ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

32.என்னை மறந்தாயோ கண்ணம்மா ( இறுதி)

Nivethamagathi

திருமணம் மற்றும் வரவேற்பை முடித்து, இரண்டு ஜோடிகளையும் தேனிலவுக்கு அனுப்பிவிட்டு பாஹீ பருவதத்தோடு பெரியகுளம் வந்தடைந்தான் வாசு.. நினைவு முழுதும் மகன்களும் மகள்களுமே நிறைந்திருக்க ஊரின் எல்லையை அடைந்ததுமே வெறுமை வந்து தாக்கியது..

அவர்களது வாகனம் ஊரின் எல்லையைத் தொட்டதுமே கண்டுகொண்டான் மக்கள் அலைஅலையாய் நகர்ந்து கொண்டிருப்பதை.. அவன் வீட்டை நெருங்கும் வரையிலும் மக்கள் கூட்டம் அலைமோத, பக்கத்து வீட்டு நாச்சியிடம் " என்ன தங்கச்சி.. ஒரே கூட்டமா இருக்கு " என்றான்..

அவனை ஏற இறங்கப் பார்த்து " ஏண்ணே..உனக்கு விசயமே தெரியாதா.. நம்மூருல விவசாயம் பண்ணாத தரிசா கிடந்த பத்து ஏக்கர் நிலத்தை  எல்லாம் துரை அய்யா வாங்கி ஏதோ இயற்கை முறையில அதை சீர்செஞ்சு மறுபடியும் விவசாயம் பண்ண போறாங்களாம் " என்றாள்..

" அட நல்ல விசயமா இருக்கே..ஆனா எதுக்கு இவ்ளோ கூட்டம் "

" அண்ணே உங்க வீ்ட்டுக்கு வடக்க இருக்க நிலத்தையும் அவுங்க வாங்கி பெரிய பெரிய கட்டிடம்லா கட்டிப்புட்டாய்ங்கண்ணே.. துரையம்மா நம்மூருல இருக்க அத்தனை பேருக்கும் அங்கன தான்  சாப்பிடனும்னு உத்தரவு போட்டாய்ங்க..அதானே நாங்கூட அங்கன போயி சாப்பிட்டு என்ட்ற வூட்டுக்காரருக்கும் வாங்கிட்டு போறேன்.. " என்றபடியே அவர் கடந்து போக, குழப்பத்துடனே வாசுவும் தங்கள் வீட்டிற்குள் சென்றான்...

" யாரு வாசு அது..துரைங்கறது "

" எனக்கு என்னடி தெரியும்..நானும் உங்கூடதானே இருக்கேன் " என்றவனது செவிகளில் ரோகிணியின் குரல் விழுந்தது.. மகள் ஞாபகத்தில் இருப்பதனால் வீட்டிற்கு வந்ததும் அவ்வாறு தோன்றுகிறது என நினைத்தவன் தன் கவனத்தை திசை திருப்பி பாஹீயை நோக்க அவரும் " வாசு பாப்பா குரல் மாறியே கேட்குது " என்றாள் சன்னலின் வழியே பக்கத்து வீட்டினை ஆராய்ந்தவாறு..

புதிதாய் கட்டப்பட்ட முற்றம் வைத்த வீடு மங்களகரமாய் காட்சியளித்தது..வாசலில்
விசாகனும் உதயனும் வேட்டி சட்டையோடு சாம்பார் வாளியையும் இரச வாளியையும் வைத்துக் கொண்டு பம்பரமாய் பரிமாறிக் கொண்டிருக்க, உத்ரா அங்கே வரமுடியாது போனவருக்கும் உணவுப் பொட்டலங்களை கொடுத்தனுப்பிக் கொண்டிருந்தாள்..
ரோகிணி " என்ன சித்தப்பு...சாதத்தை கிளறிட்டு இருக்க..நல்லா சாப்பிடு " என யாருக்கு என்ன வேண்டும் என கவனித்துக் கொண்டிருந்தாள்..

வாசுவும் பாஹீயும் ஒருவரை ஒருவர் கேள்வியாய் பார்த்துக் கொண்டவர்கள் தங்களையும் மறந்து சிரித்துவிட்டனர்.. இந்தப் பாசக்கார பயபிள்ளைகளிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க..

சாட்சிக் காரர்களான வாசு பாஹீயின் காலில் விழுவதற்கு சண்டைக் காரனான அவனது தொழிலின் காலிலே விழுந்து விட்டான்  விசாகன்... தங்கள் தொழில்களைக் காட்டித்தானே இவர்களை பிரித்து வைத்தான் வாசு..இப்போது அதே தொழிலால் இணைந்து கொண்டான் விசாகன்.. ஆம் உதயனும் விசாகனும் விவசாயத்தை முதன்மைத் தொழிலாய் மாற்றிக் கொண்டனர்.. அதற்காக அவர்களது  தொழிற்சாலைகளை மூடவில்லை.. நம்பிக்கையான ஆட்களை நியமித்துவிட்டு அதில்வரும் இலாபத்தில்தான் விவசாயத்தில் இறங்கியுள்ளனர்..இயற்கை முறை விவசாயம் என்றாலும்  இலாபம் பெறும்நோக்கில் தான் தொழிலைத் துவங்கியுள்ளனர்..
ஏனெனில் இவர்கள் இலாபத்திலும் வெற்றி பெற்றால்தான் மற்றவர்களும் இதே முறையை பின்பற்றுவர்..இல்லையேல் அவர்களிடம் பணம் நிறைய இருக்கு அப்படி செய்கிறார்கள்..நம்மிடம்தான் பணம் இல்லையே அதனால் இராசயனத்தையே பயன்படுத்தலாம் என நினைத்துக் கொண்டு மேலும் நிலத்தையும் ஆரோக்யத்தையும் கெடுத்துக் கொள்வர்.
ஆதாயம் இல்லாத நற்செயல் ஏனோ இக்கலிகாலத்தில் நிலைப்பதில்லை..
இருவரது பிசினஸ் மூளையை விவசாயத்தில் பயன்படுத்தினால் வெற்றிக் கனியை பறிக்க முடியாதா என்ன?

வாசுவின் ஆசையும் இதுதான்..ஆனால் படித்து பட்டம்பெற்று பல கோடி சம்பாதிக்கும் இவர்களை சேற்றில் இறங்கி வேலை செய்யச் சொல்ல மனது நினைத்தாலும் அவனது மூளை சம்மதிக்கவில்லை..
வாசுவின் கடைக்கண் பார்வைக்கே அர்த்தம் அறிந்தவர்களுக்கு அவனது உள்ளக் குமறல் புரியாதா என்ன?
வாசு பெரியகுளத்தை விட்டு நகர மாட்டார் என்று தெரிந்ததுமே உதயன் விசாகன் இருவருமே வாசுவின் மூளைக்கு எட்டாது மரகதம் நாகராஜனிடம் ஆலோசித்து அங்கேயே நிலங்களை வாங்கியிருந்தனர்..
பாஹீயின் சிகிச்சைக்கு நகரத்திற்கு சென்றதுமே இங்கே வேலை அதன்பாட்டிற்குத் துவங்கிவிட்டது.

தொழிலுக்கு தொழிலும் ஆயிற்று.. வாசுவுடன் இருப்பது போலவும் ஆயிற்று.. இவர்கள் என்ன முட்டாள்களா..இத்தனை வருட பிரிவிற்குப் பிறகு கிடைத்த சொர்க்கத்தை இழப்பதற்கு..
ரோகிணிக்கும் வாசு பாஹீக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாட்கள் இதனை மறைத்தும் வைத்திருந்தனர்..

வாசு பாஹீக்காக விசாகனின் மொத்தக் குடும்பமும் நதியாவின் பள்ளி முதற்கொண்டு அனைத்தையும் மாற்றிக் கொண்டு இந்தக் கிராமத்திற்கு வந்துவிட்டனர்..
விசாகனும் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கவில்லை..
ரோகிணியும் தன் தந்தையை பிரியவில்லை..
உதயன் உத்ரா வாசுவின் வீட்டில் வாழ,
விசாகன் ரோகிணி பக்கத்து வீட்டில் நாகராஜனின் குடும்பத்தோடு வாழ்ந்தனர்..
தேவாவும் ராஜீயும் பண்டிகை சமயத்தில் வந்து தங்கிச் செல்வர்..
இதைவிட வேறு எண்ண வேண்டும் இவர்களுக்கு...
வியாபாரத்திற்காக தாய் தந்தையரை பிரிந்தோ இல்லை அவர்களுக்கு பொருந்தாத சூழலுக்கு வழுக்கட்டாயமாக இவர்களை மாற்ற விரும்பாது ஒற்றுமையே பலமாய் எங்கே இருந்தாலும் ஒன்றாய் இருப்போம் என்ற கொள்கையோடு அவர்கள் வாழ்க்கை தொடங்கி விட்டனர்.

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

பருவதம் ஒற்றை நாற்காலியில் அதிகார தோரணையில் வீற்றிருந்தார்.. அவரது இருபுறமும் வாசுவும் உதயனும்  கைகட்டி நின்றிருந்தனர்..
அவர்கள் முன்னே  உத்ராவும் பாஹீயும் தங்கள் துணைகளை பார்த்தபடியே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தனர்..

இத்தனை வருடங்கள் கழித்து மாமியாரின் கெத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் அவர்.. வருடங்கள் கழிய தன் மருமகளுக்கும் பேத்திக்கும் சமையல் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார் அவர்.. ஆம் உத்ராவிற்குத் தான் சுவையாக சமைக்கத் தெரியாது என்றால் பாஹீக்கு சுத்தமாக சமைக்கவே தெரியாது..பிறந்த வீட்டில் செல்ல சீமாட்டியான அவருக்கு அதற்கான அவசியமும் இருந்ததில்லை..புகுந்த வீட்டிலும் மாமியார் மாடி வீட்டு மகாராணி என்பதால் ஓடி ஓடி சேவகம் செய்ததால் சமையல் என்றால் என்ன என்றுதான் கேட்பார் அவர்.. ஆனால் என்று திருமணத்திற்குப் பின், உத்ரா சமைக்க ஆரம்பித்து அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பினாளோ அதிலிருந்து மாமியாரையும் மருமகளையும் அரட்டி மிரட்டி சமைக்கக் கத்துக் கொடுப்பதுதான் பருவதத்திற்கு வேலையே.. அதுவும் அவர்கள் சமைத்ததை அவர்களது கணவரைத் தவிர யாரும் சாப்பிடக்கூடாது என்று கட்டளை வேறு..பாவம் பருவதப்பாட்டி வயதான காலத்தில் மருத்துவமனை வீடு என்று அலைய முடியாது அல்லவா..

உதயன்தான் முதல் அத்தியாயத்திலே விசத்தைக் குடித்து தனது சகிப்புத் தன்மையை நிரூபித்து விட்டான்..ஆனால் வாசு.. அவன் என்ன பாவம் செய்தான்.. மருமகளாவது பார்டர் பாஸாவது பண்ணி விடுவாள்..ஆனால் மாமியார்..ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதைப் போல சிங்கிள் டிஜிட்டில் பெயிலாகி வாசுவை சோதித்துக் கொண்டிருந்தாள்.. நம்ம ஆங்கார பாஹேஸ்வரி பொட்டி பாம்பா அடக்கி வெச்சிட்டாங்க நம்ம பருவதம் பாட்டி..

ஆனால் எவ்வளவுதான் கேவலமா சமைச்சாலும் தம்பொண்டாட்டி சமைச்சத நல்லா இல்லைன்னு மகனும் சொல்ல மாட்டான் அப்பாவும் சொல்லமாட்டார்..அப்படியே அமிர்தத்த சாப்பிடறமாறி தான் அவங்களோட பாவனை இருக்கும்..

சரி விசாகன் ரோகிணி என்ன பண்றாங்கன்னு  பார்த்துட்டு வரலாம் வாங்க.. ரோகிணி பொறுப்பான பொண்டாட்டியா அறுவடை வரவு செலவு கணக்கப் பார்த்துட்டு இருக்க, விசாகன் வயலுக்கு போய்ட்டு வந்த அலுப்போட அவ மடில படுத்து தூங்கிட்டு இருக்கான்..அன்னைக்கு அவ மடில படுத்துக்கோங்கனு சொன்ன ஒரு வார்த்தைய இன்னும் மறக்கவே இல்ல அவன்..

ரோகிணியும் உத்ராவும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொள்ள, உதயனும் விசாகனும் வாசுவின் ஆலோசனையின் கீழ் விவசாயத்தில் முழு மூச்சாய் இறங்கினர்..பாஹீ ஆசிரமங்களையும் பெண்கள் நலவாழ்வு மையங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்..
ஆக அவங்க இல்லறம் நல்லறமாய் நடந்தேறிகிட்டு இருக்கு..

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

சண்முகனும் தனது படிப்பை முடித்துவிட்டு அவர்களது கிராமத்தில் உதயன் ஆரம்பித்த மருத்துவமனையில் மருத்துவனாக தன் சேவையைத் துவங்கியிருந்தான்.. அவனின் குறும்புகள் குறைந்திருக்க பொறுப்பான மருத்துவனாய் காலம் அவனை மாற்றியிருந்தது..
இன்னும் அடுத்த மாதத்தில் அவனுக்கும் அவனது கல்லூரியில் பயன்ற சர்மிக்கும் திருமணம்..

ஆம் அது காதல் திருமணம் தான்..
சண்முகத்திற்கும் சர்மிக்கும் எட்டாம் பொருத்தம் தான்.. படிப்பினைத் தவிர..நிறத்தில்..குணத்தில்..
எண்ணத்தில்.. என அனைத்திலும் வேறு வேறு இரகம்தான் இருவரும்....

அவன் மாநிறத்தியும் தாண்டிய மஞ்சள் நிறம்..
இவள் மாநிறத்திற்கும் சற்று மங்கிய வெளிர்கருநிறம்..
அவன் குறும்பானவன் என்றாலும் பொறுமைசாலி..
இவள் வெட்டு வெடுக்கென யாரையும் எதிர்த்து பேசக் கூடியவள்..
அவன் எளிமையை விரும்புபவன்..
இவள் ஆடம்பரத்தை விரும்புபவள்..
குறிப்பாக தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் நிறைய சிரமப்படுவாள்..
முகத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர்த்து ஒரு சென்டிமீட்டருக்கு வண்ணப்பூச்சு இருக்கும்.. நவநாகரீக மங்கை அவள்..

பேரன்னஸ் கீரிம் விளம்பரங்களில்
வருவதைப் போல, கருப்பா இருந்தா எதையும் சாதிக்க முடியாது.. யாரும் பார்க்க மாட்டாங்க.. வேலை கொடுக்க மாட்டாங்க..ஒரு கான்பிடன்ட் இருக்காது..அவ்ளோ ஏன் ஒரு பையன் கூட திரும்பிப் பார்க்க மாட்டான் என்றெல்லாம் தன் மனதில் பதிவு செய்து கொண்டு அதன்படியே அவள் நிறத்தை மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாள்..

மற்றவர்களைப் போல இவனும் அவளை மேக்கப் பைத்தியம் என்று விளையாட்டாய் கேலி செய்துவிட பொங்கி எழுந்துவிட்டாள் மங்கை..

".தெரியாம தான் கேட்கறேன்..கலரா இருக்கவங்க  மேக்கப் போடலாம்..ஆனா. என்னை மாறி கருப்பா இருக்கவுங்க போட்டா தப்பு ..அழகுக்கு அழகு சேர்க்கலாம்..ஆனா  அழகில்லைனா எதுவுமே பண்ணாம இன்னும் நாங்க தாழ்வு மனப்பான்மைலயே கடந்து தவிக்கனும் அப்படிதான.. அவங்கள மாறி நானும் மாறனும்னு நினைக்கறது தப்பா..
அப்போ மேக்கப்  போடறவங்கலாம் கெட்டவங்க..போடாதவங்க நல்லவங்களா.
" என கோபமாக கேட்டவளிடம்,

இவன் சும்மா இருக்காது ரோகிணி கூட மாநிறம்தான்..ஆனால் அவள் என்றும் இத்தனை மேக்கப் போட்டதில்லை..ஆனாலும் கலையாகத் தான் இருப்பாள் என உதாரணம் காட்ட,

" வெறும் கதையில கூட அழகா சிவப்பா அப்படி இல்லையா இலட்சனமா இருக்க பொண்ணதான ஹீரோயினா காட்டறீங்க.. குறைஞ்சது கருப்பா இருந்தாலும் கலையா இருப்பான்னு சொல்லிடறீங்க.. கருப்பு எங்கிட்ட இருக்கு கலைக்கு யார்கிட்ட கடன்வாங்க.. பேசி பழகனும்னாலும்
படிக்கறதுக்கு டவுட் கேட்கனும்னாலும் அழகா இருக்க பொண்ணுங்க கிட்டதான கேட்கறீங்க.. ரேசிசத்த ஸ்டார்ட் பண்ணி விடறதே இந்த சின்னச் சின்ன விசயங்கள் தான்..சும்மா அடுத்தவங்கள ஜட்ஜ் பண்றத விட்டுட்டு வேலைய பாருங்க "

" எல்லோரும் அப்படி" என ஆரம்பித்தவனின் வார்த்தையை கூட கேட்காது இத்தனை வருடங்கள் மனதில் அழுத்திய பாரத்தை மூச்சாய் அவனிடம் ஒப்பித்து சென்றுவிட்டாள்..
அழகில்லை என்பதை ஒரு குறையாக அவள் நினைக்கவில்லை..ஆனால் சுற்றியிருப்போர் அப்படி நினைக்க வைத்துவிட்டனர்..

அதுவரை வெறும் மேக்கப் பைத்தியம் என்று ஒதுக்கி வைத்திருந்தவளின் தாழ்வுமனப்பான்மையை போக்க, தானே வழிய சென்று நண்பனாகிக் கொண்டான்.. வருடங்கள் கழிய, அவளது ஒவ்வொரு செய்கையிலும் ஈர்க்கப்பட்டு நட்பு காதலாக மலர்ந்ததும் அவள் தாய் தந்தையிடம் அனுமதிபெற்று காதலையும் அவளிடம் தெரிவித்து போராடி அவள் மனதில் இடம்பெற்று திருமணம் வரை கொண்டு வந்துவிட்டான் அவன்..

அவளது தாழ்வு மனப்பான்மை மறைந்தாலும் இன்றும் முகப்பூச்சு பூசிக் கொண்டு தான் இருக்கிறாள்.. ஆனால் அதனை தடுக்கவில்லை அவன்..மாறாக அதனால் தோலுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் மருத்துவனாய் பார்த்துக் கொண்டான் அவன்..

புரிதல் எங்கு இருக்கிறதோ அங்கே பிரிவுக்கு இடமில்லை..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
கல்லூரி படிப்பை முடித்த தீரன் தேவாவிற்குத் தொழிலில் உறுதுணையாக இருந்தான்.. நாகராஜன் அவரது ஒற்றை மகள் நதியாவின் படிப்பு முடிந்ததும், தனது அக்கா மகனிற்கு கொடுக்க நினைக்க, ராஜியும் அதற்கு பச்சைக் கொடி காட்டினார்..

தீரன் 💜 தியா இருவருக்கும் அத்தை மகன் மாமன் மகள் என்ற ஈர்ப்பு இருந்திருக்க, அவர்களும் திருமணத்திற்கு சம்மதித்தனர்..

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

வருடங்கள் நாட்களாய் மின்னல் வேகத்தில் கடக்க, கொள்ளுப் பேரன் பேத்திகளைப் பார்த்த சந்தோசத்தில் மரகதமும் பருவதமும் இறைவனடி சேர்ந்திருக்க, வாசுவும் பாஹீயும் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தனர்.. விசாகன் ரோகிணிக்கு 
ஒரு மகனும் மகளும் வரமாய் கிடைக்க, உதயன் உத்ரா ஜோடிக்கும் இறைவன் இரண்டு ஆண் குழந்தைகளை ஆசிர்வதித்திருந்தார்..

அதே சமயம் இளைஞர் தலைமுறையினரும் விசாகன் உதயனின் செயல்முறையைக் கண்டு, விவசாயத்தினை ஆர்வமுடன் செய்யத் துவங்கியிருந்தனர்..

குடும்பத்தில் சச்சரவு வந்தாலும் பொறுமையுடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை சிறப்பித்தனர்..
அங்கே விசாகனுக்கும் வாசுவுக்கும் சண்டை வருவதும் ரோகிணியும் உதயனும் இருவருக்கிடையே திண்டாடுவதும் கடைசியில் பாஹீ வந்து முடித்து வைப்பதும் என
எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களது அன்பும் காதலும் நட்பும் குறையாது வளர்ந்து கொண்டே இருந்தது..

வாசு பாஹீயைப் பற்றி சொல்லவா வேண்டும்.. உடல்திடம் குறைந்து கைத்தடி ஊன்றி நடந்தாலும் மற்றொரு கையால் தன் மனையாளை விடாது பிடித்துக் கொள்வான் அந்த வாசுதேவர்.. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது வாழும் அன்றில் பறவைப் போல தங்கள் இணையை விட்டு பிரியாது தங்கள் பேரன் பேத்திக்கும் கதாநாயகன் நாயகியாய் திகழ்ந்தனர்..

இவர்கள் போல் யாரென்று ஊர் போற்றும் வகையில், வாழ்ந்தால் இவர்களைப் போல வாழ வேண்டும் என அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தனர்..

மகன்கன் மகள்களின் ஆசைப்படியே அவர்களின் வாழ்க்கைத் துணையையும் தேடித் தந்தனர் விசாகனும் உதயனும்..
உதயன் உத்ராவின் இளைய மகனுக்கு சண்முகத்தின் பெண்ணை மணமுடித்து வைத்தனர்..

தீரன் தியா ஜோடியின் இரண்டு பெண் பிள்ளைகளும் கல்லூரிப் படிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தனர்..

பேரன் பேத்திகளின் திருமணத்தை முடித்த சந்தோசத்தில் ஒரு நன்னாளில் பாஹீ தன் உலக வாழ்வை முடித்துக் கொள்ள, தன்னை மறந்து போன கண்ணம்மாவினை மறக்க இயலாது அடுத்த நொடியே அவளிடம் சரண்புகுந்திருந்தான் அந்த மாயக் கண்ணன்..
அவன் ஆத்மா அவனது ஜீவ சங்கல்பத்தை அடைந்து விட்டது..

அங்கே யாரும் அழுகவில்லை..பாஹீயை இழந்த வாசுவையோ..வாசுவை இழந்த
பாஹீயையோ தனியாக பார்க்கும் சக்தி அங்கே யாருக்கும் இல்லை.. அந்த வகையில் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த வலியைக் கொடுக்காது இருவரும் சொர்க்கபுரியை சென்றடைந்துவிட்டனர்..

அந்தக் கருப்புச் சட்டைக் காரனும் அவனது கண்ணம்மாவும் மேலிருந்து என்றும் தங்கள் பிள்ளைகளை  ஆசிர்வதித்துக் கொண்டு தான் இருப்பர்..நாமும் அவர்களது ஜீவ சமாதியை தரிசித்துவிட்டு விடைபெறுவோமாக..

இது சோகமான முடிவல்ல..
வாசு பாஹீயைப் பொறுத்தவரை சுபமான முடிவு..
பிறப்பென்றால் இறப்பும் நிச்சயம் ..
அவர்கள் உடல்கள் மட்டுமே அழிந்திருக்கின்றன..
அவர்களது ஜீவன் அதே காதலோடு அதே மிடுக்கோடு இன்னும் நம்மனதில் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்..

                       💞   சுபம் 💞

வணக்கம் நண்பர்களே..என்னை மறந்தாயோ கண்ணம்மா தொடர்கதை உங்களோட ஆதரவால் இனிதாக முடிவுற்றது.
நீங்கள் கொடுத்த உற்சாகத்தில்தான் துவண்டு போகாமல் மீண்டும் எழுதத் துவங்கினேன்..எதிர்மறை விமர்சனங்கள் வந்த போதும் உங்களது நேர்மறை கருத்துக்களினால் தான் அதனை கடந்து விட்டேன்.. இஇஇ.. இந்தக் கதையில் வாசுவும் பாஹீயும் தான்பா மெயின் ஹீரோ ஹீரோயின்.இதுதான் நான் முதல் பதிவில் சொன்ன சர்ப்பிரைஸ்..

கதை எப்படி இருந்தது.
உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரம்..
பிடிக்காத கதாப்பாத்திரம்
ஜோடி..
பிடித்த சீன்.
பிடிக்காத சீன்..
கதை உணர்த்தும் நீதி..
இந்தக் கதையினால் என்ன தெரிந்து கொண்டீங்க..
எல்லாத்தையும் சொன்னீங்கனா ரொம்ப சந்தோசப்படுவேன்..

அடுத்த கதை எழுத ஆசைதான்..ஆனால் வகுப்புகள் ஆரம்பித்த காரணத்தால் நேரம் போதவில்லை.. கடவுள் சித்தத்தால்
எனக்கு மீண்டும் கனவு வந்தால் அதுவும் கொஞ்சம் திரில்லர் போல தோன்றினால் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்..
சைலன்ட் ரீடர்ஸ் கதையே முடிந்துவிட்டது..தயவுசெஞ்சு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கப்பா..
நிறைகளும் குறைகளும் வரவேற்கப்படுகின்றன...போஸ்ட் பாக்ஸ் நம்பர் ஆல்ரடி சொல்லிட்டேன்
மிக்க நன்றி மக்களே..
என்றும் அன்புடன்..
நிவேதாமகதி..💞

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz