ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

10.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

மருத்துவரின் சிகிச்சையினால் இரண்டு மணி நேரங்கள் கழித்து கண் திறந்த பாஹீ மயக்கம் தெளிந்து சுற்றுப்புறம் நோக்கினாள்.

அவள் படுத்திருந்த அறையில் மாட்டியிருக்கும் வாசுவின் புகைப்படமே தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்த்திவிட, தன் கழுத்தில் கடந்த மஞ்சள் கயிறு மீதியினை எடுத்துக் கூறியது.

அவளுக்கு தேவையானவற்றை பருவதம் விழுந்தடித்து செய்து கொண்டிருந்தார்.  ஊருக்கே திருமணம் செய்து வைக்கும் மகன் என்றாவது அவனுக்குமே அப்படி திடீரென்று செய்து கொண்டு தான் வரப்போகிறான் என்பதை என்றோ யூகித்துத்தான் வைத்திருந்தார். அதனால் அவருக்கு பெரியதாக வாசுவின் திருமணம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதுவும் அவருக்கு மாடிவீட்டு மகாராணி மருமகளாய் வந்ததால் உற்சாகம் தாங்கவில்லை.. அக்கம்பக்கத்தினர் வாசுவின் திருமண செய்தி கேள்விப்பட்டு வாசலை எட்டிப் பார்த்தால் போதும் தன் மருமகளின் பெருமைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்..

" எக்கோவ்..நம்ம மாணிக்கமய்யா பொண்ணைய வாசு இழுத்துட்டு வந்துட்டான் " என்று ஒரு பெண்மணி கேட்டதும்தான் தாமதம்

" வோய்..வாயக் கழுவுடி.. என்ற மகன் ஐயா முன்னாடியே அவர் பொண்ண கல்யாணம் பண்ணி முறையா தான் கூட்டிட்டு வந்தான்..

என் மருமக மட்டும் என்னவாம்..கட்டுனா என் பையனத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சிருக்கா.. "

" அன்னைக்கு வாசுலா நான் சொல்ற பொண்ணத்தான் கட்டிப்பானு பீத்திக்கிட்டு திருஞ்ச.. இப்போ மாத்தி பேசற"

" அது அது... அது வந்து ஆமாடி மாத்திதான் பேசறேன்.. என்ற மருமக அழகப் பார்த்தீல.. எம்புட்டு அழகு.. அவ ஒத்த புருவ அழகுக்கு ஈடாவாளுங்களா நம்பூரு பொண்ணுக.. அதென்ன படம்.. ரசினி நடிச்சப் படம்..பாம்பக் கூட கைல புடிச்சு முத்தக் கொடுப்பாவல்ல"

" ஆமா.. படையப்பா "

" ஹான்..அதே யப்பால அவருக்கு சோடியா நடிச்சப்புள்ள இருக்குல்ல ..""

" யாரு சவுந்தர்யாவ.. "

" அதே புள்ள மாதிரி..அம்புட்டு இலட்சனமா இருக்கா. என்ற மருமக ..அது போதாதா எனக்கு " 

" ஹூம்.. ஏக்கா.. நம்ம வாசுக்கு மட்டும் என்னக்கா குறைச்சலு.. அதே ரசி" என்னும் போதே பாஹிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்த வாசு

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு, இந்தப் பேச்சு முடியாது என்பதை தெரிந்து

" யம்மா.. அங்க என்னமா வெட்டி நாயம். உம்மருமக அழக சீராட்டி பாராட்னது போதும்.. அவ எழுந்துட்டானா இதை புழிஞ்சுக் கொடு " என முரைத்துக் கொண்டே கையில் கொடுக்க அதனை வாங்கி சிலுப்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

பாஹீ கண் விழித்ததிலிருந்து இரண்டு நாளாக  அவன் அவளோடு பேசவில்லை.

மயக்கத்தில் இருந்து மீண்ட அவள், இன்னும்

அடிக்கடி மயங்கி கீழே  மண் தரையில் விழுந்து வாரி எழுவதால் அவனுக்கே அவன்மேல் தீராத கோபம்.. அதனை முட்டாள்தனமாக பார்ப்பவர்களிடம் எல்லாம் காட்டிக் கொண்டிருந்தான்.

கை கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தவனிடம் பழச்சாறை நீட்டி

" இந்தா வாசு.. இதைக் குடி "

" "

" இப்போ நீ குடிக்கப் போறியா இல்லையா"

" "

" ஓ..சார் எங்கிட்ட பேச மாட்டிங்கல்ல..அதை நான் மறந்தே போயிட்டேனே.. சரி பேச தான மாட்ட.. இந்த ஜூஸக் குடிக்கலாம்ல.. " என்றவள் சற்று எம்பி அவன் இரண்டு கன்னத்தையும் தன் ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்து அவன் திமிரத் திமிர வாயில் ஊற்றி விட்டாள்..

அவளை முறைத்துப் பார்த்தவன் " எப்படியோ நீ நினைச்சத சாதிச்சட்டங்கற குஷில சுத்துட்டு இருக்க" என்க,

" டெபனட்லி.. டெபனட்லி.. "

" "

" ,ஓய்..நான் என்னமோ உன்னைய வம்படியா தாலி கட்டி கடத்திட்டு வந்தமாறில சீன் போட்டுட்டு மூஞ்சிய தூக்கி வெச்சி்ட்டு இருக்க..நீதானடா தங்கம் என் கழுத்துல தாலி கட்டி கையி"

" போதும் நிறுத்துடி.. அதென்னமோ உலக அதிசயம் மாதிரி எத்தனை தடவதான்

சொல்லிக் காமிப்ப..

உனைய அந்த நிலைல பார்த்ததும் என் மனசு பட்ட பாடு எனக்குதானடி தெரியும்..அங்கன பைத்தியக்காரி மாதிரில்லடி நின்னுட்டு இருந்த.. நிஜமா தெரியாமத்தான் கேட்கறேன்.. உனக்கு எதுக்கடி அத்தனைக் கோபம்.. பெரிய சண்டிராணின்னு நினைப்போ "

"  "

" ,இதைக் கேட்டா மட்டும் அமுக்கினி மாதிரி வாயவே தொறக்காத.. உனக்கென்னடி நீ பாட்டுக்கு மாமியார சேவகம் செய்ய வெச்சிகிட்டு ஜம்முனு படுத்துக்கிட்டு கொட்டம் அடிக்கற.. நேத்து டாக்டர் சொன்னத கேட்டதுல இருந்து எனக்குல்லடி நெஞ்சே அடைக்குற மாதிரி இருக்கு "

" என்ன சொன்னாங்க "

"  "

" சொல்லப் போறியா இல்லையா "

" "

" நீ சொல்ல மாட்ட"

" என்னடி சொல்ல சொல்ற, நீ இதே மாதிரி நாலு தடவை நடந்திக்கிட்டேனே முழு பைத்தியமாவே ஆகிடுவியாம். உனைய அந்த நிலைல பார்க்குற தைரியம் சத்தியமா எனக்கு இல்லடி.. தயவுசெஞ்சு கோபப் படாதடி..அது நம்ம குடும்பத்தையே அழிச்சிரும்.நான் உங்கோட சந்தோசமா வாழனும்னு நிறையா கனவு கண்டு வெச்சிருக்கேன்.. அதை அழிச்சிடாதடி"

" வாசு..நீ இப்படிலா அழுதா நான் என்னடா பண்றது..அப்பா உனைய பத்தி தெரிஞ்சும் தப்பா பேசுனா என்னால தாங்க முடியுமா.. நான் அப்பவே உன்கூட வந்துருப்பேன்.  ஆனா அது என் வாசுக்கு பெருமையா இருக்காதுன்னு பொறுமையாதான்டா இருந்தேன்.. ஆனா எனக்கு எப்படி அவ்ளோ கோபம் வந்துச்சுனு எனக்கே தெரிலடா. என் வாசு தலைகுனிஞ்சு போனத என்னால சத்தியமா தாங்க முடில..அதான் என்னைய மீறி அப்படி நடந்துகிட்டேன். நீ அதுக்காக இப்படி அழுவாதடா. இனிமே நான் கோபப்பட மாட்டேன்.. பொறுமையாவே இருப்பேன்.. சத்தியம்.. போதுமா.. என்னை நம்புற தான.."

"என்னடி உன்னை நம்பாம இருப்பனா.. ஆனாலும் கோபத்த குறைச்சுக்கோடி.. "

" ஐயோ..தெரியாம கோபப்பட்டுட்டு உங்கிட்ட நான் தெனமும் வாங்கிக் கட்டிக்கனும் போல.. "

" வோய் என்னடி லந்தா"

" ச்சேச்சா.. உனைய கலாய்க்க முடியுமா.. ஆனா உனைய பாராட்டியே ஆகனும்டா..நல்லவேளை எங்க நீ எங்கப்பாக்கு பயந்து எங்கிருந்தாலும் வாழ்கன்னு சோக கீதம் பாடிட்டு எனைய தள்ளி விட்ருவியோன்னு நினைச்சேன்.. "

"சரி சரி..ஆவுன்னா முரைக்க ஆரம்பிச்சிட்ரியே ராசா"

"

" சரி சரி வாங்கிட்டு வந்த பழத்தைலாம் மறக்காம சாப்பிடு.. எனக்கு வெளிய வேலை இருக்கு "

" என்ன வேலை "

" என்ன வேலைன்னு வந்து சொல்றேன்"

" வாசு.. எங்கப்பா உனைய வேலைக்கு வரவேணானு சொல்லிட்டாராம்மா "

" விடுடி.. அந்த வேலை இல்லைன்னா என்னால பொழைக்க முடியாதா.. நெஞ்சுல தைரியமிருக்கு..உடம்பில தெம்பிருக்கு.. பத்தாததுக்கு நீ எங்கூட இருக்க.. இது போதாதா.. ரெண்டெடத்துல வேலைக்கு சொல்லி வெச்சிருக்கேன்.. ஒத்து வந்தா போறேன்..இல்லனா சொந்தமா தொழில் தொடங்குனா கடக்குது.. "

" ம்ம் "

" என்னாலதான உனக்கு இந்தநிலைமை "

" ஏன்டி மாளிகைல இருக்க வேண்டிய நீயே இந்த ஓட்டு வூட்டல எனக்காக கஷ்டப்படும் போது எனக்குலா இதெல்லாம் பெரிய விசயமே இல்ல "

" ம்ம்ம்.. எல்லாம்.. எங்கண்ணன்னால தான.. பிள்ளைப்பூச்சியாட்டம் இருந்துட்டு என்ன வேலை பார்த்துருக்கான் பாரு.. "

"ஏய் அவன் என் நண்பன்.. அதை நியாபகம் வெச்சுக்கோ..அதான் தாய் தகப்பன் இல்லாத அந்தப் பொண்ண தனியா விட முடியாமதான்  அந்தப் பொண்ணு படிப்பு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டானு சொல்றான்ல.. அதுவும் டாக்டரு தானா..பொறவு என்ன..உங்க குடும்பத்துக்கு பெருமைன்னு ஏத்துக்க வேண்டியது தான.. எதுக்கு ஐயா திடீர்னு மாறுனார்னே தெரில.. ம்ச்.. உங்கம்மா கிட்ட அந்தப்புள்ள என்ன பாடு படப்போகுதோ.

உங்கண்ணன்தான் அப்பிராணினா..

அந்தப்புள்ள ரேவதி அவன விட அமைதியால இருக்கு.. அவளுக்கு ஒன்னுன்னா நாமதான் முன்னாடி நிக்கோனும் பார்த்துக்க.. "

" எப்பா வாசு.. யார் வந்துருக்கானு பாரு "

வெளியே பருவதம் சத்தம் போட்டார். அங்கே

சுந்தரும் ரேவதியும் வந்திருந்தனர்.

" மாப்ள என்னாலதானடா உனக்கு இந்த நிலமை "

" ஹேய்..பரவாலடா.. நீ தங்கச்சிய கூட்டிட்டு உள்ளார வா .. அவள ஏம்மா பார்க்குற.. அட வாம்மா.. பாஹீ..கூப்டு "

" வாண்ணே.. வாங்க மதினி "

ரேவதிக்கு பாஹீயை கண்டதுமே உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது. அவர்களது முதல் சந்திப்பு அந்தமாறி.. பாஹீயின் கோபமும் கணவனின் காயமும் அதற்கு காரணம்.

அனைவரும் அமர்ந்ததும் " என்னடா சொல்றாரு..ஐயா"

" என்னத்த சொல்றாரு.. பொண்ணுதான் வீட்டை விட்டு போயிடுச்சு..அடுத்து நானும் போயிட்டனா குடும்பம் மானம் என்னத்துக்கு ஆகும்னு வேண்டா வெறுப்பா எங்கள ஏத்துக்கிட்டாரு.. "

" என்னதான் அவர் பிடிவாதமா இருந்தாலும்

பொண்ணை பெத்தவங்க என்கிற வகையில பார்த்தா நாங்க பண்ணது தப்புதான்டா.. ஒரு அண்ணன உனக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்.. நிஜமா இவ மட்டும் அந்த நிலைல இல்லைனா எங்க கல்யாணம் அப்படி நடந்துருக்காதுடா "

" டேய் உனைய பத்தி எனக்கு தெரியாதாடா.. சரி விடு.. நான் அதைப் பத்தி பேச வரல..நான் வந்தது ஒரு முக்கியமான விசயத்தைப் பத்தி.. "

" என்னடா"

" அதுவந்து அப்பா உம்மேல கம்பெனி பணத்தை மோசடி பண்ணிட்டேனு போலிஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிட்டாருடா" என்றதும் பாஹீ அதிர்ந்து விட்டாள்.. அவள் திரும்பவும் கோபம் அடையக் கூடாது என்பதை நினைவு கொண்ட வாசு அவளை தன்னருகே அமரவைத்துக் கொண்டு " அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்டா..இன்ஸ் நம்மாளு தான்.. " என்று கூறிக் கொண்டே சுந்தரிடம் பேச வேண்டாம் என சைகை காட்டினான்.

அவனும் புரிந்து கொண்டு " அதெல்லாம் பொய்யுன்னு நான் எழுதிக் கொடுத்துட்டு தான் வந்தேன்.. அதுல நானும் ராஜியும் கையெழுத்து போட்டுட்டோம்.. நம்ப பாஹீயும் சைன் பண்ணிட்டானா அது பூர்விக சொத்துனால அவரால ஒன்னும் பண்ண முடியாது.. இந்தாமா சைன் பண்ணு " பேப்பரை நீட்டினான்.

பாஹீயும் அமைதியாக அதனை வாங்கி கையெழுத்திட்டு கொடுத்தாள்.  சிறிதுநேரம் பேசி விட்டு அவர்கள் புறப்படும் சமயம் அவனே எழுந்து சென்று பூ, பழம், குங்குமம்,புடவை, வேட்டி சட்டை கொண்ட தாம்பூலத்தட்டை

கொண்டு வந்து ரேவதியிடம் கொடுக்கச் சொல்லி பாஹீயிடம் கொடுத்தான்.

பாஹீயும் சிரித்த முகமாகவே " என்னை மன்னிச்சிடுங்க மதினி.. கோபத்துல அண்ணாவ தள்ளி வுட்டட்டேன் " என தட்டை கொடுத்தாள்.

" தங்கச்சிமா.. என் பொண்டாட்டி பார்க்கதான் வில்லி மாதிரி தெரிவா..பழகிப் பார்த்தாதான் அவ குழந்தைன்னு தெரியும் ..தைரியமா வாங்கிக்கோங்க.. " என தன் மனைவிக்கு பரிந்து பேச, அவளோ அவனது பொண்டாட்டி என்ற அழைப்பில் உருகிப் போய் நின்றிருந்தாள்.

அவர்கள் சென்றதும்

" அதென்ன அவுங்களுக்கெலாம் புதுத்துணி எடுத்துருக்க.. எனக்கு மட்டும் உங்கம்மாவோட கட்டாத புடவைய தந்துருக்க, சரியான ஓரவஞ்சனைக்காரன்டா நீ"

அவன் பரண்மேல் வைத்திருந்த மூன்று அட்டைப் பெட்டிகளை தூக்க முடியாமல் தூக்கி வந்து கீழே வைத்தான்.

" என்ன இது "

" பிரிச்சு பாரேன் "

" வாசு..என்னடா.. இத்தனை புடவை.. எதாச்சும் துணிக்கடை ஆரம்பிக்க போறியா .. சரி சரி மொறைக்காத.. இதெல்லாம் எனக்காகத்தான் வாங்கிருக்கனு தெரியுது.. "

" தெரிஞ்சாச்சரி "

" ஏன்டா இத்தனை வாங்கி வெச்சிருக்கியே.. ஒன்னாச்சும் எனக்கு முன்னயே கொடுத்தியா.. "

" புடவையெல்லாம் பொண்டாட்டின்னு உரிமை முழுசா வந்தப்புறம் தான்   தரணும்னு தான் தரல.. நீ மட்டும் எனக்கு எடுத்துத்தரும் போது நான் எம்பொண்டாட்டியா வரப் போறவளுக்கு வாங்கித் தரனும்னு நினைக்க மாட்டேனா...

ஆனா அது என்னமோ  இதெல்லாம் பாஹேஸ்வரி வாசுதேவ மூர்த்தியா நீ வந்த பிறகுதான் கொடுக்கனும்னு எடுத்து வெச்சேன் "

" ம்ம்..பரவாலடா.. எல்லாமே சூப்பரா இருக்கு.. எனக்கு எதைக் கட்டறதுன்னே தெரில.."  என ஆசையாக ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இருக்கும் இந்தப் புன்னகை என்றும் மாறாதிருக்கும்படி என்றும் நான் பார்த்துக் கொள்வேன் என கணவனாக மனதில் உறுதி கொண்டவன் தனக்கான புதிய வேலையை தேடிக் கொள்ள வெளியே சென்றான்.

நாட்கள் அதன்பாட்டிற்கு சென்றது.. பாஹீயும் வாசுவும் மனமொத்த தம்பதியினராய் தங்கள் வாழ்வை தொடங்கியிருந்தனர். வாசு அருகிலுள்ள நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்தான். பாஹீ ஊரில் இருக்கும் பெண்களைத் திரட்டி சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தையும் சிறக்க செய்து கொண்டிருந்தாள். மாறாது இருந்தது மாணிக்கத்தின் கோபம் மட்டுமே..அது தனியாத வகையில் மரகதம் பார்த்துக் கொண்டார். ரேவதியை எவ்வளவு கொடுமை படுத்த முடியுமோ அத்தனையையும் செய்தார். ரேவதிக்கு துணையாக சுந்தரும் ராஜியும் இருந்தும் அவர்களாலும் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது.. விசயம் பாஹீக்கு தெரிய தனது தாயை கோவிலில் சந்தித்து மிரட்டி விட்ட பின்னரே அடங்கிப் போனார். அதுவும் ரேவதி கறுவுற்றது தெரிந்ததும் குடும்பத்திற்கு வாரிசு வரும் சந்தோசத்தில் மருமகளை நன்றாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார். நாளாக நாளாக அவருக்கும் பாஹீயைப் பார்க்கும் ஆவல் கூடியது.. என்ன இருந்தாலும் பெற்றவள் அல்லவா..

ரேவதியின் வளைகாப்பிற்கு தன் மகளை குடும்பத்தோடு வரவேண்டும் என்றழைக்க, வாசுவும் பாஹீயும் சற்று தயங்கினாலும் சுந்தர் ரேவதிக்காக சென்று வந்தனர். மாணிக்கம் கூட அவர்கள் வரவை எதிர்க்கவில்லை. பாஹீயும் விசாகன் பிறந்ததிலிருந்து அடிக்கடி அவனைப் பார்ப்பதற்காகவே வந்து போவாள். வாசு இன்னும் அங்கே செல்ல சற்று தயங்க,  சுந்தர் தன் மகனை வாசுவின் இல்லத்திற்கே தூக்கிச் செல்வான். அவர்கள் நட்பு இருவரது குடும்பத்திலும் உள்ள பகையை முறியடிக்க உதவியது.

சந்தோசத்தின் உச்சமாக பாஹியும் கருவுற, மாணிக்கம் கூட மகளை வாசுவின் இல்லம் வந்து பார்த்து சென்றார்.

வாசு இன்னும் அவர் முன்னே அமரவோ பேசவோ தயங்கி அவரை எப்போதும் போல மரியாதையாகத் தான் நடத்தினான்..ஆனால் அவர் மனதில் என்ன நினைத்தாரோ அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

பருவதமும் வாசுவும் பாஹீயை உள்ளங்கையில் வைத்து தாங்கு தாங்கென தாங்கினர். பாஹீக்கு எந்நேரமும் தனது கணவனை

, அவன் இல்லாத நேரத்தில் அவனது புகைப்படத்தை என பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேலையே.. யாரை அதிகமாக நினைக்கிறோமோ அவர்கள் சாயலில் தான் குழந்தைப் பிறக்கும் என ஒரு மூதாட்டி சொல்லிவிட, தன் குழந்தை தன்னவனைப் போலவே இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் அவனை மனதில் நிறைத்துக் கொண்டது போதாதென கண்களிலும் நிறைத்துக் கொண்டாள்.

திருமணத்தைத்தான் நாங்கள் நடத்தி வைக்கவில்லை..

சீமந்தம் நடத்துவதற்காவது எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என மாணிக்கமும்

மரகதமும் வந்து கேட்க, தன்னவளின் முகத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்டே அவனும் சம்மதித்தான்.

ஊரே மெச்சும்படி சீமந்தம் நடத்தி பாஹீயை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். வாசுவிற்கு அவளை அனுப்ப மனதே வரவில்லை.. இருப்பினும் பெண்களுக்கு இந்த சமயத்தில் தாய் வீட்டில் இருப்பதே சந்தோசம் தரும் என்பதை அறிந்தவன் அரை மனதோடு அனுப்பி வைத்தாள்.. தனக்காக பெற்றவர்களை விட்டு வந்தவளுக்கு இதைக் கூட செய்யாமல் அவர்களை பிரித்து வைப்பதில் நியாயம் இல்லை என நினைத்துக் கொண்டான்.

பாஹீயும் கிளம்பி வந்துவிட்டாளே தவிர, அவள் நினைவெல்லாம் வாசுவே நிறைந்திருந்தான். அவன் வந்து கூட்டி சென்று விட மாட்டானா என வாசலையே பார்த்துக் கொண்டிருப்பாள். இவனும் அங்கே செல்லலாமா வேண்டாமா என தனக்குள் ஒரு பட்டிமன்றமே வைத்துக் கொண்டு கடைசியில் மனைவியைப் பார்த்தே விட வேண்டும் என்கிற முடிவையே எடுப்பான்.

அவர்கள் வீட்டில் தங்கா விடினும் தன் மனைவியின் முகத்தில் தான் இல்லாவிட்டால் தெரியும் களைப்பைப் பார்த்து காலையும் மாலையும் அவளை வந்து பார்த்து பேசி விட்டே செல்வான்.

விசாகனை எந்நேரமும் ராஜியே வைத்திருப்பாள்.. அவனைக் கொஞ்சும் நேரம் நட்பாகவே அவளுடன் பேசிச் செல்வான். ராஜிக்குமே வாசுவை மிகவும் பிடிக்கும். தனது கல்லூரியில் வாசு தன் அக்காவின் கணவன் என சொல்லிக் கொள்வதினை பெருமையாக நினைத்தாள்.

நாட்கள் நகர, உதயதேவனைப் பெற்றெடுத்தாள் பாஹீ.. கண்கள் தாடை என அனைத்துமே வாசுவை அச்சில் வார்த்தது போல இருக்க பாஹீயை கையில் பிடிக்க முடியவில்லை. அவனை எந்நேரமும் கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பாள். வாசுவிற்கு மட்டும் என்னவாம் தன் மகன் சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகி தன் முன்னே தன்னைப் போல வந்து நின்று தன்னோடு தர்க்கம் புரிய வேண்டும் என பல கனவுகளை கண்டு நாட்களை இரசித்தவண்ணம் நகர்த்திக் கொண்டிருந்தான்..

பையன் பிறந்து ஐந்து மாதத்தில் அனுப்பி வைப்பார்கள் என அவன்  நினைத்துக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் அவர்களை அனுப்பவில்லை.. மனம் கேளாதவன் பாஹீயிடம் சற்று கடிந்து கொள்ள, அவளும் அதே மனநிலையில் இருந்தாள்..

மாணிக்கமோ நான் இருப்பது இன்னும் ஆறு மாதமோ ஒரு வருடமோ அதுவரை என் பேரன்களோடும் தான் பெற்ற மக்களோடும் இறுதிக் காலத்தை செலுத்த விரும்புகிறேன் என கேட்டுக் கொள்ள வயோதிகத்தால் உடல் மெலிந்து வாடி இருந்த தன் தந்தையிடம் மறுப்பைத் தெரிவிக்க பாஹீயால் முடியவில்லை.என்ன இருந்தாலும் தன்னை பெற்று வளர்த்தவர் இல்லையா.. பருவதம் கூட இன்னும் சில வருடங்கள் தானே என என் தன் மகனை வீட்டோட மாப்பிள்ளையாக்க நினைத்துவிட்டார். ஆனால் வாசுவினால் அப்படி இருக்க முடியுமா.. அது அவனது தன்மான பிரச்சனை அல்லவா.. பாஹீயைக் காதலித்து திருமணம் செய்ததே சொத்துக்காகத் தான் என பல பேர் காதுபட பேசுவதை அவனே கேட்டிருக்கிறான்..ஆனால் தற்போது அது உண்மை என்பது போல் அல்லவா ஆகிவிடும்..
அவன் மறுக்க,

பாஹீக்கு தனது தந்தையின் கடைசி  ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என தோன்றியதால் வாசுவை கெஞ்சிக் கொஞ்சி குழந்தையை காரணம் காட்டி எப்படியோ சம்மதிக்க வைத்து விட்டாள். அவன் சம்மதிக்காமல் இருந்திருநதால் இந்நேரம் அவர்கள் சந்தோசமாக இருந்திருப்பார்களோ என்னவோ..

அவன் அங்கிருந்தாலும் இரவுநேரம் மட்டுமே வந்து சேர்வான். பாஹியும் அவன் நிலையை புரிந்து ஒன்றும் சொல்ல மாட்டாள்.  வருடங்கள் ஓடத்துவங்கியது.. மாணிக்கம் சென்ற பாடுமில்லை..எழுந்து நடந்தபாடுமில்லை..

வாசு உதயனுக்கு மட்டுமில்லை.. விசாகனுக்குமே ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்ய, அங்கே இருவருக்குமே வாசுவிடம் அதிக உரிமை யாருக்கு என்று உரிமைப் போராட்டம் அரங்கேறும்.. அந்த சமயம் அவர்கள் இருவரையும் தன் புல்லட்டில் வைத்துக் கொண்டு ஊரையே வலம் வந்தால் மட்டுமே அவர்கள் சண்டை முற்றுப்பெறும்.. பாஹிக்கு கூட சில சமயம் அவர்கள் போட்டியைப் பார்த்து கோபம் வந்துவிடும்.. ஆனால் வாசு அவர்களை என்றுமே பிரித்துப் பார்த்ததில்லை.. இவர்கள் இருவருமே வருங்காலத்தில் தன்னையும் சுந்தரையும் போல ஒற்றுமையான  நண்பர்களாக வலம் வருவார்கள் என நம்பிக்கையாக இருந்தார்.

தெளிந்த நீரோடை போன்று சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் கல்லெறிந்து சென்றது யார்?. இனி நடக்கப் போகும் துயரத்திற்கு யார் காரணம் என்பதை அடுத்த பதிவில் கண்டபின் நிகழ்காலத்திற்குள் சென்று விடலாம்.

அடுத்த பதிவில் கடந்தகாலம் முடிந்துவிடும் மக்களே.. தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz