ZingTruyen.Xyz

கல்யாணம் டூ காதல்

3 திருமணம்

NiranjanaNepol

3 திருமணம்

சேதுபதியின் குடும்பம் எனக்காகக் கொடுத்து அனுப்பிய பட்டு வேட்டியை வெறித்துப் பார்த்தபடி இருந்தேன். அது, கை அகல தங்க ஜரிகையுடன், அவர்களது குடும்ப வளத்தை, அலட்டலாய் கூறிக் கொண்டிருந்தது. எனக்கு வேட்டி சட்டை அணிவதில் விருப்பம் இருந்ததில்லை. அது எனக்கு வசதியாய் இருப்பதில்லை. கோட்டும் சூட்டும் தான் எனக்கான உடை. ஆனால் இது என் திருமணம். இன்று நான் வேட்டி கட்டித் தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது சேதுபதி குடும்பத்தின் கௌரவம் பற்றிய விஷயம்.

என் குடும்பத்தில் இருந்த எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள், என்னைத் தவிர. ஹாசனியும் தான்...

அப்பொழுது தான் எனக்கு அவள் ஞாபகம் வந்தது. அவள் எங்கே இருக்கிறாள்? இந்தத் திருமணத்தை நிறுத்தாமல் போனதற்காக என்னை எப்படி எல்லாம் 'வைத்து செய்யப் போகிறாளோ' தெரியவில்லை. நான் எப்பொழுதுமே பெண்களை மரியாதை இல்லாமல் பேசுகிறவன் அல்ல. என் அம்மா என்னை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், நான் அவளிடம் மரியாதை இல்லாமல் பேசினேன். அவள் பேசிய விதம், என்னை அப்படிப் பேச வைத்தது. அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் என்ன? அவளால் மரியாதையாய் பேச முடியாதா? அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அதை கொஞ்சம் தன்மையாய் கூறி இருக்கலாமே! நான் எப்படித்தான் ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்ணை எதிர்கொள்ளப் போகிறானோ தெரியவில்லை. அவளுடன் ஒரே வீட்டில் இருக்கப் போவதை நினைத்தாலே எனக்கு வெறுப்பாய் இருந்தது.

அப்பொழுது, என் அக்கா குதூகலமாய் என்னிடம் ஓடி வந்தார்.

"நீ இன்னைக்கு நிச்சயம் மயக்கம் போட்டு தான் விழப்போற," என்று என் அக்கா அதே குதுகலத்துடன் சொன்னது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

"மயக்கமா? எதுக்குக்கா?"

"இன்னைக்கு ஹாசினி செம்ம்ம்ம அழகா இருக்கிறதைப் பார்த்து தான்..." என்று கூறிவிட்டு சிரித்தார்.

அட போங்கடா! என்று இருந்தது எனக்கு.

"ஹாசினி சாதாரணமாவே ரொம்ப அழகா இருப்பாங்க. இன்னைக்கு வேற லெவல்..." மறுபடியும் சிரித்தார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

" உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்குத் தெரியும். எல்லாமே உன் கையில தான் இருக்கு. நீ நெனச்சா, அதை உனக்குச் சாதகமா மாத்திக்க முடியும். அதை புரிஞ்சுக்கோ, கெளதம் " அக்கா கெஞ்சினார்.

சரி என்று மெல்ல தலையசைத்தேன்.

"ஹாசினியோட ஃபேஸ் பளபளன்னு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? அவங்களைப் பார்த்த உடனே நீ உன் கவலையை எல்லாம் மறந்துடுவ, பார்!" என்று, இன்னும் ஒரு பிட்டை சேர்த்து போட்டார் அக்கா.

அவள் முகம் பளபளவென இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அவள்தான் இளவரசி ஆயிற்றே!

என்னை மேடைக்கு வரச் சொல்லி அழைத்தார் பண்டிதர். அக்காவும் மாமாவும் என்னை அழைத்துச் சென்றார்கள். மிக ஆடம்பரமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து, பண்டிதர் கூறியதைச் செய்தேன். எல்லோருக்கும் அவர்களது திருமண நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்திருக்கும், ஒருவேளை ஹாசினி மணப்பெண்ணாக இல்லாமல் இருந்திருந்தால்! என்னைப் பொறுத்தவரை இந்தக் கல்யாணம் ஒரு சிறை! நான் அன்று மிக பலவீனமாய் உணர்ந்தேன். என்னால் ஓடவும் முடியவில்லை, ஒளியவும் முடியவில்லை. அந்தத் திருமணம் என் மேல் திணிக்கப்பட்ட ஒரு கட்டாயம்.

பண்டிதர் மணப்பெண்ணை அழைத்து வரச் சொன்னார். ஹாசினியின் அறை இருந்த பக்கம், என் தலை அனிச்சையாய் திரும்பியது. அவளைப் பற்றி என் அக்கா செய்த வர்ணனை தான் அதற்குக் காரணம்.

அறையை விட்டு வெளியே வந்த அடுத்த நிமிடம், கேமராக்களின் ஃப்ளாஷ் மழையில் நனைந்தாள் ஹாசினி. அந்தப் பெரிய கல்யாண மண்டபத்தில் கூடியிருந்த அத்தனை பேரது கண்ணும் அவள் மீது தான் இருந்தது. சிலர் அவள் அணிந்திருந்த நகைகளைப் பார்த்தார்கள். பலர் அவள் அணிந்திருந்த நகையை விட அதிகமாய் ஜொலித்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இது தான் முதல் முறை, நான் ஹாசினியைப் பார்ப்பது. நேர்மையாய் கூற வேண்டும் என்றால், ஒருவேளை அவள் என்னிடம் தொலைபேசியில் பேசாமல் இருந்திருந்தால், நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவள் மீதிருந்து என் கண்களை எடுக்காமல், வெட்கமே இல்லாமல் அவளை சைட் அடித்திருப்பேன். சத்தியமாய் அப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை! இளவரசி என்றால் அப்படித் தான் இருப்பார்களோ! அவளை அடைய எத்தனை பேரை வேண்டுமானாலும் போட்டுத் தள்ளலாம். சந்தேகமே இல்லாமல் அவள் ஒரு தேவதை!

அவள் என் பக்கத்தில் வந்து அமர்ந்த போது, அவள் பேசிய அவமரியாதையான வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்தது. அதன்பிறகு அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், எங்கே இருக்கப் போகிறது? அவள் அழகாக இருந்தாள். மிக மிக அழகாக இருந்தாள். அதனால் எனக்கு என்ன?

பண்டிதர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். ஆனால் என் காதுகளில் அதெல்லாம் விழவே இல்லை. அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் தான் கேட்டுக் கொண்டிருந்தது. பண்டிதர் என்னிடம் தாலியைக் கொடுத்த பிறகுதான் எனக்குச் சுயநினைவு வந்தது. அதை வாங்கி ஹாசினியின் கழுத்தில் கட்டினேன்... அந்த வேண்டாத உறவில் என்னையும் சேர்த்து கட்டினேன்!

நான் தாலி கட்டிய போது, அவள் முகத்தை மிக அருகில் பார்த்தேன். அக்கா கூறியது போலவே, அவள் முகம், அப்படிப் பளபளத்தது. அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். ஒருவேளை என் முகத்தைப் பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

எங்கள் இருவருக்குமே அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. எங்கள் உடன் பிறந்தவர்களுக்காக அதை நாங்கள் ஏற்க வேண்டியதாய் போனது. என்னைப் பொறுத்தவரை, அது என் தங்கையின் சந்தோஷம் மட்டுமல்ல. எங்கள் வியாபார எதிர்காலமும் கூட! அதனால், அதில் மறுத்து பேச எதுவும் இல்லை. என் குடும்ப நலனுக்காக நான் பலிகடாவானேன்.

இந்த நிமிடத்தில் இருந்து நான் என் மகிழ்ச்சியை மொத்தமாய் தொலைக்கப் போகிறேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கப் போவதுமில்லை, என் வாழ்க்கையை நினைத்து பரவசம் அடையும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை.

எல்லோரும் கிளம்பும் நேரம் வந்தது. கண் கலங்காமல் உறுதியாய் இருந்த என் புது மனைவியைப் பார்த்து எனக்குக் குழப்பமாய் இருந்தது. அவள் அண்ணன் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருந்தான். நான் பல திருமணத்தைப் பார்த்திருக்கிறேன். கடைசியாய், கிளம்பும் போது, அழுதே தீர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இது தான் முதன்முறை, ஒரு பெண் தன் குடும்பத்தை விட்டு பிரிவதற்காக அழாமல் இருந்தது. அந்த ஒருத்தி என் மனைவி!

மறுப்புறம், என் தங்கை, என் அம்மாவையும் அக்காவையும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அவர்களும் அவளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது எல்லா திருமணத்திலும் வழக்கமாய் நடப்பது தான். ஆனால் என் மனைவியோ, வேறு ஒருவர் திருமணத்திற்கு வந்தவளைப் போல், வெகு சாதாரணமாக இருந்தாள்.

அப்பொழுது, என் பக்கத்தில் இருந்த ஹாசினியிடம், அவளுடைய அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். அவளுடைய அம்மா, வைரச்சுரங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தார். அவளது அப்பா மிக உறுதியாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றார். ஆனால் அது அவரால் முடியவில்லை. என்ன இருந்தாலும் அப்பா இல்லையா!

"ஓ மை டியர்... நீ இப்போ நம்ம ஃபேமிலியோட அம்பாசிடர். நம்ம குடும்ப கவுரவம் உன் கையில தான் இருக்கு. எதை செய்யறதுக்கு முன்னாடியும் யோசிச்சு செய். நீயும் தலை நிமிர்ந்து நடந்து, எங்களையும் அப்படியே நடக்க வை." என்று மிடுக்காய், வலிய உணர்ச்சிவசப்பட்டு பேசினார் திருமதி சேதுபதி.

எதுவும் கூறாமல் அமைதியாய் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஹாசினி. அவள் அவர்களைக் கட்டிப்பிடிக்கவும் இல்லை, ஆசீர்வாதம் பெறவும் இல்லை. அவளுடைய அப்பா தான் அவளைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். என் கண்ணில், உணர்ச்சியே இல்லாத கல்லால் ஆன சிலை போல் தெரிந்தாள் ஹாசினி!

சேதுபதி என் பக்கம் திரும்பினார். அது தான் எங்களுடைய அஃபிஷியலான முதல் சந்திப்பு. என் கையைப் பிடித்துக் கொண்டு,

"என் குழந்தையைப் பார்த்துக்கோங்க." நா தழுதழுக்க என்னிடம் கூறி, என்னைச் சங்கடப்படுத்தினார்.

நான் ஹாசினியைப் பார்க்க, அவள் அவரைப் பார்க்காமல் நின்றிருந்தாள். நான் சரி என்று தலை அசைத்தேன்.

என்னிடம் ஓடிவந்த நந்தினி, என்னைக் கட்டிக்கொண்டு,

"அண்ணா, ஐ வில் மிஸ் யூ." என்று அழுததைப் பார்த்தபோது, எனக்குத் தொண்டையை அடைத்தது. அவள் கையைப் பிடித்து சூர்யாவிடம் கொடுத்தேன்.

"நான் பார்த்துக்கிறேன்." என்ற வாய்மொழி உறுதி சூரியாவிடமிருந்து கிடைத்தது.

ஹாசினியை சூர்யா பார்த்த நேரம், அவள் மிக மென்மையாய் புன்னகை புரிந்தாள். நான் அசந்து போனேன். புன்னகைக்கும் போது, அவள் எவ்வளவு அழகாய் இருக்கிறாள்! நான் சில நொடி என்னை மறந்தேன்.

சூர்யாவும் நந்தினியும் அவர்களது காரை நோக்கிச் சென்றார்கள். அதே நேரம், நானும் ஹாசினையும் எங்கள் காருக்கு வந்தோம். மிக மிக பட்டாடோபமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரோல்ஸ் ராய்ஸ் எங்களுக்காகக் காத்திருந்தது. அது என் மாமியார் வீட்டில் எனக்குக் கொடுத்த கல்யாண பரிசு.

நாங்கள் காரில் அமர்ந்த உடனே, கசப்பைச் சுமந்த எங்கள் வாழ்க்கை பயணம் ஆரம்பமானது. நானோ ஹாசினியோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை. அடுத்தவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்த பிறகு, பார்த்துக் கொள்ளும் ஆர்வம் எப்படி வரும்?

என் மாமியார் வீட்டில் எனக்குக் கொடுத்திருக்கும் பங்களாவில், என் புது மனைவியோடு, நாளை நான் குடியேற வேண்டும் என்று நினைத்தபோது எனக்கு எரிச்சலாய் இருந்தது. அந்த வீடு எனக்கு சேதுபதி குடும்பத்தின் மற்றொரு பரிசு.

என் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. நாளை அது தரைமட்டமாகப் போகிறது. குடும்பப்பங்கான பெண் தான் எனக்கு மனைவியாய் வரவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கணவனின் அன்பு கிடைக்காத என் அம்மாவுக்கு, குறைந்தபட்சம் என் மனைவியாவது மன நிம்மதியைத் தர வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதை எல்லாம் நான் ஹாசினியிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவள் அரச பரம்பரையின் வெளிச்சத்தில் வளர்ந்தவள். அவளிடம் இருக்கும் எல்லாமே ஆடம்பரமானது. அவளுடைய பார்வை கூட தலைகணத்தோடு தான் இருக்கப் போகிறது...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz