என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
31.என்னை மறந்தாயோ கண்ணம்மா
வயது பாதியாய் குறைந்தது போன்று இருந்தது பாஹீக்கு..
தங்களது குழந்தைகளின் திருமணத் தேதியே குறித்து விட்ட போதிலும் இளம்காதல் ஜோடிகளைப் போல, அவளுக்குப் பிடித்த புல்லட்டில் தன் மன்னவனோடு, நீண்ட நாட்கள் கழித்து பயணிக்கும் போது, உண்மையிலும் வயது குறைந்து தோற்றம் மறைந்து சுற்றுப்புறம் துறந்து வானில் பறப்பதைப் போலத்தான் இருந்தது மங்கையவளுக்கு..
இங்கே வயதும் அறிவும் கூட விடுமுறைக்கு சென்றுவிட்டன போலும் அவர்களது மகிழ்வினைப் பார்த்து..
இங்கே வயதா முக்கியம்.. இவர்களது
காதலின் வயதுதான் கூட குறையாது அப்படியே இருக்கிறதே சிறிதும் தேய்மானமின்றி..
கோடி மதிப்புக் கொண்ட குளுகுளு மகிழுந்தும் அவன் தோள்பற்றி அமர்ந்து கொண்டு தன்னவனின் மனையாள் என்ற பெருமையை ஊரறியச் செய்ய வைக்கும் இந்த புல்லட்டிற்கு ஈடாகிடுமா என்ன? செல்லும் பாதை இன்னும் நீளாதோ எனும் ரீதியில் பயணித்துக் கொண்டிருந்தனர் அவ்விருவரும்..
அவன் மட்டும் என்னவாம்..தேடிப் பிடித்து வாங்கி வந்தான் தன்னவளுக்கு பிடித்த புல்லட்டை..
அவனுக்கும் பிடிக்கும்தான்..ஆனால் வண்டியைப் பார்த்தாலே தன் காதல் கண்மணியின் நியாபகம் வந்துவிட, புல்லட்டிலிருந்து ஜீப்பிற்குத் தாவி இருந்தான் அந்த வண்டிக் காரன்..
அவர்கள் பிரிவுக்கு முன் கடைசியாக, பாஹீயின் மடியில் விச்சுவையும் வாசுவின் முன்னே உதயாவையும் வைத்து ஊரை வலம் வந்ததுதான் அவர்கள் பயணித்தது..
நல்லவேளை அன்றுபோல் இன்றும் அடம்பிடிக்க அந்த வால்கள் இல்லை..
அந்தக் குதூகலத்தில் தான் சந்தோசமாக கண்ணிற்கு கருப்புக் கண்ணாடியோடு பறந்து கொண்டிருந்தான் வாசு அவனது பச்சைக் கிளியோடு..
ஈஸ்வரியம்மாவின் கணவர் விபத்தில் தப்பித்து இத்தனை வருடங்கள் கழித்து வந்து சேர்ந்துவிட்டார் என்று பத்திரிக்கை ஊடகங்களில் தெரிவித்திருந்தனர் வாசு பாஹீயின் புகைப்படத்தோடு..
உதயனை அச்சில் வார்த்தாற்போல் இருக்கும் வாசுதான் பாஹீயின் கணவர் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மறுக்கவில்லை.. அதுவும் ஈஸ்வரியின் ஒழுக்கத்தை குறை சொல்லும் தீய உள்ளம் யாருக்கும் இருந்ததில்லை..அது அவர்களது தொழில் எதிரிகளுக்கு கூடவும்தான்..
வழியில் எதிர்பட்ட அனைவரும் அவர்களைக் கையெடுத்து கும்பிட்டு விடைபெற்றனர்.. பணம் யாரிடம் வேண்டும் என்றாலும் இருக்கும்..ஆனால் அதனை அடுத்தவருக்குக் கொடுத்து உதவும் குணம் சிலருக்குத் தான் உண்டு..
அவ்வகையில் பாஹீ அங்கிருப்போருக்கு தாயிற்குச் சமமானவர்..
இன்று அவரை அந்த வெண்ணிற ஆடையை விடுத்து கணவருடன் ஜோடியாக செல்லும் கண்கொள்ளா காட்சியைக் காண்போருக்கு, உள்ளம் நிறைந்து தான் போனது..
அவளை நினைத்து பெருமைப் பட்டாலும்
" ஓய் என்னடி.. விட்டா உன்னை சாமியாக்கிருவாங்க போல.. ஆனாலும் இந்த ஆங்கார ஆங்கிரி பேர்ட்டுக்கு இவ்ளோ சீன் தேவையா"
வண்டியை ஓட்டிக் கொண்டே விளையாட்டாய் கேட்டான் அவன்..
பின்னிருந்து அவன் தலையைத் தட்டியவள் " நான் செஞ்ச நல்லது எல்லாம் நீ என்கிட்ட இப்படிலாம் செய்யனும்னு ஆசைப்பட்டதுதான்..பசியிலிருக்கவங்க வயிற நிரப்பிட்டுதான் நாம சாப்பிடனும்னு சொல்லுவல்ல.. அதுக்கான ஒருபடி தான் இதெல்லாம்..
அவுங்க பாராட்டுக்கெலாம் உரிமையானவன் நீதான் வாசு..அப்போ நான் சாமின்னா .இப்போ நீயும் சாமிதான் "
பேச கத்துக் கொடுக்க வேண்டுமா அவளுக்கு..எதிர்வாதம் செய்து அவன் வாயடைத்தாள்..
அவள் பேசப் பேச அவள் என் மனைவி என்ற கர்வத்தோடு மீசையை முறுக்கி விட்டு கண்ணாடியில் அவள் முகம் பார்த்துக் கண்ணடிக்க, அவனை பார்த்திருந்த அவன் மனையாளும்
' கிழவனுக்கு லொள்ளப் பாரு ' என முரைத்து திரும்பிக் கொண்டாலும் அவள் உதடுகள் சிரித்துக் கொண்டுதான் இருந்தன..
எங்கு செல்கிறோம் என்ற அவளது கேள்விக்கு 'பசங்க வெளியே சென்றிருப்பதைப் போல் நாமும் எங்கையும் வெளியே சென்று ஞாயிறை சிறக்கச் செய்யலாம்' என்று பதிலளித்தவன் புகழ்ப்பெற்ற உணவகத்திற்கு அழைத்துவர, அங்கே அவர்களுக்கு முன்னே ஒரு கூட்டமே இவர்களை பார்த்திருந்தது நிச்சயமாக விதியின் சதியே தவிர, வாசுவின் செயலல்ல..
வாசுவும் பாஹீயும் உள்ளே வர, அவர்களைக் கண்டு எழுந்து நின்ற ரோகிணியையும் உத்ராவையும் கண்டுகொள்ளாது அவர்களுக்கு எதிர்ப்புறம் இருந்த மேசையில் அமர்ந்தனர்..
விசாகனும் உதயனும் தாங்கள் தப்பித்தோம் என நினைத்ததோடு தங்கள் அருகே எழுந்து நின்றிருந்த அவர்கள் துணையினையும் கேலிப் புன்னகையோடு கைப்பிடித்து அமரச் செய்தனர்..
" என்னடா நடக்குது இங்க "
உதயன் ஆச்சரியமாக கேட்க,
" இப்போ தான் எங்க அத்தையும்
மாமாவும் நடந்து போனாங்க"
சண்முகனின் மொக்கைக்கு அவனைத் தவிர அனைவருமே முரைத்தனர்..
எப்படி இருந்தும் வாசு பாஹீ இவர்களை பார்ப்பது உறுதி..அதற்கு முன் தாங்களாகவே அவர்களிடம் சென்று விடலாம் என தீர்மானித்து திட்டத்துடன் அருகில் சென்றனர்..
வாசு இவர்களை கேள்வி கேட்கப் போவார் என்று பார்த்தால் அவரைச் சுற்றி வளைத்தனர் இந்த சில்லுவண்டுகள்..
" எத்தனை நாளா நடக்குது இந்த திருட்டுத் தனம் சூப்பர்மேன்"
" இது தான் நீங்க காலைல சொன்ன அதி முக்கியமான வேலையா அப்பா"
" ஹஹஹா..எங்க கிட்ட சரண்டர் ஆயிடுங்க அய்யனாரே.. இல்லைன்னா அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமாயிருக்கும்.. "
நம்பியார் ரகுவரன் பிரகாஸ்ராஜ் அளவிற்கு தங்களை நினைத்துக் கொண்டு கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு டயலாக் அடித்துக் கொண்டிருந்தனர் விசாகன் உதயன் சண்முகம் க்ரூப்ஸ்..
இவர்களை பாவமென நினைத்து தொந்தரவு செய்யக் கூடாது என பாஹீயை தனியே அழைத்து வந்திருந்த வாசு தன் சொந்த காசிலே சூனியம் வைத்துக் கொண்டான்.. இவன் என்னமோ பருவ வயது காதலன் தன் காதலியை யாருக்கும் தெரியாது அழைத்து வந்தது போலவும் இந்தத் தடியன்கள் என்னவோ பெண்ணின் தந்தை தமையன்கள் போலவும் அல்லவா நடந்து கொள்கிறார்கள்..
இவர்களை அடக்க இவனது ஒரு பார்வை போதும் தான்.. ஆனால் அதனைச் செய்யவில்லை வாசு..
அதான் தன்னருகே அமர்ந்திருக்கும் பாஹீ எதற்கிருக்கிறாள்..
கோவிலுக்குச் சென்ற மகளும் சின்ன மருமகளும், அலுவலக வேலைக்குச் சென்ற மகன் மருமகனோடு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வியாக பாஹீயும் அவர்களை ஏற இறங்கப் பார்க்க, தலை குனிந்து கொண்டது இளைஞர் அணி..
" விசுக் கண்ணா "
அவரது ஒற்றை அழைப்பில் விசாகன் அவர் அருகே வந்து நிற்க, அவனைக் கைப்பிடித்து அருகே அமரவைத்தவர் ஆதரவாய் அவன் தலையை தடவி விட்டு " என்னடா மறுபடியும் எதும் சதித் திட்டம் தீட்ட போறீங்களா" என்க,
ரோகிணியும் உதயனும் இல்லையென்று வேகமாய் ஆட்ட, உத்ராவும் சண்முகனும் ஆமென்று ஆட்டி காட்டிக் கொடுத்து விட்டனர்..
அவர்கள் செய்கையில் தன் பொய்க் கோபத்தை விடுத்து சிரித்தவர்
"முதல்ல இவங்க கூட சேரத நிறுத்துனாவே உருப்பட்ருவடா படவா..உன் சேர்க்கை தான் சரியில்ல" என்றதும் விச்சு அதனை ஆம் என்பது போல தலையாட்ட, மற்றவர்கள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாலும் உண்மை அதுதானே..
"இன்னுமாடா உன்னால என்னை சம்மதிக்க வைக்க முடியல" என்றதும்
தற்போது அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,
" எதுவும் இருக்கிற இடத்துல இருந்தாத்தான் கண்ணா எல்லாத்துக்கும் மதிப்பு..காலம் அப்படியே நிக்கப் போறது இல்ல..
இன்னும் பத்து பதினைஞ்சு வருசத்துல நிக்க கூட முடியாம நாங்க கஷ்டப்படும்போது நீங்க தான் வந்து பார்த்துக்க போறீங்க.. இப்போ எங்கப் பாடு எங்க கைல இருக்கும்போது நாங்க நாங்களாவே இருந்துட்டு போறாம்டா கண்ணா.. நாங்க பிரிஞ்சு போறதால உங்க மேல எந்தப் பாசமும் இல்லைன்னு ஆகாதே.. எங்க நினைப்பு எப்போவும் உங்களைச் சுத்தித் தான் இருக்கும்.. நீயும் உன் பிசினஸ பார்த்துக்கனும்..உன்னை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்குனு உனக்கேத் தெரியும்..அதே மாறி நானும் மனைவியா என் வாசுவுக்கு எதுவுமே பண்ணதுல்ல..இனியாச்சும் அவருக்கு பிடிச்ச உலகத்துல நானும் இருக்கனும்னு நினைக்கறேன்..நான் சொல்றது எதும் தப்பா தெரியுதா"
அவன் விளையாட்டாய் இருந்திருந்தால் நிச்சயம் ஆமாவென்றோ இல்லையென்றோ தலையை ஆட்டியிருப்பான்..ஆனால் அவர் சொன்ன சொல்லில் உள்ள உண்மை அவனை ஊமை ஆக்கியது..
அனைவரும் சோகமாகிப் போக, வாசு
" டேய் என்னங்கடா முகத்தை இப்படி வெச்சிருக்கிங்க.. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்.. கல்யாண மாப்பிள்ளைன்னா வேலை செய்யக் கூடாதுன்னு ஒன்னும் இல்ல..பத்து நாளுக்கு முன்னாடியே புகளூருக்கு போகனும்.. அதுக்கான வேலைய ஆரம்பிங்க " பேச்சை மாற்ற முயற்சித்தான் அவன்..
" சரி வந்ததும்தான் வந்தீங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் வாங்க.. "
என்ன சொல்லியும் அவர்கள் அசைய மறுக்க
" பாஹீ இவனுங் " என்று ஆரம்பிக்கும்போதே பாஹீயின் பெயரைக் கேட்டதும் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்..
ரோகிணி விசுவின் தோளில் யாருக்கும் தெரியாது இடிக்க, அவன் என்னவென்று வினவினான்..
" என்னங்க நீங்க இப்படி சைலன்ட் ஆகிட்டிங்க.. அப்பாவ எப்படியாச்சும் சம்மதிக்க வைங்க..ப்ளீஷ் " எனக் கெஞ்ச, ' ...அங்க அத்தை என்னை ரவுண்ட் கட்டி பேசும்போது அமைதியா இருந்துட்டு இப்பவந்து ப்ளீஸ்ங்க போடறாளே.. இவள ' என பல்லைக் கடிக்க, " ப்ளீஷ்ங்க " என மீண்டும் கெஞ்சுபவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது..
நான் பார்த்துக் கொள்கிறேன் என கண்ணசைக்க, அவன் கூறியதும் இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் நிம்மதியுடன் சாப்பிட ஆரம்பித்தாள்..
எதனையும் தந்தையிடம் உரிமையுடன் கேட்டுப் பெருபவள் அவனிடம் கணவன் என்கிற முறையில் விரும்பிக் கேட்டதே இதனைத் தான்..
அவள் கண்ணசைத்தாலே அவள் நினைத்ததை நடத்திக் காட்டுபவன் அவள் கெஞ்சிக் கேட்டதனை இலேசில் விட்டு விடுவானா என்ன?
சாப்பிட்டு விட்டு, தனித்தனி ஜோடியாக வந்தவர்கள் ஒரே குடும்பமாய் வீட்டிற்கு புறப்பட்டனர்..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இன்னும் இரண்டு நாளில் திருமணத்திற்காக புகளூர் செல்ல வேண்டும் என்றிருக்க, பிறைநிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் நின்றிருந்தான் விசாகன்..
அதிராது நடந்துவரும் கொலுசின் ஸ்சுவரத்தை வைத்தே வருவது ரோகிணி எனத் தெரிந்து கொள்ள கைப்பிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டான் அவன்..
அவனின் மௌனம் அவளை ஏதோ செய்தது..
" அப்பா அம்மாவ மிஸ் பண்ணுறீங்களா "
அவன் தலை மெதுவாக அசைந்தது..ஆயிரம் உறவுகள் இருந்தும் மனம் தாயையும் தந்தையையும் தேடத்தானே செய்யும்..
" எனக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி உங்கப்பாவ பார்த்த பின்னாடி தான் என் சிறு வயசு ஞாபகம் வந்தது ரோகிணி.. என்னோட அப்பா அம்மாவோட நினைவுகள் அதுக்கு பிறகுதான் எல்லாமே ஞாபகம் வந்திச்சு.. பேசாம அந்த நினைவுகள் எனக்கு திரும்பாமலே இருந்திருக்கலாம்..இப்போதான் அவுங்கள என் மனசு அதிகமா தேடுது.. "
அவன் ரோகிணி என அழைக்கும்போதே அவனது மனநிலைத் தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு.
" இப்போ அங்க மறுபடியும் அவங்க வாழ்ந்த இடத்துக்கு போறத நினைக்கும்போது" அவன் குரல் தழுதழுத்தது..
அவனை இந்த நிலையில் அவள் கண்டதே இல்லை..
" கல்யாணத்தை பேசாம இங்கையே வெச்சுக்கலாமாங்க.. நான் தான என் அம்மா வாழ்ந்த இடத்துல நடக்கனும்னு ஆசைப்பட்டேன்.. அதான் என்னை பெத்தவங்க உயிரோடதான இருக்காங்க..இனி அதுக்கு அவசியமே இல்லையே.. அவங்களுக்கு அவுங்க பையன் போதும்னு நம்மள கண்டுக்காம போயிட்டாங்களே..பின்ன எதுக்கு "
அவள் குரலிலே ராஜியின் மீதுள்ள வெறுப்பு தெரிந்தது..
அவள் பேச்சின் குறுக்கே தடுத்தவன்
" ரொம்ப தப்பு ரோகிணி.. ராஜிய நீ புரிஞ்சிக்கல.. எனக்குத் தெரியும் அவுங்க உம்மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தாங்கனு..அவுங்க உன் நல்லதுக்காக மட்டுந்தான் உன்னை விட்டு போனாங்க.. "
" அன்னைக்கு உனக்கு கலங்கம் ஏற்படக் கூடாதுன்னு பிரிஞ்சாங்க..இன்னைக்கு சூப்பர்மேனோட மனசு காயப்பட்டுருமேன்னு உன்னை விட்டுக் கொடுத்துட்டாங்க..புாியுதா "
" புரியுதுங்க..ஆனாலும் கல்யாணம் "
" இன்னும் எத்தனை நாள்தான் உண்மையக் கண்டு பயந்துட்டு இருக்கறதுடா.. நாம அங்க போய்தான ஆகனும்..அங்க பாஹீ அத்தையும் சூப்பர்மேனும் பட்ட அவமானத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கனும்ல.. "
" ஆனா நீங்க சோக"
" அம்மா சீதா தேவி..மனுசன் எந்நேரமும் சந்தோசமாவே இருக்க முடியுமா..ஏதோ அங்க போகப் போறோம்ங்கற எண்ணத்துல பழச நினைச்சு பார்த்துட்டு இருந்தேன்..அது குத்தமா"
அவன் அதிர்ந்து பேசியதும்
அவள் கண்ணில் கண்ணீர் பொங்கி வர, ஐயோவென ஆகிப் போனது அவனுக்கு..ஆனால் அவனது மிரட்டலில் அழுகவில்லை அவள்.. அவனது சோகமுகத்தை நினைத்துத் தான் கண்கள் கலங்கியது அவளுக்கு..
அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்
" ஏன்டா சும்மாதான்டா பேசுனேன்..அதுக்கு அழுகலாமா" என்க
அவளும் சமாதானமாக நிமிர்ந்து அமர்ந்து தன்னையே கரிசனமாய் பார்த்திருக்கும் அவனைப் பார்த்து புன்னகைத்தவள் அவனது தலையை தன் மடிமீது வைத்துக் கொண்டாள்.
இடது கை அவன் தலை கோத, வலக்கையால் அவன் தோளினைத் தட்டிக் கொடுத்து " நீங்க எப்போலாம் உங்கப்பா அம்மாவ மிஸ் பண்றீங்களோ அப்போலாம் இந்த மாதிரி என்மடில படுத்துக்கணும் புரியுதா" என்றவள் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்..
இனி தாயும் தந்தையுமாக நானிருப்பேன் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாள் அவள்..
இனி எல்லாமே இவள்தான் என்பதை அவன் மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறாள் விசாகனின் இதயராணி..
அவன் முகம் காணவே நாணிக் கொண்டிருந்த பேதையவள் அவனின் சோகம் தாங்காது தானாகவே அவள் மடியைக் கொடுத்திருக்கிறாள்.. இதற்கு பெயர் காதலா..தாய்மையா..என பேதம் பார்க்க தெரியவில்லை அவனுக்கு..
அவன் தலை கோதும் வெண்பிஞ்சு விரல்களில் தன் விரல்களையும் சேர்த்துக் கொண்டவன் நித்திராதேவியிடம் சரணடைய, அவர்களை பிரிக்கும் நோக்கோடு வானத்திலிருந்து மின்னி விழுந்தது சிறு முத்துமழை..
" ஐயயோ சீக்கிரம் எந்திரிங்க..நான் மட்டும் மழைல நனைஞ்சது அப்பாவுக்கு தெரிஞ்சா வம்பாப் போயிடும்..சீக்கிரம் எழுந்திரிங்க" அவன் முதுகில் பலத்த அடிகளை கொடுக்க, அவன் அசைவேணா என்றிருந்தான்..
அவள் சும்மா சொல்லியிருந்தாவது எழுந்திருப்பான் அவன்..அப்பா என்று சொல்லி அவனை அடம்பிடிக்க செய்து விட்டாள் இந்த வாசுவின் புத்திரி..
மழைவேறு வெளுத்து வாங்க துவங்கியது..
" ஏங்க எந்திரிங்க"
" மழைச்சாரல் வீசறப்ப, உம்மடியில படுத்திருக்க சுகமே சுகம் ஏஞ்சல் "
அவள் நெழிவதையும் பொருட்படுத்தாது வேண்டும் என்றே காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான்..ரோகிணிக்குத் தான் ஏன்டா இவனை அருகில் விட்டோம் என்றிருந்தது.. கீழே வாசு பாப்பா என்றழைக்கும் சத்தம் வேற கேட்க, தலையடித்துக் கொள்ளாத குறைதான்..
தன் தந்தை இந்த நிலையில் தன்னைப் பார்த்தால் என்ன நினைப்பாரா என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.. அவனோ அவள்படும் அவஸ்தையைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தான்..
வாசுவின் குரல் அவர்களது பின்னே மிக அருகாமையில் கேட்கவும் கடவுளிடம் மன்னிப்பைக் கேட்டவள் அவனை உருட்டிவிட்டு, வாசுவின் முகத்தையும் பாராது மின்னலாய் மறைந்துவிட்டாள்..
மாடியில் தேங்கிய மழைத்தண்ணீரில் மீண்டும் மொத்தமாய் நனைந்தவன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க, வாசு ஏளனமாக சிரித்து வைத்தான்..
" என்னடா காதல் மன்னா என்ன ஆச்சு"
" ஹான் இடுப்பு உடஞ்சு போச்சு..* என்றவன் " நாங்க காதல் பண்ணோம்..அதை நீங்க பார்த்தீங்க"
என்றான்..
மெல்ல சிரித்துக் கொண்டான் வாசு
அதில் சற்றுக் கடுப்பானவன்
" புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்துட்டு எங்கள கலட்டி விட்டீங்கள்ள" என்று அவன் அவர்கள் மீதுள்ள பழைய கோபத்தினைப் பற்றிப்பேச,
" டேய் மறுபடியும் ஆரம்பிக்காத..உனக்குத் தான் இன்னும் கல்யாணம் முடியற வரைக்கும் சான்ஸ் இருக்கே" என்றவர் அவன் தோளினை ஆதரவாக தட்டிவிட, அவன் மூளையும் சரியாக வேலை செய்தது..அவன் என்ன செய்யப் போறானோ..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விசாகன் ரோகிணி
உதயன் உத்ரா
இரண்டு ஜோடிகளின் திருமண வேலையும் மும்மரமாக நடக்க ஆரம்பித்தது..
விசாகனுக்கும் உத்ராவிற்கும் சிந்தாமணியும் நாகராஜனுமே தாய் தந்தையாக அனைத்தையும் முன்னின்று நடத்தினர்..
மரகதம் கூட தங்கள் குடும்ப நகைகளை பேத்திகளுக்குப் போட்டு அழகு பார்த்தார்..
திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கையிலே அனைவரும் புகளூர் வந்திறங்க, அந்த ஊர்மக்கள் இவர்களுக்கு கொடுத்த வரவேற்பைக் கண்டு அனைவரும் அதிசயித்துத் தான் போயினர்..
மாணிக்கம் ஐயாவின் வாரிசுகளுக்கு கிடைத்த மரியாதையை விட, அங்கே வாசுவிற்கு கிடைத்த மரியாதைதான் அதிகம்..
எத்தனை காதல் இவனால் வாழ்ந்திருக்கிறது..எத்தனை மறுமணங்கள் நிகழ்ந்து மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது..
அவனைத் தங்கத் தட்டில் வைத்து தாங்காத குறைதான் அனைவரும்..
அவர்கள் வாழ்ந்த மாளிகையை வேலையாட்கள் சுத்தம் செய்து வைத்திருந்தாலும் அங்கே கடைசியாய் நடந்த நெஞ்சம் உருக்கும் நிகழ்வுகள் நிழலாட நெகிழ்ந்துதான் போயினர் பெரியவர்கள்..
இருந்தும் வீட்டில் கல்யாணக் கலை வந்து ஒட்டிக் கொள்ள, சோகம் மறந்து புத்துணர்வாகினர்..
பருவதம் தனது அண்டை அயலாரைக் கண்ட சந்தோசத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.. சொந்த மண்ணின் சுதந்திர வாசத்திற்கு ஈடு இணைதான் ஏது..
வாசுவை ஊர்மக்கள் அவர்கள் பிள்ளைகளோடு வந்து பார்த்து சென்றனர்..
அவனின் சாகசத்தை பெருமையாக எடுத்துக் கூறிச் சென்றனர்..அவன் செய்த தர்மம்தான் அவன் தலையைக் காத்து மனைவி மக்களோடு சேர்த்து வைத்ததோ என்னவோ..
அடுத்த மூன்று நாளில் ராஜி குடும்பத்தாரும் வந்துவிட அங்கே சந்தோசத்திற்கு குறைவேது..
ராஜி பட்ட அவமானங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்றே..
கணவன் மகனோடு கைக்கோர்த்து கம்பீரமாய் வந்திறங்கினாள்..
தன் மகளின் திருமணத்தை சித்தியாய் இருந்து சிறப்பிக்க வந்திருக்கிறாள்..
தீரன் சண்முகன் நதியாவோடு எளிதாக இணைந்து கொள்ள, அங்கே ஒரு நட்பு வட்டம் உருவானது..
ஒற்றைப் பிள்ளையாய் தனித்து வளர்ந்தவனுக்கு இந்தக் கூட்டுக் குடும்பத்தினை பார்க்க பிரமிப்பாகத் தான் இருந்தது..
அம்மாச்சி..பெரியப்பா பெரியம்மா அத்தை மாமா அக்கா அண்ணன் மாமன் மகள் மாமன் மகன் என வீடே சுற்றத்தால் நிறைந்திருக்க, அதில் தானும் ஒருவனாய் ஆனதில் பரம சந்தோசம் அவனுக்கு..
தேவாவைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.. இளைய மருமகனாக கெத்துக் காட்டிக் கொண்டிருந்தான்..அவன்தான் பெரியவர்கள் அணியில் சேராமல் இளைஞர் அணியில் சேர்ந்து கொண்டல்லவா கொட்டமடிக்கிறான்..
இயல்பாகவே உதயனுக்கும் அவனுக்கும் இடையே உருவான புரிதல் அவனது வயதையும் குறைத்து வாலிபனாக்கி இருந்தது..
ராஜியின் மனதும் சற்று பக்குவப்பட்டிருக்க, தன் தாயையும் தம்பியையும் மன்னித்து ஏற்றுக் கொண்டாள்..அதற்காக கொஞ்சியும் உறவாடவில்லை.. முகத்தையும் வேண்டாவெறுப்பாய் காட்டவில்லை.. சின்ன புன்னகை மட்டுந்தான்.. அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது..காலம் அனைத்தையும் மாற்றும் என நம்புவோம்..
குடும்பமாக சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைத்துவிட்டும் வந்தனர்..கல்யாண ஜவுளியும் நகைகளும் வீட்டிற்கே வந்துவிட, மணமக்களின் காதல் பார்வைகளோடு, மூத்த ஜோடிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் இணைகளுக்கு பொருத்தமானவற்றை சிறியவர்களின் கேலியையும் பொருட்படுத்தாது தேர்வு செய்ய, அங்கே
சின்னச் சின்ன கலாட்டாக்களும் கேலியும் கிண்டலும் என வீடே அல்லோகோலப்பட்டது.. அவர்கள் அழுதது போதும் என கடவுள் நினைத்து விட்டார் போலும்.. எங்கேயும் புன்னகை முகங்களாவே காட்சியளித்தது..
வாசுவும் பாஹீயும் அவர்களது வாழ்ந்த பழைய ஓட்டு வீட்டை பார்க்கச் சென்றிருக்க, அது பாஹீயின் கட்டளையால் புத்தம் புதியது போலவே காட்சியளித்தது.. மலரும் நினைவுகளில் நனைந்தவர்கள் அவர்களது ஆத்தோர மரத்தடியையும் சந்திக்க மறக்கவில்லை.. நாகரீகத்தால் அனைத்தும் மாறியிருந்தாலும் அவர்களது காதல் வாசனை அங்கே இன்னமும் வீசிக் கொண்டிருப்பதைப் போலத்தான் தோன்றியது இருவருக்கும்..
நின்னை சரணடைந்தேன்,
கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்..
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..
நின்னை சரணடைந்தேன்..
கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்..
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன,
கொன்று அவை போக்கினதன்
செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்..
துன்பம் இனி இல்லை,
சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம்
நாமறியோம்!
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக!
தீமையை ஓட்டுக!
நின்னை சரணடைந்தேன்,
கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பெரியாரின் சீடனவன் பாரதியின் மொழி பேசினான் தன் கண்ணம்மாவிடம்...
அவன் குரலினது வன்மை கூட
அவனது காதலினால்
இனிமையாய் ஒலித்தது அவளுக்கு..பாரதி கூட தன் கண்ணம்மாவிடம் இதே காதலோடுதான் உரைத்திருப்பானோ என்னவோ!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அனைவரும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்து சேர்ந்தது...பெரியவர்கள் கொஞ்சம் பதற்றமாய் சுற்றித் திரிய, இளைஞர்கள் தங்கள் கவலைகளை மறந்து காதல்பாடிக் கொண்டிருந்தினர்..
மருத்துவர் இரஞ்சித்தும் தனது காதலி ஜனனியுடன் வந்திறங்கினான்..
ஒருபுறம் உறவினர்கள் தொழில்அதிபர்கள், தொழிலாளர்கள், ஆசிரமத்தில் உள்ளோர் என வருகை புரிந்து கொண்டிருக்க, மறுபுறம் விருந்து தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது..
விருந்தினர் அனைவருக்கும் மரக்கன்றுகளும் பரிசளிக்கப்பட்டது..
இரவு இரண்டு ஜோடிகளுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து ஆட்டம் பாட்டம் என மண்டபமே கலைக்கட்டியது..
பிரம்ம முகூர்த்தத்தில் , விசாகன் ரோகிணி திருமணம் பெரியவர்கள் ஆசியோடு இனிதாக நடைபெற்றது..
விசுவும் ரோகிணியின் கழுத்தில் மங்கல நாணிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.
கன்னிகாதானம் செய்ய வாசுவையும் பாஹீயையும் அழைக்க, அவன் ரோகிணியின் கைப்பிடித்து விசாகனிடம் கொடுக்கும்போது வாசுவின் முகத்திலும் கண்ணீர்த் துளி.. நேற்றுதான்
ரோகிணியை பிறந்த புத்தம்புது சிசுவாய் தன் கையில் ஏந்தியது போல இருக்க, இன்று அவளை மணமகளாய் தாரைவார்த்துக் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாளே என வியந்தவன் கைகளிலும் சிறுநடக்கம்..பாஹீ கூறிய ஆறுதல் மொழிகளும் அவன் காதில் விழவில்லை... அவன் நடுக்கம் கண்டு ரோகிணியும் இதுவரை இழுத்துப் பிடித்திருந்த கண்ணீரை வெளியே விட்டபடி " அப்பா " என்றழைத்தவள் வாசுவின் நெஞ்சில் தலைவைத்து இறுக்கக் கட்டிக் கொண்டாள்.. இன்றோடு அவள் செல்வி.ரோகிணி வாசுதேவனிலிலுந்து திருமதி.ரோகிணி விசாகனாய் மாறிவிட்டாள் என்று யார் அவர்களுக்கு புரிய வைப்பது..
அவள் பிறந்ததிலிருந்து தன் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டவர் அல்லவா அவன் தந்தை..
அன்னையாய் தந்தையாய் ஆசானாய் தோழனாய் சகோதரனாய் யாதுமாய் நின்ற தாயுமானவனல்லவா அவர்..
இந்த அப்பா மகளின் பாசத்தைக் கண்ட மண்டபத்தில் உள்ளோர் அனைவருக்கும் கண்கள் கலங்கியது..
அய்யர் நல்லநேரம் முடியப் போகிறது என அறிவுறுத்த, தன் மகளை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன் விசானிடம் சேர்ப்பிக்க,அவனோ " ஹலோ மாமனாரே..பயப்படாதீங்க இனி ரோகிணி என் பொண்டாட்டி..அவள பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு" என்று வாசுவிற்கு நம்பிக்கை அளித்தவன் அவளைத் தன்னோடு அணைத்துக்
கொண்டான்..
அடுத்து பருவதத்திடம் ஆசிர்வாதம் வாங்கவர அவர்களை ஆசிர்வதித்து நெற்றி முறித்தவர் தனது கணவர் தனக்களித்திருந்த தங்க வளையல்களை அணிவித்து அழகுபார்த்தார்.. ஆயிரம் இருந்தும் வளர்த்த பாசம் விட்டுப் போகாது அல்லவா.. மரகதமும் தன் பேரன் பேத்திகளை மனதாற ஆசிர்வதித்தார்..
நாகராஜனும் சிந்தாமணியும் விசாகன் ரோகிணியை வாஞ்சையாய் பார்த்தவர்கள் " எங்கண்ணே அண்ணி இருந்தா ரொம்ப சந்தோசப்பட்டு இருந்திருப்பாங்க.. அவுங்களோட ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் " என்று ஆசிர்வதித்தனர்..
தேவாவும் ராஜீயும் அங்கே நடப்பதை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர்.. பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள் இறுதியாக இவர்களை நோக்கி வர இருதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தனர் இருவருமே.. தங்கள் மகள் தங்களை நோக்கி வருவதை விழி விரித்து பார்த்திருந்தவர்கள் திருமண ஜோடி காலில் விழுந்ததும் அவர்களை ஆசித்து விட்டு ரோகிணியை ஆசைதீர ஒருமுறை கட்டி அணைத்துக் கொண்டனர்.. அவர்களது இந்தப் பிறப்புக் காரணம் பூர்த்தியடைந்து விட்டதைப் போல உணர்ந்தனர்..
தீரனும் விசாகனுக்கு மச்சினன் மோதிரம் போட்டுவிட்டு தன் உடன்பிறவா தமக்கையை கட்டிக் கொண்டான்..
அடுத்து உதயா கண்ணீர் பொங்க நின்றிருக்க, ரோகிணி அவளது அண்ணன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க குனிய அவளை தாங்கிப் பிடித்தவன் விசாகனையும் தோளில் சாய்த்துக் கொண்டு " பாப்பா என் நண்பன் போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வெச்சிருக்கனும்.. பத்திரமா பார்த்துக்க" என்றான்..
அவன் தங்கைக்காக விசாகனிடம் அறிவுரை கூற விரும்பவில்லை.. தன் நண்பன் எப்பேர்பட்டவன் என்பதை கூட இருந்து அறிந்தவன் அல்லவா அவன்..
உத்ராவும் தன் தோழியை அணைத்து வாழ்த்தியவள் விசாகனிடம் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தாள்..
சண்முகனும் தன் தாய் தந்தையரோடு வந்து வாழ்த்தினான்..தன்னை எவ்வளவு ஜாலியாக காட்டிக் கொண்டாலும் கடைசியில் அவனும் இனி தன் ஸ்டாரின் பிரிவை நினைத்து அழுதுவிட்டான்..
சுபமாக விசாகன் ரோகிணி திருமணம் முடிவுற, அதே நாள் அடுத்த முகூர்த்த நேரத்தில் உதயன் உத்ரா திருமணம் நடந்தேறியது..
உத்ராவின் பெற்றோராக நாகராஜனும் சிந்தாமணியும் முன்னின்று நடத்தி வைத்தனர்..
உத்ரா ரோகிணியைப் போல் அழுகவில்லை.. தனிமரமாய் நின்றவள் ஒரு நந்தவனத்திற்குள் வந்து சேர்வதை நினைத்து எதற்கு அழுக வேண்டும்.. சிரிக்கத் தானே வேண்டும் அவள்..
சண்முகன் உத்ராவிற்காக தனது சம்பாத்தியத்தில் உதயனுக்கு மச்சினன் மோதிரத்தினை பரிசளிக்க, உத்ராவின் கண்ணிலும் சிறுதுளி..புகுந்த வீட்டு உறவாய் அனைவரும் இருக்க, பிறந்தவீடாய் அவளுக்கென ஒரு உறவு.. தனக்கிருந்த சிறுகுறையும் பறந்து போனதைப் போல உணர்ந்தாள் அவள்..
நல்லபடியாக இரு திருமணங்களும் நடந்தேறியது..
அடடே கல்யாண பிசில திருமணத்திற்கு வந்து சிறப்பித்த உங்கள வரவேற்ற மறந்துட்டனே.. இஇஇ சாரி..
வாசல்ல தீரன் நதியா சண்முகம் பன்னீர் தெளித்து வரவுங்கள வரவேத்துட்டு இருக்காங்க.. வாசல்ல ரெண்டு பக்கமும் வாசு பாஹீயும் தேவா ராஜியும் நின்னுட்டு வந்தவங்கள வணங்கி கூறி உள்ள அனுப்பிட்டு இருக்காங்க..
மரகதமும் பிம்பிள் கிழவியும் இன்னும் இரண்டு மூனு வயசான அவுங்கள மாறியே இருக்க பாட்டிங்களோட மொக்க போட்டுட்டு இருக்காங்க..ம்ம்..
சரி இவங்கள பாத்துட்டு மேடைக்கு போனாோம்னா..அடடே ரெண்டு மேடையும் காலியா இருக்கே..ரெண்டு ஜோடியும் சாப்பிட்டுட்டு இருக்காங்களாம்..வாங்க அங்கயே போய் அவுங்களையும் பார்த்துட்டு வயிறார சாப்பிட்டு வந்தர்லாம்..
என்னடா இது டைனிங் ஹால்க்கு போற வழில இரண்டு கேட்..ஒரு கேட்ல மொய் வாங்கறாங்க..நீங்க கொண்டு வந்த அனைத்து துட்டையும் பஸ்ஸூக்கு போக மிச்சத்த மொய்யா வெச்சிட்டு.. இன்னொரு கேட்ல நீங்க வாங்கி வந்த கிப்டையும் கொடுக்கறதாமா..யாரும் கிப்ட் வாங்கலைனா நோ ப்ராப்ளம்.. நீங்க கைல போட்ருக்க மோதிரம்..ப்ரேஸ்லெட்..அட அது இல்லைன்னாலும் கழுத்துல போட்ருக்க செயின கூட கழட்டித் தரலாமாம்..ஆதர்க்கு என்ன ஒரு பறந்த உள்ளம்..
அப்டியே சாப்பிட உள்ள போனா அங்க நமக்கு முன்னாடி நம்ம குரூப்ல சிலர் சீப் கெஸ்ட்னு கெத்தா சாப்பிட்டு இருக்காங்க..அப்போ நாம யாராம்.. விசாரிச்சா ஏதோ கேள்விக்கு பதில் சொல்லிட்டு வந்தாங்களாம்..யார்டா அந்த புத்திசாலிங்கனு நாமளும் பார்க்கலாம்..
( sasizara moorthikannan
fjoicyjenmarani varshaa_raman
ashikmo adviser_98 priyadharshini12)
( இவங்க 7 பேர்தான் அந்த கணக்குக்கு சரியான பதில் சொன்னது..)
இவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு கொஞ்சம் திரும்புனா
கல்யாணபொண்ணு மாப்பிள்ளைன்னு கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே பார்க்காம ரெண்டு ஜோடிகளும் நல்லா சாப்பாட்ட வெளுத்து வாங்கிட்டு இருக்குங்க.. இப்படியே போனா நமக்கு சோறு கிடைக்காது போல.. வாங்க நாமளும் சாப்டு வந்துருவோம்..ஏப்..அப்பா என்ன ஒரு ஏப்பம்..நல்லா தின்னு தீர்த்தாச்சு.. அவுங்களும் சாப்பிட்டாங்க போல..
ரெண்டு ஜோடியையும் வாழ்த்திட்டு நாமளும் சந்தோசமா விடைபெறுவோம்..
இஇஇஇ..இன்னும் கதை முடியலப்பா..அடுத்த பதிவு இதேபோல் சீக்கிரமா வந்து சேர்ந்திடும்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz