ZingTruyen.Xyz

கல்யாணம் டூ காதல்

12 தவறான வரிகள்

NiranjanaNepol

12 தவறான வரிகள்

அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்து நின்றேன். முகத்தில் எந்தப் பாவனையையும் காட்டாமல், கம்பீரமாகவும், விரைப்பாகவும் இருக்கக்கூடிய ஒரு பெண், குழந்தைத்தனமாகவும் சினிமாத்தனமாகவும் இருக்க முடியும் என்பதை நான் எப்படி நம்ப முடியும்? அவளும் வாய்விட்டு சிரிப்பாள் என்பதை அன்று நான் தெரிந்து கொண்டேன். அவள் அப்படிச் சிரிக்கும் போது, அந்த இடம் முழுவதும் ஒளிர்வது போல் இருந்தது. அந்த சிரிப்பில் நான் என்னை மறந்தேன்.

மழையில் நனைந்து கொண்டே, அவள் கால்களால் தண்ணீரை உதைத்தாள். அந்த தண்ணீர் என் மீது பட்டது. அப்பொழுது தான், மழையில் நனைந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை அவள் கவனித்தாள். அவள் முகபாவனை மாறியது. ஏனென்றால் என்னிடமும், வெளி உலகத்திடமும் அவள் ஒளித்து, மறைத்து வைத்திருந்த அவளது குழந்தைத்தனம் வெளிப்பட்டுவிட்டது. அவளுடைய இந்தப் பக்கத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதை நிச்சயமாய் என்னால் கூற முடியும்... சூர்யாவுக்குக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னைப் பார்க்காமல் சங்கடத்தோடு நின்றாள்.

புதிதாய் மலர்ந்த ரோஜா மலரில் இருந்து பனித்துளி சொட்டுவது போல் இருந்தாள் ஹாசினி. என் மனைவி எவ்வளவு அழகு! ஆம், அவள் என் மனைவி தான். நான் தான் எங்கள் இடையில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்று சபதம் செய்திருக்கிறேனே! என் கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்தேன். அவள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்த போது, என் சிரிப்பு விரிவடைந்தது.

எங்கள் அறையை நோக்கி அவசரமாய் நடந்தாள். சிரித்தபடி நான் அவளைப் பின்தொடர்ந்தேன். அவள் எங்கள் அறைக்குப் பக்கத்தில் வந்த போது, மெல்ல கீழே எட்டிப் பார்த்தாள். நானும் அவள் பார்த்த திசையில் பார்த்தேன். அங்கு ஒரு பெண் அவளை நோக்கி மகிழ்ச்சியோடு கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். என்னைப் பார்த்தவுடன் அவள் விழிகள் பெரிதாயின. நான் ஹாசினியைப் பின்தொடர்ந்து வருவேன் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. என்னைப் பார்த்தவுடன் அந்த இடத்தை விட்டு ஓடிப் போனாள். ஹாசினி அவளிடம் என்ன சைகை காட்டினாள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னால் யூகிக்க முடிந்தது. பின்னால் வரும் என்னைப் பார்க்கச் சொல்லித் தான் அவள் சைகை செய்திருக்க வேண்டும்.

அவர்களது செயல்பாடுகளைகை கவனித்த எனக்கு, பொறி தட்டியது. மெயின் போர்டு இருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். எதிர்பார்த்தபடி ஃபியூஸ் கேரியர் லேசாக வெளியே இழுக்கப்பட்டிருந்தது. அப்படி என்றால், அப்படிச் செய்து மின்சார வெட்டை ஏற்படுத்தியது அந்தப் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும்... ஹாசினியின் கட்டளையின் பேரில்!

இங்கும் அங்கும் பார்த்தபடி, எச்சரிக்கையுடன் அந்தப் பெண் மெயின் போர்டை நோக்கி வந்தாள். நான் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவளைக் கவனித்தேன். மெயின் போர்டின் அருகில் வந்த அவள், ஃபியூஸ் கேரியரை உள்ளே அழுத்தினாள். மின்சார இணைப்பு மீண்டும் பழையபடி மாறியது. நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து சென்றாள் அந்தப் பெண்.

ஆழமாய் யோசித்தபடி நான் அங்கேயே நின்றேன். இது சாதாரண குழந்தைத்தனமான விஷயமாய் மட்டும் எனக்குத் தோன்றவில்லை. மழையில் நனைவது வேண்டுமானால் சாதாரண விஷயமாய் இருக்கலாம்... ஆனால் அந்த ஆசையைத் தாங்கி நிற்கும் மனத்தின் ஏக்கம் சாதாரணமானதல்ல. முதலில், அரச பரம்பரையின் பழக்கங்களை வெகு கடினமாய் பின்பற்றிக் கொண்டிருக்கும் குடும்பத்தில், தனக்கு உதவுவதற்கு என்றே ஒரு பிடிமானத்தைப் பிடித்து வைத்திருப்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. அதன் பிறகு, மின்சாரத்தைத் துண்டிக்கவும் மழையில் நனையவும் திட்டமிடுதல் என்பதெல்லாம் சற்று வீரியமாக தோன்றியது.

நான் எங்கள் அறைக்குச் சென்றேன். ஹாசினி அவளுடைய தனி அறையில் இருந்தாள். அவள் உடைமாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நானும் குளியலறைக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டேன்.

நான் வெளியே வந்த போது டாலி கதவின் அருகில் காத்திருந்தாள்.

"ஹாசினி..." என்று அழைத்தேன்.

தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் ஹாசினி.

"டாலி வந்திருக்காங்க," என்றேன்.

"நான் உங்களுக்காகத் தான் சார் வந்தேன்," என்றாள்.

"எனக்காகவா?"

"ஆமாம், சார். உங்க சிஸ்டர்ஸ் உங்கள பாக்க வந்திருக்காங்க."

"என் சிஸ்டர்ஸா?" வெளியே வந்து கீழே பார்த்தேன்.

அக்காவும் அகிலாவும் என்னைப் பார்த்து சிரித்தார்கள்.

"வாங்க," என்றேன்.

அவர்கள் என் அறையை நோக்கி வந்தார்கள்.

"எதுக்காக அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? நேரா என் ரூமுக்கு வர வேண்டியது தானே?" என்றேன்

"அவங்க (என்று டாலியைச் சுட்டிக்காட்டி) வெயிட் பண்ண சொன்னாங்க... ராயல் கஸ்டம்...!" என்று சிரித்தார் அக்கா.

"சரி, உட்காருங்க."

வெளியே வந்த ஹாசினி அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது ஈரக் கூந்தலை விரித்து விட்டிருந்தாள்.

"என்ன திடீர்னு இந்தப் பக்கம்?" என்றேன்.

"மறந்துட்டியா?" என்று சினுங்கினார் அக்கா.

அய்யய்யோ! நான் எதை மறந்தேன் சத்தியமாய் எனக்கு ஞாபகம் இல்லை.

"அண்ணா, வர்ற சண்டே மித்ரா, நேத்ராவோட பர்த்டே." என்றாள் அகிலா.

ஹாசினி பிரகாசமாய் சிரித்தாள். நானோ தடுமாறிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நான் அதை மறந்து தான் விட்டேன். ஆனால் அதை என் அக்காவிடம் கூற முடியாது. எமோஷனல் டிராமா செய்து என்னைக் கொன்று விடுவார்.

"அது எனக்கு ஞாபகம் இருக்கு. நீங்க இங்க வந்ததுக்கான காரணம் என்னன்னு தானே கேட்டேன்?" என்று சமாளித்தேன்.

"மடையா, உன்னை இன்வைட் பண்ணத் தான் வந்தேன்." என்றார் அக்கா.

"என்னை இன்வைட் பண்ணவா?"

"உன்னை இல்ல. ஹாசினியை..." என்று சிரித்தார் அக்கா.

"ஷ்யூர்..." என்று அழகாய் புன்னகைத்தாள் ஹாசினி.

"அப்போ, நான் வர வேண்டாமா?" என்று கார்னர் செய்தேன்.

"அது எப்படி வராம போவ? உனக்கு இன்விடேஷன் வேணுமா?"

"நிச்சயமா இல்ல,"

"ஹாசினி நம்ம குடும்பத்துக்குப் புதுசு. அதனால மரியாதையோட அவங்களை இன்வைட் பண்ணணும்."

"அப்படின்னா, அடுத்த வருஷம் மரியாதையா இன்வைட் பண்ண மாட்டீங்களா?" என்று மீண்டும் அவரைக் கார்னர் செய்தேன்.

"அக்கா, நமக்கும் ஹாசினிக்கும் நடுவுல பிரச்சனை ஏற்படுத்தணும்னு, கௌதம் ஒரு முடிவோட இருக்கான்னு தெரியுது." என்று கிண்டல் செய்தாள் அகிலா.

ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு, அவசரமாய் தன் பார்வையை அகிலாவின் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஹாசினி.

"நான் கௌதமைப் பேர் சொல்லிமா கூப்பிடுறேன்னு தப்பா நினைச்சுக்காத, ஹாசினி. நான் அப்படிக் கூப்பிட்டுப் பழகிட்டேன். அவனுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆன உடனே, பெரியப்பா எங்க எல்லார்கிட்டயும், அவனை அண்ணன்னு கூப்பிடணும்னு ஸ்ட்ரிக்டா சொன்னாரு. ஆனா, அது ரொம்ப கஷ்டம் தெரியுமா?" என்று சோகமாய் கூறினாள் அகிலா.

"நான் உனக்கு அண்ணன். அதனால மரியாதையா கூப்பிடு." என்று நான் அவளைக் கிண்டல் செய்ய, அவள் மேலும் சோகமானாள்.

"நந்தினியை இன்வைட் பண்ணியாச்சா?" என்றேன்.

"ஏன்? அவ மித்ரா நேத்ராவோட சித்தி. அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னாலும் அவ பார்ட்டிக்கு வந்து தான் ஆகணும்." என்று உதடு சுழித்தார் அக்கா.

"அப்படின்னா மாப்பிள்ளையைக் கூப்பிடலயா?"

"நான் அவர்கிட்ட ஃபோன்ல பேசிட்டேன். அவர் உடனே ஒத்துக்கிட்டாரு. ஒரு கேள்வி கூடக் கேட்கல."

ஹாசினியின் முகத்தில் சஞ்சலத்தைக் கவனித்தேன். ஏதோ தவறு நடந்து விட்டதோ? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்பொழுது ஹாசினிக்குத் தும்மல் வந்தது. எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். அவள் சங்கடத்தோடு எங்களைப் பார்க்க, நான் கிண்டலாய் சிரித்தேன்.

"என்ன ஆச்சு,ஹாசினி? உனக்கு இந்த வெதர் ஒத்துக்கலையா?"

என்னைப் பார்த்த ஹாசினி, ஆமாம் என்று தலையசைத்தாள்.

"சரி, நாங்க கிளம்பறோம்," என்றார் அக்கா.

"எங்களோட டின்னர் சாப்பிடுங்க," என்றாள் ஹாசினி.

"பரவாயில்ல, ஹாசினி, இருக்கட்டும்," என்று மறுத்தார் அக்கா.

"எங்க வீட்டுக்கு வர்றவங்கள நாங்க சாப்பிடாம அனுப்ப மாட்டோம்." என்றாள் ஹாசினி.

"அக்கா, விட்டா ஹாசினி நம்மள சேர்ல கட்டிப் போடச் சொல்லி அவ சார்வன்ட்டுக்கு ஆர்டர் போடுவா போலருக்கு," என்று சிரித்தாள் அகிலா

"தேவைப்பட்டா, செய்வேன்," என்றாள் ஹாசினி.

எனக்கு ஆச்சரியமாய் போனது.

"வாங்க," என்று நடந்தாள் ஹாசினி.

உணவு மேஜையைத் தயார் செய்யச் சொல்லி ஜானகிக்குக் கட்டளையிட்டாள் ஹாசினி. திடீரென்று வந்து விட்ட என் சகோதரிகளுக்கு எப்படி இவர்கள் உணவு பரிமாறப் போகிறார்கள் என்று எனக்குள் கேள்வி எழுந்தது. நாங்கள் சற்றே காத்திருந்தோம்.

ஹாசினி மீண்டும் தும்மினாள். அவளிடம் வந்த டாலி,

"யுவர் ஹைனஸ், நான் டாக்டரைக் கூப்பிடட்டுமா?" என்றாள்.

"வேண்டாம்," என்று கூறிவிட்டு மீண்டும் தும்மினாள் ஹாசினி.

அவள் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். அதற்காக என்னால் அமைதியாக இருக்க முடியாது.

"அடடா மழைடா அட மழைடா... இந்தப் பொண்ணு சிரிச்சா புயல் மழைடா... " என்று வரிகளை மாற்றிப் பாடினேன், மழையில் நனையும் பொழுது ஹாசினி சிரித்ததை மனதில் வைத்துக்கொண்டு.

தன் விழிகளை விரித்து என்னை அதிர்ச்சியோடு பார்த்தாள் ஹாசினி.

"கௌதம், எப்படித் தப்பான லிரிக்ஸை இவ்வளவு கான்ஃபிடண்டா பாடுற?" என்று என்னைக் கிண்டல் செய்து, அக்காவும் அகிலாவும் ஹைஃபை தட்டிக் கொண்டு சிரித்தார்கள்.

"நான் பாடறது கரெக்ட் இல்லயா?" என்று முகத்தை வெள்ளந்தியாய் வைத்துக் கொண்டு ஹாசினியைப் பார்த்தபடி கேட்டேன், உண்மையிலேயே எனக்கு அது தெரியாது என்பதைப் போல.

அவள் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

"அடடா மழைடா அட மழடா... அழகா சிரிச்சா புயல் மழைடா... " என்றார் அக்கா.

நம் மக்கள் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் சினிமா பாட்டைத் தவறாக பாடினால் மட்டும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள், ஏதோ தெய்வ குற்றம் நிகழ்ந்துவிட்டதைப் போல்.

"பரவால்ல விடுங்க, க்கா. என் பாட்டுக்கு யாராவது மார்கா போடப் போறாங்க?" என்று சிரித்துக் கொண்டு ஹாசினியைப் பார்த்தேன்.

அவள் என்னைப் பார்க்கவே சங்கடப்பட்டாள்.

சாப்பிட்டு முடித்த பிறகு, அக்காவும் அகிலாவும் கிளம்பத் தயாரானார்கள். அப்பொழுது ஹாசினி அக்காவிடம் ஏதோ மெல்லிய குரலில் கூறினாள். அது அக்காவைப் புன்னகைக்கச் செய்தது.

"அதெல்லாம் அவசியம் இல்ல, ஹாசினி.. "

"அவசியம் தான்... தட்ஸ் ஃபைனல்." என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசினாள் ஹாசினி.

வேறு வழி இன்றி, சரி என தலையசைத்தார் அக்கா. மீண்டும் அவள் ஏதோ கூற, அக்கா புன்னகை புரிந்தார்.

"சரி, நாங்க கிளம்புறோம்."

"என்னக்கா விஷயம்? நீங்களும் ஹாசினியும் ஏதோ ரகசியமா பேசிக்கிட்டீங்க?" என்றாள் அகிலா.

"அது ரகசியம்"

"என்கிட்ட கூட சொல்ல மாட்டியா?" என்று சிணுங்கினாள் அகிலா.

"சாரி, அது இளவரசியோட கட்டளை," என்று சிரித்தார் அக்கா.

ஹாசினியின் முகம் சில நொடிகள் மாறியது. அவள் மீண்டும் தன் முகத்தைப் பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டாள்.

அக்காவும் அகிலாவும் கிளம்பிச் சென்றார்கள். ஹாசினி எங்கள் அறையை நோக்கிச் சென்றாள். நான் என் சுற்றுவட்டாரத்தைப் பார்த்தேன். மின்சாரத்தைத் துண்டிக்க ஹாசினிக்கு உதவிய அந்தப் பெண் ஓரமாய் நின்றிருந்தாள். அவளை என்னிடம் வரச் சொல்லிச் சைகை காட்டினேன். அவள் வலப்புறமும் இடப்புறமும் பார்த்துவிட்டு, நானா? என்பது போல் கேட்டாள்.

"நீயே தான்," என்றேன்.

மென்று விழுங்கியபடி என்னிடம் வந்தாள்.

"உன் பேர் என்ன?"

"ஹரிணி, சார்,"

ஒரு அகலமான பாத்திரத்துல வெந்நீர் எடுத்துக்கிட்டு எங்க ரூமுக்கு வா," என்றேன்.

நிம்மதி பெருமூச்சு விட்டு, சரி என்று தலையசைத்தாள். நான் எங்கள் அறைக்குச் செல்ல, ஹரிணி சமையலறைக்குச் சென்றாள்.

சில நிமிடங்களில் வெந்நீரோடு எங்கள் அறைக்கு வந்தாள் ஹரிணி.

"அங்க வை," என்று கட்டிலைக் காட்டினேன்.

அதைக் கட்டில் மீது வைத்து விட்டு சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹாசினி, என்னைக் கேள்விக்குறியோடு பார்த்தாள்.

தலைவலி தைலத்தை அதில் சில சொட்டுகள் விட்டு,

"வந்து ஆவி பிடி," என்றேன்.

"எதுக்கு?" என்றாள்.

"உனக்கு சளி பிடிச்சுக்காம இருக்கத்தான்." 'நீ மழையில் நனைந்ததால்' என்று நான் கூறவில்லை.

"நான் இதையெல்லாம் இதுக்கு முன்னாடி செஞ்சதில்ல," என்று தயங்கினாள்.

"இதை செஞ்சா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ."

"எப்படிச் செய்யணும்னு செஞ்சு காட்டுறீங்களா?"

நான் சரி என்று தலையசைத்து, ஒரு தடிமனான போர்வையை எடுத்துக்கொண்டு ஹாசினியைப் பார்த்தேன்.

"வந்து எனக்கு முன்னாடி உட்காரு,"

"என்ன செய்யப் போறீங்க?"

"என்னை இந்த பெட்ஷீட்ல போத்திக்கிட்டு ஸ்டீம் எடுக்கப் போறேன்."

"ஓ..."

கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தாள். ஒருவேளை அவர்களது மருத்துவரிடம் இதையெல்லாம் செய்யலாமா என்று கேட்கிறாளோ என்று எண்ணினேன்.

கைபேசியை கட்டில் மீது வைத்து விட்டு எனக்கு முன்னால் அமர்ந்து கொண்டாள்.

"கேர்ஃபுல். தண்ணி ரொம்ப சூடா இருக்கு." என்று எச்சரித்தேன்.

சரி என்று தலையசைத்தாள்.

எங்களைப் போர்வையால் போர்த்திக் கொண்டேன். எப்படி ஆவி பிடிக்க வேண்டும் என்று அவளுக்குச் செய்து காட்டினேன். ஆரம்பத்தில், நேரடியாக அவள் முகத்தைத் தாக்கிய சூடு பொறுக்காமல், அவள் சற்று திணறினாள். இரண்டு மூன்று முறை மூச்சை இழுத்த பிறகு அவள் சகஜமானாள்.

அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் அந்தப் போர்வையை விலக்கி வாசலை நோக்கினோம். டாலி நின்று கொண்டிருந்தாள். நாங்கள் இருவரும் ஒரே போர்வையில் இருந்ததைப் பார்த்து அவள் சங்கடத்திற்கு உள்ளானாள்.

"என்ன?" என்றாள் ஹாசினி.

"உங்க கிட்ட இருந்து மிஸ்டு கால் வந்தது, யுவர் ஹைனஸ்."

தன் கைபேசியை எடுத்துப் பார்த்த ஹாசினி,

"தெரியாம கை பட்டு டயல் பண்ணி இருப்பேன்," என்றாள்.

எனக்கு ஆச்சரியமாய்ப் போனது. போர்வைக்குள் புகுவதற்கு முன் அவள் யாருக்கோ ஃபோன் செய்ததை நான் பார்த்தேனே...

டாலி எங்கள் அறையை விட்டுச் சென்றாள்.

"கண்டினியூ பண்ணலாம்." என்று சற்று உரக்க கூறினாள் ஹாசினி.

பின்னால் திரும்பிய டாலி, ஹாசினி மீண்டும் போர்வைக்குள் புகுவதைக் கண்டாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz