ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

11.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

நாட்கள் நகர்ந்தது. உதயனுக்கு நான்கு வயது..விசாகனுக்கு ஐந்து வயதும் ஆனது.

ராஜேஸ்வரி கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாள். நாகராஜன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருந்தான். சுந்தரும் ரேவதியும் அருகிலுள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தனர். மாணிக்கம் படுத்த படிக்கையாக

பாஹி ஆலை பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். வாசு தற்போதும் பக்கத்து ஆலைக்குத் தான் சென்று கொண்டிருந்தான். சனி ஞாயிறு மட்டும் தங்கள் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று

பருவதத்தைப் பார்த்து வருவார்கள். நாகராஜனுக்கு தன் தந்தையின் உடல்நலக்குறைவிற்கு காரணம் தனது உடன்பிறப்புகளே என நினைத்துக் கொண்டு அதிகம் யாரிடமும் ஒட்டாமலே இருந்தான் ராஜியைத் தவிர.. இருவருக்கும் வயது வித்தியாசம்   குறைவு என்பதாலும் ராஜியின் அமைதியான குணத்தாலும் அவளை தன் அக்காவாக எண்ணாமல் தங்கை போல கவனித்துக் கொள்வான்.மற்றவர்களிடம் சற்று ஒதுங்கியே இருந்தான்.

அன்றொரு நாள் வாசு வெளியே சென்று வரும்போது ராஜி மாந்தோப்பில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.. அவள் நடந்தே வீடு வந்தால் எப்படியும் இருட்டாகி விடும் என்பதால் அவளைத் தன்னுடன் அழைத்து வந்தான்.

அவன் வாசற்படியில் கால் வைத்ததுமே விச்சு " சூப்பர்மேன்.. " என்றபடி அவன்  கால்களைக் கட்டிக் கொண்டான். உதயன் தாமதமாக வந்து  " பா..பா... தூக்கு..தூக்கு " எனச் சொல்ல,  முதலில் விச்சுவை ஒரு கையால் தூக்கி கொண்டு தயாவை இன்னொரு கையில் தூக்கிக் கொண்டான்.

" சூப்பர்மேன்.. மை மிஸ்...டிராயிங் சொல்லித் தந்திச்சு..  ' சூப்பர் விச்சு' உன்னை டிரா பண்ணிக் காமிச்சேன்னா . மிஸ் பாத்துட்டு விவி குட்டு சொன்னிச்சு " எனத் தன் கைகளில் வைத்திருந்த காகிதத்தைக் காட்டினான். அதில் வட்டமாக வரைந்த முகத்தில் மீசை மட்டும் பெரியதாக தெரிய, கீழே சட்டை வரைந்து அதற்கு கருப்பு வண்ணம் பூசியிருந்தான்.

" சூப்பர்விச்சு..எப்பவும் சூப்பர் தான் " என கன்னத்தில் முத்தம் வைக்க, அவனும் வாசுவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு  கீழிறங்கி அடுத்து தன் ராஜியிடம் அதைக் காட்ட  

குடுகுடுவென்று ஓடினான்.

உதயாவோ அவன் தந்தை விச்சிவிற்கு முத்தம் கொடுத்ததைப் பார்த்து வீறிட்டு அழத் துவங்கியிருந்தான்.

பாஹீ " வாசு.. வந்த உடனே அவன அழ வெச்சிட்டியா.. விசுவ அவன் முன்னாடி கொஞ்சாதன்னு சொன்னா கேட்கறியா "

என்க,

" பாஹீ.. அவன் குழந்தை..நல்லது கெட்டத நாமதான் சொல்லிக் கொடுக்கனும்.அடம்பிடிச்சா..அழுதா எதையும் சாதிச்சிடலாம்ங்கறத நாம பழக்கி அவுங்கள கெடுக்கறத விட, நாமதான் அதுல இருக்கற கெட்டத எடுத்துச் சொல்னும்..இப்போ நாம விச்சுவ ஒதுக்கிட்டா அவன் ஏமாந்து போக மாட்டானா.. பெத்த பாசம் உன் கண்ணை மறைக்கிதுல.. இப்போ பாரு இவுங்க எப்படி சமாதானம் ஆகறாங்கனு " என்றவன்

" விச்சு " என அழைக்க துள்ளிக் குதித்து ஓடி வந்தவன் உதயன் அழுகுவதைப் பார்த்துவிட்டு கீழே கடந்த ஒரு விளையாட்டு பொம்மையை அவன் கையில் கொடுத்து  அவனை தன் பிஞ்சு கையால் வாசுவிடம் வாங்க முயற்சித்து " சூப்பர் மேன் என்ட கொடு" என்க, வாசுவும் உதயனை அவனிடம் கொடுத்து அலேக்காக இருவரையும் தூக்கிக் கொண்டான்.

" சூப்பர் விச்சு.. சொல்றேன்ல.. தயா அழுவியாத" என மாறி மாறி அவன் கன்னங்களில் முத்தம் கொடுக்க, அவனும் தன் அழுகையை மறந்து புன்னகை பூத்தான்.

" ஐஐ....அழுமூஞ்சி தயா..சூப்பர் தயாவாச்சு..சூப்பர் " எனக் குதூகலிக்க உதயாவும் சிரித்துக் கொண்டு விச்சுவைக் கட்டிக் கொண்டு வாசுவை கோபமாய் பார்க்க, ' அடேங்கப்பா.. கோபத்த பாரு அவுங்கம்மாவாட்டம் ' என மனதில் நினைத்துக் கொண்டு

" சூப்பர் தயா.. சூப்பரோ சூப்பர்.. அப்போ நாம மூனு பேரும் சேர்ந்தா "

குழந்தைகள் இருவரும் " சூப்பர் ஸ்டார்ஸ் "

எனக் கத்த, " ஆஹாங்.. சரி இப்போ சூப்பர் ஸ்டார்ஸ்ல யாரு பர்ஸ்ட் ஸ்நேக்ஸ பினிஸ் பண்ணுவாங்க " என்றதும்தான் தாமதம் இருவரும் முந்தி அடித்துக் கொண்டு ரேவதியிடம் தங்கள் மாலைநேர திண்பண்டங்களை வாங்கி  கொறிக்க ஆரம்பித்தனர். 

அவர்கள் செயலை இரசித்துக் கொண்டிருந்த பாஹீயிடம் ' பார்த்தல ' என்பது போல பார்வை பார்க்க ' நீ பெரியாள் தான்பா' என்பது போல கைக்காட்டி விட்டு உள்ளே சென்றாள். ராஜியை அழைத்து வந்ததிற்கான காரணத்தைக் கூட அவள் வாசுவிடம் கேட்கத் தோணாமல் சென்றுவிட்டாள்.

அடுத்த வந்த நாட்களில் வாசுவிடம் ராஜி நெருங்கிப் பழக ஆரம்பிக்க பார்ப்பவர்கள் யாருக்கும் அது தவறாகத் தெரியவில்லை..

ஒரு நாள் விச்சுவும் உதயாவும் விளையாடிக் கொண்டிருக்க, ராஜி அவர்கள் அருகே கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் மீண்டும் ஒரு சண்டை.. ராஜி விசாரிக்க " வாசுவிற்கு இருவரில் யாரை அதிகம் பி்டிக்கும் என வினவ அவளோ விளையாட்டாக " உங்க ரெண்டு பேரை விட வாசு மாமாக்கு எனைய தான் ரொம்ப பிடிக்கும் " என்று சொல்லிவிட, அந்தப் பக்கம் வந்த பாஹீக்கு கோபம் வந்து விட்டது.. ஆனால் விளையாட்டுத் தனமாக சொல்லியிருப்பாள் என அத்தோடு விட்டுவிட்டாள்.

அடுத்த நாள் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய வாசுவைக் கண்டு பாஹீ அதிர்ந்து விட்டாள்..காரணம் அவன் புதிதாக நீல நிறச் சட்டை அணிந்து வந்திருந்தான். விசாரிக்க, வேலை செய்யும் போது சட்டை கம்பியில் மாட்டி கிழிந்து விட்டது எனவும் கூட வேலை செய்யும் பையன் கடைக்குச் சென்று சட்டை வாங்கித் தந்ததாகவும் கூறினான். அந்த நேரம் கோவிலுக்குச் சென்று வீடு திரும்பிய ராஜி " மாமா உங்களுக்கு இந்தக் கலர் அழகா இருக்கு.. இனிமே கலர்கலரா சட்டை போடுங்க.. செமயா இருக்கும் " என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்க, வாசுவோ தன்னவள் வாங்கிக் கொடுத்த சட்டை கிழிந்து போய் விட்டது என்ற வருத்தத்தில் இருந்ததால் ராஜி கூறியதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னறைக்குச் சென்று விட்டான். அவன் சென்றதும் பாஹீ

" என்ன ராஜி பட்டுப்புடவைலா கட்டிருக்க, எதும் விசேசமா" என்க,

" அது வந்து... பாஹி அக்கா.. இன்னைக்கு.. இன்னைக்கு.. வந்து கோயில்.. கோயில்ல சிறப்பு பூஜைக்கா அதான்.. " எனத் தட்டித் தடுமாறி சமாளித்து விட்டு ஓடி விட்டாள்.

நாட்கள் நகர, வாசு எந்நேரமும் பதற்றமாகவே சுற்றிக் கொண்டிருந்தான்.

எந்தளவிற்கு என்றால் குழந்தைகளிடம் பேச முடியாத அளவுக்கு..பாஹீ என்னவென்று கேட்டும் அவன் சொல்ல மறுத்துவிட்டான். அதற்கடுத்த நாள் ராஜி கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை எப்படியோ காப்பாற்றிவிட்டனர்.

நல்லவேளை நாகராஜன் கல்விச் சுற்றுலா சென்றிருந்தான். பசங்களை விளையாட அனுப்பிவிட்டு,

மயக்கம் தெளிந்த ராஜியின் முன், மொத்த குடும்பமும் கேள்விகளை சுமந்தவண்ணம் நின்றிருந்தனர்.  மாணிக்கம் கூட தள்ளாடிக் கொண்டே அவள் அருகில் வந்தமர்ந்து கொண்டார்.

அவள் வாசுவைப் பார்த்தே அழுக, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த மரகதம்

" யார் குடி அழிஞ்சிருச்சுனு இப்போ சாகப்போன.. ஏன்டி பொம்பளப்புள்ள செத்துப் போனா ஊர் உலகம் என்னென்ன பேசும்னு தெரிஞ்சும் கிணத்துல விழுந்திருக்கியே.. பைத்தியக்காரி பெத்த அப்பா அம்மா அண்ணேனு உசிரோட தான நாங்க இருக்கோம்.. எங்ககிட்ட சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு என்னை கேடுடி நடந்துச்சு " என அவளைக் கட்டிக் கொண்டு கன்னீர் வடிக்க, அவளோ " எல்லா கேடும் நடந்து முடிஞ்சிருச்சுமா " என கத்தி அழுக ஆரம்பித்தாள்.

சுந்தர் " என்னாச்சுனு சொல்லுடா ..எதா இருந்தாலும் பாத்துக்கலாம் " என்க, அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு உடையில் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்துக் காட்டினாள். அதனைக் கண்டு அனைவருமே துடித்துப் போயினர்.

மரகதம் கோபம் கொண்டு அவளை அடித்துக் கொண்டே " ஏன்டி உங்கோட பொறந்தவங்கள மிஞ்சிட்டியே பாவி.. அவுங்களாச்சும் காதல்னு சொல்லி வந்தாங்க.. இப்படி யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கிட்டு அதையும் மறைச்சுட்டு வாழ்ந்துகிட்டு இருக்கியே..யார்டி அவன்.. எந்த கேடு கெட்ட நாயின்னு சொல்லுடி " என மீண்டும் மீண்டும் அடிக்க வாசு தான் அவரைத் தடுத்தான்.

" நீங்க சும்மா இருங்க மாப்பிள்ளை.. யாருன்னு சொல்லித் தொலை டி " என வாசுவை முறைத்துக் கொண்டே கூற

" அம்மா கேக்கறாங்கள சொல்லு ராஜி."

" அண்ணி..அண்ணி "

" சொல்லுடா..இந்த  அண்ணன் எங்கிருந்தாலும் அவன கூட்டிட்டு வரேன் "

" அவர் பேரு தேவா"

" சரிடா..அழுகாத.எந்த ஊரு..எப்படி பழக்கம் "

" அண்ணா அவர் பேரு தேவாங்கிறத தவிர வேற எதுவுமே தெரியாதுண்ணா.. லைப்ரரி போகும்போது தான் பழக்கம்.. அப்போப்ப மாந்தோப்பு, கோயில்னு சந்திச்சிப்போம்.. அவர் ரொம்ப நல்லவர்னா.. அவுங்க வீட்டாளுங்க அவருக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணி வெக்கறேனு சொன்னதும்தான் எங்களை பிரிச்சுருவாங்கனு பயந்து  தான் எங்கழுத்துல தாலி கட்டுனார்.இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணானு சொன்னாரு.. ஆனா வாசு மாமா கண்டுபிடிச்சிட்டாங்க.. அவரப் பத்தி கேட்டாங்க..நானும் தெரிஞ்சத சொன்னேன்..அன்னைல இருந்து அவரும் அவுங்கள தேடிட்டு தான் இருக்காரு.. ஆனா அவரப்பத்தி யாருக்குமே தெரில.. அதான் எனக்கு பயம் வந்துடுச்சு..அவர் வரலனா அவருக்கு எதாச்சும் ஆகியிருக்கும்னு அர்த்தம்..அதான் நானும்.." என கேவ, அனைவரின் பார்வையும் வாசுவின் புறம் திரும்பியது..

" ஏன்டா மறைச்ச"

" மறைக்கனும்னு நினைக்கலடா.. நானே அவன கண்டுபிடிச்சிடலாம்னு தான் நினைச்சு தேடுனேன்..ஆனா அவன் யாருன்னோ.. தேவாங்கற பேரு தான் உண்மையான பேரான்னு கூட கண்டுபிடிக்க முடியல.."

" அவன் யாருன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு "

" யாரும்மா .. சீக்கிரம் சொல்லுமா..என் தங்கைய இந்த நிலைக்கு கொண்டு வந்தவன என்கையால கொன்னு போடறேன் "

" அண்ணா நீ அமைதியா இரு.. யாரும்மா அது.. உனக்கெப்டித் தெரியும் அவன "

" அவன என்னை விட உனக்குத் தான் தெரியும் "

" என்னமா உளர்ற "

" உளர்லடி உண்மைய. சொல்றேன்.. அந்த தேவா யாருமில்ல.. உன் புருசன் வாசுதான்.. இதே வாசு தேவ மூர்த்தி தான் "

" அம்மா "

" அத்தை "

" ஆமா எனக்கு இப்போதான் எல்லாமே புரியுது.. நான் தான் ஆரம்பத்துலயே இதை புரிஞ்சிக்காம விட்டுட்டேன் "

" அம்மா நீ தப்பா பேசறது என் நண்பனப் பத்தி "

" சுந்தர்.. அவன் உனக்கு நண்பன் மட்டுமில்ல.. என் பொண்ணோட மாப்பிள்ளைடா.. நான் மட்டும் வேணுனு சொல்வேனாடா.. ஊருக்குள்ள கேட்டுப் பாருடா.. உம்மருமகன் சின்ன மகள வெச்சிக்கிட்டு தோப்பு தொறவுன்னு சுத்திக்கிட்டு இருக்கான்னு எங்கிட்டயே வந்து கேட்கறாங்கடா..ஆனா எம் பொண்ணு மேல இருக்க நம்பிக்கைலதான் நான் அதை நம்பல..ஆனா நேத்து நைட்டு அவ இவன் கால்ல விழுந்து எனக்கு வாழ்க்கை கொடுங்கனு கெஞ்சுனத கேட்டதும் என் நெஞ்சே வெடிச்சிருச்சு..சரி காலைல இதப் பத்தி பாஹிட்ட சொல்லலாம்னா இவ சாக துணிஞ்சிட்டா.."

உண்மையிலுமே மரகதம் வாசுவை வேண்டும் என்றே குறை கூறவில்லை.. அவர் பார்வையில் இருவரது செயல்களும் சந்தேகிக்கும் வகையில்தான் இருந்தது.

" அம்மா என்னம்மா பேசற..மாமாவ எங்கூட சேத்து வெச்சு பேசற..அக்கா புருசன கட்டிக்கற  அளவுக்கு என் நடத்தைல உனக்கு சந்தேகமா..அவரும் சுந்தர் அண்ணாவும் எனக்கு ஒன்னு தானம்மா ..அக்கா நீயாச்சும் அம்மாகிட்ட சொல்லுக்கா " என ராஜி அழுக,

வாசுவின் பார்வையோ பாஹியை விட்டு அகலாது இருந்தது.. அது என்னை சந்தேகிக்க போகிறாயா கண்ணம்மா என்று கேட்பதைப் போல இருந்தது..

ஆனால் அவள் முகம் கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது.. அவனோ இந்த நிலை இவளுக்கு வரக் கூடாது என்பதினாலே தானே இதை மறைத்து வைக்க நினைத்தான். அவளுக்கு கோபம் வந்தால் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுவிடுவாளே என பயந்து கொண்டு அவளைப் பார்த்திருந்தான். அவனுக்கு மரகதத்தின் பேச்சு வலித்தாலும் செய்யாத தவறுக்கு வருத்தப்பட அவன் ஒன்றும் கோழை  இல்லையே.. அதுவும் அவன் கவனம் முழுதும் பாஹியின் மீதே இருந்ததால் மற்றவை அவன் கருத்தில் பதியவில்லை.

" அம்மா நீ கொஞ்சம் வாயை மூடு..எனக்கு ராஜியையும் தெரியும்.. வாசுவையும் தெரியும்.. அவன் இந்த மாதிரி கேவலமான வேலைய கனவுல கூட செய்ய மாட்டான்.. "

" ஆமாங்க அத்தை அண்ணே அப்டி பட்டவர் கிடையாது "

" நீ சும்மா இருடி.. அவன்தான உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சான்..அதுனால அவனுக்கு சப்போர்ட் பண்றியா நீ "

ஒவ்வொருத்தரும் வாசுவிற்கு துணையாக பேச ஆரம்பிக்க, மரகதமோ அதனை மறுத்துப் பேசிக் கொண்டிருந்தார். மாணிக்கமோ தன் குடும்பம் தன் கண் முன்னே படும் அவஸ்தையை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவர் உடம்பில் பேசுவதற்கு கூட தெம்பில்லை..

மரகதம் பேசப் பேச பாஹீ தன்னிலை மறக்க ஆரம்பித்தாள்.. இருந்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு " இதுக்குமேல என் புருசனப் பத்தி பேசுன..கொன்றுவேன் உன்னை.. போதும் எனக்காக வீட்டோட மாப்பிள்ளையா இருந்ததுக்கு நீ கொடுத்த நல்ல பேரு போதும்.. மதினி என் பையன கூட்டிட்டு வாங்க..நாங்க கிளம்புறோம் " என்றதுமே ரேவதி பயத்தில் உதயனை கூட்டி வரச் சென்று விட்டாள்..வாசுவோ எப்படியோ பாஹி பேசிவிட்டாள்..அவளுக்கு அதிகமான கோபம் வரவில்லை என சந்தோசம் மட்டுமே அடைந்தான்.

" நீ பாட்டுக்கு போனா உம்புருசன் பண்ண தப்புக்கு தண்டனை வேணாமா "

"ச்சி சும்மா அவர குத்தம் சொல்றத நிறுத்து.. அவர் தப்பு பண்றதா இருந்தா பொண்டாட்டியோட சொந்த தங்கச்சிக்கே ஏமாத்தி தாலி கட்டுவாரா.. அதுனால அவர் குடும்பத்துல பிரச்சினை வரும்னு அவருக்கு தெரியாதா.. இத்தனை வருசத்துல நீயும் மாறி்ட்டனு நினைச்சேன்.. ஆனா நீ திருந்தல.. இப்படி பொண்ணோட வாழ்க்கை கேள்விக் குறியா நிக்கும் போது கூட இவர குறை சொல்லி தண்டிக்கத்தான் நினைக்கிறயே தவிர பெத்த பொண்ணுங்கள பத்தி நினைக்கல.. ச்சே..உங்கிட்ட பேசறது டைம் வேஸ்ட்.. நாங்க கிளம்புறோம் " என்றாள்.

மரகதம் அப்போதும் அசராமல் நின்றார். அவர் கண்களுக்கு ராஜி வாசு பழகுவது இன்னும் தவறாகவேத் தான் தெரிந்தது..

மாணிக்கம் பாஹியின் கைப்பிடிக்க

" போதும்பா.. இதுக்கு மேல நான் இங்க இருந்தன அது அவருக்கு நான் செய்யற துரோகம் .. நான் வரேன் " என்று கிளம்ப,

ராஜி பாஹீயின் காலில் விழுந்து " அக்கா போகாதக்கா.. என்னாலதான எல்லாப் பிரச்சனையும்.. யாருன்னே தெரியாதவன நம்பி ஏமாந்து நிக்கறது நான் தானக்கா..நான் தான் தண்டனைய அனுபவிக்கனும்.. நீங்க இங்கையே இருங்கக்கா.. மாமா மேல எந்த தப்பும் இல்லக்கா.. " எனக் கெஞ்ச அவளோ

" பத்திரமா இரு ராஜி.. நீ செத்து எம்புருசன் பேர கெடுத்துடாத " என்றவள் தனது தந்தையின் கையை எடுத்துவிட்டு உதயனை வம்படியாக தூக்கிக் கொண்டு வாசுவை தன் கரம்பற்றி வீட்டை விட்டு வெளியேறினாள்.. அவர்கள் பின்னே விசாகன் " தயா.. சூப்பர்மேன் " எனக் கத்திக் கொண்டே ஓட, மரகதம் அவன் அழுவதையும் கண்டுகொள்ளாமல் பிடித்து வைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு வந்துமே பாஹீயின் கோபம் அடங்கவில்லை. சுவற்றை வெறிக்க ஆரம்பிக்க வாசு மென்மையாக அவள் தோளினைத் தொட்டதும் அதில் உயிர்பெற்றவள் " உன்னால கூட தேவாங்கறவன கண்டுபிடிக்க முடியலையா வாசு.. " என்க, அவனோ ஆமாமென தலையை மட்டும அசைத்தான்.

அவன் மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பான் அவன் எங்கு சென்று விசாரித்தாலும் ராஜியுடன் உன்னைத் தவிர யாரையும் பார்த்ததில்லை என்கிற பதிலைத் தவிர வேறு பதில் கிடைக்கவில்லை என்றால்..

அவனுக்குமே அந்த பதில் சற்று நெருடலைத்தான் உண்டு பண்ணியது.. அதிலே அவன் நல்லவன் இல்லை என்பதையும், தனக்கெதிராகத்தான் கதை திரும்பும் என்பதையும் கண்டறிந்தான்.. இந்த விசயம் பெரியதாவதற்குள் அவனை கண்டறிய வேண்டும் என அவன் நினைத்திருக்க அதற்குள் ராஜியின் செயலால் வெளிவந்துவிட்டது.. அவன் கச்சிதமாக திட்டம் தீட்டி அவனுக்கு வாசுவினை மிகவும் பிடிக்கும்.. அவரைத் தெய்வமாக நினைக்கிறேன் என கூறியபடியே ராஜியின் மனதில் இடம் பிடித்திருக்கிறான்.. அதுவும் ராஜியிடம் வாசுவிடம் நன்றாக பேச வேண்டும் என அறிவுறுத்த, அந்தப் பேதையும் அவன் கூறுவது போல அதிலிருந்து வாசுவிடம் உரிமையாக பழகியிருக்கிறாள்.. அவன் சொல்வதை மறுக்காமல் செய்யும் அளவிற்கு அவள் மனத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான்.. ஆனால் இதனால் அவனுக்கு என்ன இலாபம் என்று வாசுவால் கண்டறிய முடியவில்லை.

வருத்தத்துடன் தன் மனைவியின் மடியில் தலை வைத்துப் படுக்க, அவளும் அவன் தலையை ஆறுதலாய் வருடிவிட்டாள்.

" பாஹீ "

" ம்ம். "

" எனக்கே எதாச்சும் ஆனாலும் நீ அதிகமா கோபப்படக்கூடாது.. பொறுமையா இருக்கனும்.. எந்த காரணம் கொண்டும் விச்சுவையும் தயாவையும் பிரிக்காம ஒற்றுமையா வளர்த்தனும்.. அதே மாறி பொண்ணுங்களுக்கு நீ செய்ற உதவிய எப்போதும் நிறுத்த கூடாது.சரியா"

" ஏன் வாசு எங்காச்சும் ஓடி போகப் போறியா "

"இல்ல யாரையாச்சும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போகப் போறேன்.. எவ்ளோ சீரியஸா பேசறேன்.. நீ கிண்டல் பண்ற"

" நீ தான்டா காமெடி பண்ற.. நீ எங்க இருக்கியோ..அங்கதானடா நானும் இருப்பேன்.. முட்டாள்தனமா பேசாம அப்டியே தூங்கு.. காலைல வேலைக்க போகனும்ல " என்று அவனை சமாதனப்படுத்தியவள் அவன் தூங்கியதும் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்..

நாட்கள் நகர்ந்தது.. நாகராஜனும் சுந்தரும் எங்கு தேடினாலும் வாசுவிற்கு எதிராகவே தகவல்கள் வந்து சேர்ந்தது..ராஜியின் புத்தகத்தில் வாசுவின் புகைப்படமும் அவளது பெட்டியில் அவனது கருப்புச் சட்டையும் கிடைக்க இந்த முறை சுந்தர் கொண்டுள்ள   வாசுவின் நம்பிக்கையில் விரிசல் விழத் துவங்கியது.. நாகராஜன் வாசுவை கொலை செய்யும் ஆத்திரத்தில் இருந்தான்.. இருந்தும் பாஹிக்காக பொறுத்திருந்தான்..  உண்மையிலேயே தேவா என்கிற ஒருத்தன் இருக்கிறானா என்கிற சந்தேகம் மட்டுமே கடைசியில் கேள்விக் குறியாக நின்றது.. அவனைக் கண்டது ராஜி மட்டுமே.. அவளைத் தவிர வேறு யார்க்கும் அவனை அடையாளம் தெரியாது..

விசாகன் தனது நண்பனையும் சூப்பர்மேனையும் மிகவும் தேடினான்.. ஆனால் சுந்தர்  விசாகனை வாசுவின் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்து விட்டான்.

உதயன் கூட சிறிது நாட்கள் அழுதுவிட்டு பின்பு அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள குழந்தைகளுடன் நட்புறவை வளர்க்க ஆரம்பித்தான்.. அவன் சின்னப் பையன் தானே.. அவனுக்கு தெரிந்தது அவ்வளவே..

ஏனோ அவர்களிடம் இருந்த கொஞ்ச நிம்மதியும் ராஜி கருவுற்றிருந்த செய்தியில் பறந்து போய்விட்டது. சுந்தர் வீடு தேடி வாசுவை மிரட்டி விட்டு சென்றான். வாசுவோ தன் நண்பனே தன்னை நம்பவில்லையே என விரக்தி அடைந்தான்.

ராஜியின் நிலையோ பரிதாபம்.. நயவஞ்சகனை நாயகன் என நம்பி தன்னையும் இழந்து தனக்கு உதவிய பாவத்திற்கு வாசுவினையும் வாட்டிவிட்டு சாகவும் முடியாது வாழவும் முடியாது நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் ரேவதியைத் தவிர்த்து யாருமே பேசவில்லை.. நாகராஜனுமே அவள் செய்கையால் கோபமாகத் தான் இருந்தான். அவளுக்கு ஒரே ஆதரவு விசாகன் மட்டுமே.. தன்னுடன் விளையாட யாருமே இல்லாததால் ராஜியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை  ஏஞ்சல் ஏஞ்சல் என எந்நேரமும் கொஞ்சிக் கொண்டே திரிந்தான்.

" ராஜி ஏஞ்சல் சீக்கரமா வந்து எங்கோட விளையாடும்ல..தயா மாறி வுட்டுட்டு போவாதுல.. நான் ஏஞ்சல் வரக்குள்ள சூப்பர்மேன் மாதிரி பெரிசாயிட்டா ஏஞ்சல் வந்தவொடனே தூக்கி சுத்துலாம்ல " என எந்தப் பேச்சிலும் அவன் உதயனையும் வாசுவையும் இழுக்காமல் இருக்க மாட்டான். அவள் வாழ்வதே அந்த குழந்தைக்காக தான்.. அவளது காதலால்

அனைவரது வாழ்க்கையும் சூன்யமாகிப் போனது..

இன்னும் நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்களா..இன்னும் உங்களை நான் அழ வைக்கிறேன் என விதி தன் விளையாட்டைத் துவங்கியது..

அன்று வாசு அதிகாலையிலே எங்கோ கிளம்பிச் சென்றிருந்தான்.

பாஹீ உதயனை பள்ளிக்குத் தயாராக்கிக் கொண்டிருந்த வேளை அவள் காதில்

விழுந்த செய்தியைக் கேட்டு விழுந்தடித்துக் கொண்டு தன் பிறந்தகத்திற்கு சென்றாள்.

அவள் உள்ளே நுழைய அங்கே அவளது தந்தை, சுந்தர் ரேவதியின் சடலங்கள் வெள்ளைத் துணி போர்த்தி  வைக்கப்பட்டிருந்தது.. ராஜியும் மரகதமும் அழுவதற்கு கூட  திராணியற்று அவர்களையே பார்த்திருந்தனர்.பாஹீயால் கண்களால் காண்பதை நம்பக்கூட முடியவில்லை.. தன்மேல் உயிரையே வைத்திருந்தவர்கள் தற்போது உலகில் இல்லை என்பதை.. துவண்டுபோய் அப்படியே அமர்ந்து அமைதியாக கண்ணீர் வடித்தாள்.

ராஜியும் மரகதமும் மருத்துவமனைக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்தேறியதால் இதனை யார் செய்ததென்றே யாருக்கும் தெரியவில்லை.

காவலர்கள் தங்கள் கடமையைச் செய்து விட்டு கிளம்பிட மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை நாகராஜன் அழுது கொண்டே விசாகனை செய்ய வைத்தான்..

நாகராஜனுக்கு திடீரென தன் தலைமேல் ஆயிரம் பொறுப்புகள் வந்துவிழுந்ததைப் போல உணர்ந்தான்.இனி அவன் மட்டுந்தானே இந்த வீ்ட்டின் பொறுப்புகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.. மனத்தை கல்லாக்கிக் கொண்டு அனைத்தையும் செய்து முடித்தான்.

மூன்றாம் நாள் காரியம் செய்து முடித்து உறவினர்கள் கிளம்பிய பின்னரே தலையில் கட்டுடன் உள்ளே நுழைந்தான் வாசு.. அவனுமே தகவல் அறிந்து வரும்போது அவனது கவனக் குறைவால்  விபத்து ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி மூன்று நாட்கள் மருத்துவமனையில் அநாதையாக கடந்தவன் சுயநினைவு அடைந்த உடனே அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தான்.

வந்தவனை யாரும் விசாரிக்கும் நிலையில் கூட இல்லை.. அவர்கள் பாட்டிற்கு சோகமாக அமர்ந்திருந்தனர். பாஹியை நெருங்கியவனை

" ஏன் வாசு இப்படி பண்ண.. " என பாஹி விரக்தியாக கேட்க,அவனோ புரியாமல் அவளையே பார்த்திருந்தான்.

" ஏன் எங்கப்பாவ கொன்ன.. எங்கண்ணா மதினிலா என்ன பாவம் பண்ணாங்க..உன்னைத்தானே நம்புனாங்க.. ஏன் அவுங்கள கொன்ன.. "

" பாஹி பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு.. நான் போயி..ச்சே.. இதான் எம்மேல வெச்சிருக்க நம்பிக்கையா "

" அதான் எந்நம்பிக்கைய குழி தோண்டி பொதைச்சிட்டிங்களே நீயும் என் தங்கச்சியும் "

" ஏய் என்னடி நினைச்சு பேசிட்டு இருக்க.. எம்புருசன் அப்படி பட்டவர் கிடையாதுன்னு சொல்லிட்டு திரிவ..இப்போ நீயே எனைய தப்பா பேசற.. போதும்டி இதுக்கு மேல நீ பேசுனா என் கை தான் பேசும் பார்த்துக்க "

" உண்மைய சொன்னா கோபம் வருதா.  அன்னைக்கு எங்கண்ணன் வாசுக்கு எதிரா ஆதாரம் கிடைச்சிருச்சுனு போன் பண்ணும்போதே பின்னாடி உன் குரல் கேட்டுச்சு வாசு..ஆனா அப்போ கூட உம்மேல இருக்கற நம்பிக்கைல தான் இங்க வந்தேன்.. ஆனா நான் இங்க வரும்போது எங்கண்ணா உயிரோடவே இல்ல.. அவுங்க மூனு பேத்தையும் நீதான் கொன்ன"

" அடிச்சேனா பல்லு தெறிச்சிக்கிட்டு போயிரும்.. நான் என்னடி தப்பு செஞ்சேன்..எனக்கு எதிரா ஆதாராம் கிடைக்க.

அவன் உனக்கு அண்ணனா..எனக்கு நண்பன் டி.. அவன கொல்ல நான் என்ன அரக்கனா ..சொல்லுடி உன் வாசு என்ன அரக்கனா "

" இல்லை என் வாசு அரக்கன் இல்ல..ஆனா நீ தான் வாசு இல்லையே..இதான் இங்க நிக்கறாளே ராஜி அவளோட காதலன் தேவா.. உங்களுக்கு தடையா இருக்கிறது யாரு நாங்க தான அடுத்து எங்களையும் கொன்னுடு." என்றதும் வாசு உண்மையில் இதைத்  தன் பாஹியா சொன்னது என குழம்பிப் போனான்..

" ஆதாரம் கேட்டியே இதான் எங்கப்பா கையால எழுதுன டைரி.. நீ மோசமானவன்னு தான் அவரு உனைய வேணானு சொன்னாரு..நான்தான் புத்திக் கெட்டுப் போயி உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..அப்பவும் எங்கப்பா எனக்கெதும் ஆயிடுமோன்னு தான் வீட்டோட என்னைய தங்க வெச்சிருந்துருக்காரு.. ச்சே நான் தான் அதைலா தெரிஞ்சுக்காமலே இருந்துட்டேன்.

அடுத்து இது

நீயும் ராஜியும் கல்யாணம் பண்ணும் போது கோயில்ல எடுத்த போட்டோ.. அன்னைக்கு நீ போட்ருந்த நீலச்சட்டைல ராஜி சொன்ன மாதிரி செமையாத்தா இருக்க " என நக்கலாக சொல்ல

" போதும் பாஹி.. என்னால இதுக்கு மேல தாங்க முடியாது.. நீ இப்டி பேசறத பார்த்தா நம்மளோட இத்தனை வருச காதல்..நாம வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே பொய்யா போச்சுங்கற மாறி தோனுது.. நீயாடி எனைய அப்டி சொல்ற..

. அதுக்கு நீயே ஆசை தீர எனைய கொன்னுடுடி. பாஹி..

நான் இதைலா கேட்காமலே செத்துடுறேன்" ,என அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து விட்டான். அவனை அந்நிலையில் காண சகியாது தன் கவனத்தை ராஜியிடம் திருப்பினாள்.

"எங்க நான் தோத்து போனேனு தெரில பாஹி " என கதற அதனைப் பொருட்படுத்தாது ராஜியை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.. மரகதம் கூட அதனை தடுக்கவில்லை..

வாசு எழுந்து ராஜியை அவளிடம் இருந்து பிரித்து விட்டு " பாஹி..உனக்கு அறிவு இருக்கா இல்லையா..நிறை மாசமா இருக்கற பொண்ண இப்டி தான் அடிப்பியா.. என் பாஹி இப்படிலா நடந்துக்க மாட்டாளே..நீ யாருடி " என வலியோடு கேட்க வாசுவைக் கட்டிக் கொண்டவள்

" எனக்குத் தெரில வாசு.. எனக்கு என்ன ஆகுதுனே தெரில..இத்தனை ஆதாரம் என் கைல இருக்கும்போதும்  உன்னை என்னால சந்தேகிக்க மனசு வர மாட்டிங்குது.. என் மூளை சொல்லுது.. நீதான் கொலை காரன்னு.. ஆனா என் மனசு என் வாசு அப்படி இல்லைன்னு சொல்லுது.. எனக்கு நீ சொன்ன மாதிரி பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.. நான் உனைய நம்பறேன் வாசு.. ஆனா ராஜிய என்னால நம்ப முடியல..இவளப் பார்த்தாலே எனக்கு போட்டியா வந்த மாதிரியே இருக்கு. இவ எனைய எங்கிட்டருந்து உன்ன பிரிச்சிடுவாளோன்னு பயமா இருக்கு.. நீ என் வாசு.. என்னை விட்டு எங்கயும் போகக் கூடாது..அதான் அவள ...அவள என் கையாலயே கொன்னுடலாம்னு தோனுது " என இதுவரை அழுது கொண்டு பேசிக்கொண்டிருந்தவள் மீண்டும் ராஜியை முறைத்துக் கொண்டே அடிக்க முயற்சிக்க, அவளை இறுக்கிப் பிடித்த வாசு

" அவ பாவம் பாஹி.. அவ ஏற்கனவே செத்துட்டு இருக்கா..நீயும் கொல்லாத.. " எனத் தடுக்க, ராஜிக்கு துணையான அவன் பேச்சில் தன்னிலை மறந்தவள் ஒரே உதறலில் அவனைத் தள்ளிவிட்டு ராஜியை நெருங்கி விட்டாள்.. அவளிடம் இருந்த மென்மை இப்போது காணாமல் போயிருந்தது.. அவளது ஆங்காரக் கோபம் அவளை ஆட்கொண்டது..

அவளை மரகதத்தாலோ நாகுவாலோ தடுக்க முடியவில்லை.. ராஜியின் தலை முடியை கொத்தாக பிடித்துவிட, அதுவரை உள்ளறையில் அழுது கொண்டிருந்த விசாகன் சத்தம் கேட்டு எழுந்து வர, அங்கே பாஹி தனது ராஜி அத்தையை அடிப்பதை பார்த்துவிட்டு பாஹியின் கால்களை தன் பிஞ்சு கைகளால் அடிக்க ஆரம்பித்தான்..

" விடு ராஜிய விடு..ஏஞ்சலுக்கு வலிக்கும்..விடு.. சூப்பர்மேன்ட சொல்லி வெச்சிடிவேன் " என அடிக்க

அவனை ஒரு கையால் தட்டிவிட, தள்ளி விட்ட வேகத்தில் அவன் தலை நாற்காலியில் இடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்தது.. அவள் வேண்டும் என்றோ அவனுக்கு அடிபட வேண்டும் என்றோ தட்டிவிடவில்லை..

மரகதம் ஓடி வந்து விசுவைத் தூக்கிக் கொள்ள, பாஹியை ஓங்கி ஒரு அரை வைத்தான் வாசு..

" எல்லை மீறி போயிட்ட பாஹி.. நானும் உனக்கு கோபம் வரக் கூடாதுன்னு பொறுமையா இருந்தா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கர்ப்பிணிப் பொண்ணு பச்சைக் குழந்தைன்னு யாரையும் பார்க்காம மிருகத் தனமா நடந்துக்கற.."

" ஆமா நான் மிருகந்தான் வாசு.. அதான் இப்படி நடந்துக்கறேன்.. ஆனா நீ மனுசன் தான..சொல்லு நீ மனுசந்தான.. அப்போ நான் சொல்றத செய்..இவள உங்கையால அடிச்சு தொறத்து... அப்போ நம்பறேன். நீ என் வாசு தான்னு..இந்தக் கொலைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு" அவன் அமைதியாகவே இருக்க, அவளது கோபம் முன்பை விட பல மடங்கு அதிகரித்தது.. ஆத்திரம் அதிகமாகி

மூளையை மழுங்கச் செய்தது..

" உனக்கு நான் முக்கியமா இல்லை ராஜி முக்கியமான்னு முடிவு பண்ணிக்கோ.. "

" என்னடி பேசற.. எனக்கு எல்லாமே நீ தானடி.. ஏன்டி இப்டிலா பேசற.. கோபத்தை குறைமா "

" போதும் நீ பேசிப் பேசியே என்னை ஏமாத்ததாத..உனக்கு நான் தான முக்கியம்.. அப்போ அவள அடிச்சுத் தொறத்து "

" "

" எனக்குத் தெரியும்.இது உங்குழந்தை தான் அதான் அவள ஒன்னும் சொல்ல மாட்டிங்கற.அப்போ நான் உங்கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்.. அப்போ உனக்கு எதுக்கு பொண்டாட்டிய நான் இருக்கோனும் "  என சொல்லியவள் கோபத்தில் கண்கள் சொறுக தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி எறிந்துவிட்டாள்..அவனுக்கு எங்கு அடித்தால் வலிக்குமோ அதையே செய்து விட்டாள் இந்த பைத்தியக்காரி..

எந்த இடத்தில் அவன் தாலி கட்டினானோ..எந்தக் கோபத்தால் அவர்களது திருமணம் நடந்ததோ அதே இடத்தில் அதே கோபத்தால் எல்லாம் முடிந்தது.. இதைவிட வாசுவிற்கு வேறு தண்டனை வேண்டுமா.. பாஹியின் வாசு அங்கேயே செத்துவிட்டான்..

அவள் தோள்பற்றி " போதும் பாஹி.. என் காதலுக்கு நீ கொடுத்த வெகுமதி.. எனக்காக நீ என்மேல வெச்சிருந்த அந்த தூய்மையான காதல சத்தியமா வெச்சுக் கேட்கறேன்.. எனக்காக ஒன்னே ஒன்னு செய்வியா.. "

" என்ன "

" என்னை நீ அடுத்து பார்க்கற வரைக்கும் யார் மேலயும் கோபப்படவோ.. இல்லை வார்த்தையவோ விட்றாத.. உங்கோபத்தால பாதிக்கப்பட்ட கடைசி ஆளா நானே இருந்துட்டு போறேன்.. இனி உன் கண் முன்னால எக்காரணத்த கொண்டும் வரமாட்டேன்.. " என்றவனுக்கு அதற்கு மேல் அவளிடம் பேச ஒன்றுமே இல்லை.. அவளை இன்னும் கோபப்படுத்திப் பார்க்க அவனிடத்திலும் தைரியமில்லை.. அவன் இப்போது வெறும் செத்த பாம்பு மட்டுமே..

உதயனையும் விசாகனையும்  தூக்கிக் கொண்டு ராஜியிடம் வந்தவன் "  வா ராஜி..இங்க இருந்தா அவ உன்னை கொன்றுவா.. நானே எதாச்சும் ஹாஸ்டல்ல சேர்த்தாச்சும் பார்த்துக்கறேன் " என்க அவளோ " வேணாம் மாமா..அக்கா ஏதோ கோபத்துல இப்படி நடந்திக்கறா..கோபம் போணா உங்களை தான் தேடுவா.. "

" அவ தேட மாட்டா..தேடவும் வேணா.. அவ இனி நம்மள பார்த்தா அவளுக்கு அது நல்லதுல்ல.. அவ சொன்னதே உண்மையா இருக்கட்டும்.. உன் வயித்துல இருக்குற குழந்தைக்கு நானே அப்பாவ இருந்துட்டு போறேன்.. நீ இங்க இருக்காத ராஜி.. எம்மேல நம்பிக்கை இருந்தா..என்னால உனக்கோ உன் கற்புக்கோ எந்த ஆபத்தும் வராதுன்னு நினைச்சினா எங்கூட வா ராஜி.. " என்க, அவன் குரலில் உள்ள வலியை உணர்ந்தவள் தான் செய்த பாவத்திற்கு தன் குழந்தை ஏன் சாக வேண்டும் என நினைத்துக் கொண்டு தன்னை நம்பாத தன் குடும்பத்தவர்களை மனதிலிருந்து உதறிவிட்டு வாசுவோடு புறப்படத் தயாரானாள்.

விசாகன் வலியில் விம்மிக் கொண்டிருக்க அவனை கையில் வாங்கிக் கொண்டு  ராஜி

நடக்க ஆரம்பிக்க, உதயனையும் விசாகனையும் நாகு வாங்க முயற்சித்தான்.

வாசு நினைத்தால் அவனை எளிதாக தடுத்திருக்க முடியும்..ஆனால் அவனிடம் போர் புரிய நெஞ்சில் வலு இல்லை.. திரும்பி பாஹியைப் பார்க்க அவளோ ஓடி வந்து உதயனை வாங்கிக் கொண்டாள்.

" இவன் என்னோட காதலுக்குப் பிறந்தவன் எங்கிட்டதான் இருக்கனும்..அதான் உனக்கு உன் காதலி வயித்துல இருக்குற புள்ள இருக்குல " என்றதும்

" பாஹி நிஜமா நான் உனக்கு வேணாமா " என்ற குரலில் அத்தனை எதிர்பார்ப்பு..எங்கே அவள் அவனை கட்டிக் கொள்ளமாட்டாளா என்கிற ஆசை..அவள் தன்னை வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்கிற பரிதவிப்பு..

அவள் அப்பவும் உதயனை நாகுவிடம் கொடுத்துவிட்டு ராஜியிடமிருந்த விசாகனை வாங்கிக்கொண்டு " இவன வளர்க்கிற பொறுப்ப எம்புருசன் எங்கிட்டதான் தந்தாரு..வாசுதான் விசுவையும் உதயாவையும் பிரிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. எம்புருசன பிரிச்சது போதும் எம்பசங்களையும் என்ட இருந்து பிரிக்காத "என்றவள் வாசுவை திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்.

நெஞ்சமெல்லாம் இரணமாய் தகிக்க அழுது கொண்டிருந்த ராஜியை அழைத்துக் கொண்டு தன்னில்லத்திற்கு வந்த சில நிமிடங்களில் ராஜிக்கு வயிற்று வலி வந்திட அவளை மருத்துவமனையில் சேர்த்தான்..

ராஜி அந்நிலையிலும் " மாமா எங்குழந்தைய அநாதையாக்கிடாதீங்க மாமா..நல்லா பாத்துக்கோங்க மாமா " என்றபடியே மயங்கிட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர்..ஆனால் ராஜியின் உயிர் குழந்தை பிறந்ததும் பிரிந்துவிட்டது.. தன்னிலையை எண்ணி வருந்திக் கொண்டவன் குழந்தையும் இறந்துவிட்டது என்று யார் கேட்டாலும் சொல்லி விடுங்கள் என்று மருத்துவரிடம் கூறிவிட்டு குழந்தையையும் தன் தாயையும் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே சென்றுவிட்டான் வாசுதேவன்..

விசாகனுக்கு தலையில் அடிப்பட்டதால் காய்ச்சலுடன் ஜன்னியும் வந்துவிட்டது.. அவன் அந்த குளிர்ஜூரத்திலும் " சூப்பர்மேன் " என்றே அனத்திக் கொண்டிருந்தான்.. சாவின் விளிம்பிற்கு சென்ற அவன் கடவுள் புண்ணியத்தில் பிழைத்துவிட்டான்.. பாஹியின் வெள்ளை நிறச் சேலையை கண்ட அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்தான் வாசு இன்னும் உயிரோடு இருக்கிறான் என்ற தகவலை அதிர்ச்சியோடு கூறிவிட்டு ரோகிணியின் பிறப்பையும் கூறிவிட்டுச் சென்றார்.. ராஜியின் பெண் உயிரோடுதான் இருக்கிறாள் என்ற உண்மை பாஹிக்கு மட்டுமே தெரியும்..

வாசுவின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு பாஹி

கோபம் என்ற ஒன்றையே மறந்துவிட்டார். அவர் நிதானமடைந்தும் அவர் மனதில் வாசுவும் தேவாவும் ஒன்று என்கிற உண்மை ஆளப்பதிந்திருந்தது.. அதில் அவளுக்குத் தேவையான வாசு அவனுடன் வந்து சேர வேண்டும் என ஆவல் கொண்டவள் ராஜியின் காதலன் தேவாவைக் கொல்ல நினைத்து அதனையே மனதில் ஜெபம் போல ஜெபிக்க ஆரம்பித்தாள்.. விசாகனுக்கு ஜன்னியின் காரணமாய் நினைவுகள் அழிந்ததும் அவளுக்கு நன்மையாகிட குழந்தைகள் இருவரிடமும் உண்மையை மறைத்து கார் விபத்தில் மாணிக்கம், சுந்தர், ரேவதி, வாசு , ராஜி என ஐவரும் இறந்து விட்டனர் என்று நம்ப வைத்து தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விற்றுக் கொண்டு வேறு ஊருக்கு வந்துவிட்டனர். பாஹீ வெறும் ஈஸ்வரியாய் மாறிப் போனாள்.. கோபத்தால் இரு உயிர்களை வாட்டிவிட்டு தற்போது சாந்த சொரூபணியாக காட்சி அளித்தாள்

பெண்ணின் கோபம் குடும்பத்துக்கு ஆகாது என்கிற பழமொழி பாஹீயின் விசயத்தில் உண்மையாகிப் போனது.. அவளது கோபத்தால் அவள் இத்தனை வருட காதலையும் இழந்து, தன் தங்கையின் அன்பையும் இழந்துவிட்டாள்.. நடந்ததில் யாரைக் குறறம் சொல்ல,

மாணிக்கம் தன் மனதில் உள்ளதை ஆரம்பத்திலே கூற மறுத்தது ஏன்?

மரகதம் பார்வையில் வாசு மட்டுமே  குற்றவாளியாகத் தெரிந்தது ஏன்?

வாசு திரும்பி வாசுவாகவே வரும்வரை தன் கோபத்தை விடுத்து அவனுக்காகவே காத்திருக்கும் பேதை அவன் அன்பினை பரிசோதித்தது ஏன்?

தன் மனைவியை உயிராக நேசித்தவன் அவளது மனநிலை தெரிந்தும் தன்னை நிரூபிக்காமல் கோழை போல் ஊரை விட்டு சென்றது ஏன்?

தேவாவை கண்டுபிடிப்பதில் கோட்டை விட்டது எப்படி?

அந்தக் கொலைகளை செய்தது தேவா என்றால் அவன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?

அவன் மீண்டும் வந்தால்?

தன் மகளிடம் உரிமை கோரினால்?

தன் கணவன் கூறியது போல் அவனைக் கண்டதும் கோபத்தை மாலையாக்கிக் கொண்ட பாஹீயின் நிலை?

என அனைத்துக் கேள்விகளின் பதிலையும் அத்துடன்  இளஞ்சோடிகளின் காதலையும் இனி நிகழ்காலத்தில் காண்போம்..

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

பிளாஸ்பேக்க இந்த எபில முடிக்கனும்னு சொன்னதால முதல் தடவை பெரிய அப்டேட்

பண்ணியிருக்கேன்..அதனால் மன்னிச்சு..

உங்களுக்கு பிளாஷ்பேக் நல்லா இருந்துச்சானு கட்டாயம் சொல்லுங்க..மக்களே.. கை வலிக்க வலிக்க டைப் பண்ணியிருக்கேன்.. பாத்து சொல்லுங்க.. பாஹீயயும் வாசுவையும் திட்றதா இருந்தா தாராளமா திட்லாம்..மாத்தி என்னைய திட்டிராதீங்க.. ☺️☺️

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz