தம்பி அத்தனை பேர் முன்னாடி தலைகுனிஞ்சு நிப்பான்னு நினைச்சுப் பார்த்தானா அவன். அதான் வேலைய விட்டு தூக்குன.. அதுக்கு இப்போ என்ன"

" அய்யோ..ஒன்னும் இல்லடி ஆத்தா..ஒன்னுமில்ல. உனைய குறை சொல்ல முடியுமா.அதான் உங்கப்பா உனக்கு நல்லா செல்லங் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காரே.. எனக்கு என்ன "

" மா.. எதுக்கு இப்போ சுத்தி வளைச்சு பேசற.. நேரடியா சொல்லு "

" என்னடி சொல்னுங்கற.. அதான் அப்பா, அண்ணா மகள்னு எல்லோரும் அந்த மீசைக்காரன் மகுடிக்கு மயங்கி கிடைக்கிறீங்களே.. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு "

" அம்மா.. அதுக்கு இப்போ என்னம்மா.. எனக்கு அவர பிடிச்சிருக்கு.. அப்பாவே கண்டும் காணாத மாறிதான இருக்காரு..உனக்கு என்ன வந்துச்சு "

"  ச்சே.. நீ என் பொண்ணுதானாடி.. அவன் தகுதி என்ன.. உன் தகுதி என்ன.. நாளைப்பின்ன அவனோட கல்யாணம் ஆயிடுச்சுனா அந்த குடிசை வீட்டலயா நாங்க சம்மந்தக் கலக்க முடியும் ""

" ஆமா..அதிலென்ன சந்தேகம்.. நான் தான அங்க வாழப் போறேன்.. நீயா வாழப்போற..இல்லைல..அப்போ ப்ரீயா விடும்மா "

" ஏன்டி புரிஞ்சுதான் பேசறியா"

" மா..இதோட டாபிக்க சேன்ஞ் பண்ணு.. எனக்கு காது வலிக்குது.. உனக்கு வாசுவ பிடிக்காது.அதான் அவன வேண்டான்ன சொல்றக்கு என்னைய டியூன் பண்ற.. அதானே.. இங்கப்பாருமா.. என் கல்யாணம் எல்லோர் சம்மத்தோட ஊரே மெச்சும்படித்தான் நடக்கப் போகுது.. நானும் நீ சொல்ற அதே குடிசை வீட்ல சந்தோசமாத்தான் வாழப் போறேன்.. அதை நீ பார்க்கத்தான் போற" என்றவள் அங்கிருக்க பிடிக்காமல் ஆலையகத்திற்கு சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் "  அக்கா வாசுதேவர விரும்புதுன்னு தெரிஞ்சதில இருந்து தெனமும் அக்காவ திட்டிட்டே  இருக்க.. அக்கா பாவம்மா.. "

" என்னடி உங்கக்கா உனைய அடம்பிடிச்சு காலேஜ்ல சேர்த்து விட்டான்னு அவளுக்கு சப்போர்ட் பண்றயா.. யார் யார எங்கனு வைக்கனும்னு எனக்குத்தான்டி தெரியும்... "

" போம்மா..சீரியல் வில்லி மாதிரி பேசி காமெடி பண்ணாத.. " என்ற ராஜி என்கிற ராஜேஸ்வரி படிப்பதற்காக நூலகத்திற்கு சென்று விட்டாள்.
மரகதம்தான் வாசுவை எவ்வாறு பாஹீயிடமிருந்து பிரிக்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தார்.

இரண்டு வாரங்கள் சட்டென ஓடிவிட வாசுதேவனுக்கு வந்தது  பிரச்சனை. சுந்தர் தன்னோடு படித்த ரேவதியை திருமணம் செய்து கூட்டி வந்துவிட, மாணிக்கத்திற்கு சுந்தரை விட வாசுவின் மேல் தான் அதிக கோபம் ஏற்பட்டது. ஆனால் அவனுக்கு உண்மையிலே இதில் பங்கு இல்லை.. அதனை சுந்தரே எடுத்துச் சொன்னாலும் நம்பும் நிலையில் இல்லை பாஹீயைத் தவிர.. மகளின் போக்கே பிடிக்காமல் இருந்திருக்க, தனது மூத்த மகன் செய்த காதல் திருமணத்தை அடியோடு வெறுத்தார் மரகதம்..
தன்னால் முடிந்தளவு அவர் காதினில் வாசுவிற்கு எதிராக தூபம் போட, மறுநாளே பாஹீக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார் மாணிக்கம். வாசுதேவன் தன் காதலை நேரடியாக அவரிடம் ஒத்துக் கொண்டும் அவர் சம்மதிக்கவில்லை
மாறாக அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிவிட்டார்.

வாசு அவரை எதிர்த்து செயல்பட முடியாமலும் அதே சமயம் பாஹீயை விட்டுத் தர மனமும் இல்லாமல் இருதலைக் கொள்ளியாய் தவித்துக் கொண்டிருக்க, அதுவரை பொறுத்திருந்த பாஹேஸ்வரி பொங்கி எழுந்தாள். பொருட்களை உடைக்கவில்லை.. கத்தி சத்தம் போடவில்லை..
இருப்பினும் கண்கள் சிவக்க அவள் நின்றிருந்த கோலம் கட்டாயம் காண்பவர்களை கிலி அடையச் செய்யும்.
அவரின் ஒட்டு மொத்த கோபத்தைக் கண்டு மாணிக்கமே ஒரு முறை ஆடிப் போய்விட்டார். அவளை சமாதானம் செய்ய என்ன.. அவளை நெருங்கவே அனைவருக்கும் பயம்.. இரண்டு நாட்கள் கூட கடந்துவிட்டது..அன்னம் ஆகாரம் ஏதுமின்றி சுவற்றில் சாய்ந்தவாறு அசையாமல்  நின்றிருந்தாள்.  கண்கள் சொறுகவில்லை.. அந்தப் பார்வையின் ரௌத்திரம் இன்னும் குறையாமல் பார்த்திருந்தாள். சுந்தர் ஒரு முறை அவளை நெருங்கிட, அவள் தள்ளிய வேகத்தில் வாசற்படியில் போய் விழுந்து மண்டை உடைந்ததுதான் மிச்சம்.

தன் தங்கையை அந்நிலையில் காண சகியாத சுந்தர் வாசுவிடம் மன்னிப்பைக் கேட்டு பாஹீயின் நிலையை சொல்லி அவனை கையோடு அழைத்து வந்துவிட்டான்.

தன்மேல் அவள் கொண்ட அளப்பறியா காதலே அவளது இந்தக் கோபத்திற்கும் நிலைக்கும் காரணம் என்பதை அறிந்து தன்னையே நொந்து கொண்டவன் அவளை நெருங்கி தோள் தொட, அவன் தொடுதலில் உயிர்பெற்று அவன்மேலயே மயங்கி விழுந்தாள்.. இரண்டு நாள் அன்ன ஆகாரமின்றி இருந்ததால் பசியால் மயங்கி விழுந்திருக்கிறாள் என்பதை கேட்டதுமே துடித்துப் போனவன் அதுவரை தகவல் சொல்லாது இருந்த சுந்தரைக் கடிந்துவிட்டு
பூஜை அறையில் உள்ள மஞ்சள் கயிற்றினை அவள் கழுத்தில் கட்டி தனது மனையாளாக்கி, அவளை உரிமையாக  கையில் தாங்கி தூக்கிச் சென்றான் அவன் இல்லத்திற்கு..
அவனைத் தடுக்கும் தைரியம் அங்கே யாருக்குமில்லை.. எப்படியோ பாஹீயின் மதுரை வீரன் அவள் ஆசையை நிறைவேற்றிவிட்டான் அவள் மேல் கொண்ட காதலால்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz