ZingTruyen.Xyz

காதலுக்குக் கண் உண்டு!

18 திட்டமிட்ட நாடகம்

NiranjanaNepol

18 திட்டமிட்ட நாடகம்

கட்டிலில் படுத்திருந்த மனிதனைப் பார்த்தபடி நின்றாள் ஹரிதா. சுதர்சனுக்குக் காயப்பட்டு இருக்கிறது. அவள் அதற்காக கவலைப்பட வேண்டும். ஆனால், அவள் மனதை ஏதோ ஒரு தொந்தரவு ஆட்கொண்டது. அது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை. சுதர்சனைப் பார்க்க வேண்டும் என்று அவள் ஆர்வத்தோடு காத்திருந்தாள். இப்பொழுது அவன் அவளுக்கு முன்னால் இருக்கிறான். ஆனால் ஏனோ அவள் மனது ஒரு நிலையில் இல்லை. அவளைப் பார்க்கச் சொல்லி உமாபதிக்குச் சைகை செய்தார் சிவகாமி.

"கடவுளே! இந்தப் பிள்ளை சென்னையில எவ்வளவு சந்தோஷமா சுத்திக்கிட்டு இருந்தது... எதுக்காக நீ அவனை இப்படி ஆக்கிட்ட? என் பொண்ணு அவனைப் பார்க்க எவ்வளவு ஆசையா வந்தா! அவ அவனைப் பார்க்கும் போது அவனால பேச முடியலையே..."

"அம்மா, இது ஐசியூ. சத்தமா பேசாதீங்க." என்றார் ஒரு செவிலி.

"வாங்க போகலாம்." என்று அவர்களை வெளியே அழைத்து வந்தான் உமாபதி.

அப்போது உமாபதிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதை ஏற்றான்.

"ஹலோ"

"........"

"ஆமாம்,"

"........"

"அப்படியா? ரொம்ப தேங்க்ஸ்."

"........"

"இன்னைக்கு உங்ககிட்ட இருந்து நான் சாவியை வாங்கிக்கிறேன். அதுக்குப் பிறகு தான் நாங்க பார்சல் சர்வீஸ் கம்பெனியில இருந்து எங்க பொருளை எல்லாம் கொண்டு வர முடியும்."

"........"

"ஆமாம், வீடு கிடைச்சதுக்குப் பிறகு அதை எடுக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்."

"........"

"வாடகை எவ்வளவு, சார்?"

"........."

"ஓ..."

"......."

"ஆமாம், சார். எங்களுக்கு அது அதிகம் தான். ஆனா எங்களுக்கு வேற வழியில்ல. எங்க ஃபிரெண்டுக்காக நாங்க இங்க இருந்து தான் ஆகணும்..."

"........."

"தேங்க்யூ சார்." அழைப்பைத் துண்டித்தான் உமாபதி.

"அது ஹவுஸ் புரோக்கரா?"

"ஆமாம் மா, வீடு தயாரா இருக்கு. ஆனா வாடகை தான் கொஞ்சம் அதிகம்."

"எவ்வளவு?"

"பதினெட்டாயிரம்"

"அய்யய்யோ"

"நமக்கு வேற வழி இல்ல மா. இது பெங்களூர். ஹோட்டலில் தங்கினா ஒரு நாளைக்கு நம்ம 1500 ரூபா கொடுக்க வேண்டி இருக்கும். ஹோட்டல்ல சமைக்கவும் முடியாது. வெளியே தான் சாப்பிடணும். எல்லாத்தையும் கணக்குப் போட்டு பார்த்தா வீட்டு வாடகை கம்மியா தான் வரும். அதனால அந்த வீட்டை ஒத்துக்கலாம். எனக்குத் தான் வேலை கிடைச்சிடுச்சே... சமாளிச்சிடலாம்."

ஹரிதாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. உமாபதி அப்படியெல்லாம் பணத்தைச் செலவு செய்து விடுபவன் அல்ல. அவனது வருமானத்தை எல்லாம் சேமிக்க தான் நினைப்பான். அவன் கணக்குப் பார்க்காமல் செலவழிப்பதைப் பார்த்து அவள் வியந்தாள்!

"வாங்க போகலாம்."

அமைதியாய் அவர்களைப் பின்தொடர்ந்தாள் ஹரிதா.

"சுதாவை நார்மல் வார்டுக்கு ஷிப்ட் பண்றது முன்னாடி நம்ம வீட்டைச் செட்டில் பண்ணணும். அதுக்கு அப்புறம் நமக்கு டைம் கிடைக்காது."

புது வீட்டுக்குக் குடிப்பெயர்ந்தனர் உமாபதி குடும்பத்தினர். அது தனி வீடு. சிறியதாக தான் இருந்தது. அது சிவகாமிக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஹரிதாவுக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கு அவர்களது சென்னை வீடு தான் மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. அதனால் அமைதி காத்தாள்.

.....

சுதர்சன் பெங்களூர் வந்து சேர்ந்தான். அவனுக்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவனது நண்பர்கள் இந்திரனும் மாலனும் அவனை சந்தோஷமாய் அணைத்துக் கொண்டார்கள்.

"நீ இங்க வந்தது ஒரு கசப்பான காரணத்துக்காக இருந்தாலும், உன்னை நாங்க இங்க சந்தோஷமா வரவேற்கிறோம், சாதா..." என்றான், சுதாவை செல்லமாக சாதா என்று அழைக்கும் மாலன். அவன் எல்லோரையும் அப்படி அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.

"நீங்க இங்க இருக்கிறதால நானும் கூட கொஞ்சம் ரிலீவா ஃபீல் பண்றேன்."

"வா வீட்டுக்குப் போகலாம். மிச்சத்தை அங்க பேசிக்கலாம்." என்று அவனிடமிருந்து பையை பெற்றுக் கொண்டான் இந்திரன்.

மற்றும் ஒரு பையோடு மாலனின் வண்டியில் அமர்ந்து கொண்டான் சுதர்சன்.

அவர்கள் வீடு வந்து சேர்ந்த பிறகு,

"கெமிக்கல் கம்பெனிஸோட லிஸ்ட் கேட்டிருந்தேனே... ஏதாவது கலெக்ட் பண்ணியா, இந்து?"

"எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சு. மொத்தம் பத்து கம்பெனி இருக்கு. அதுல சிட்டிக்குள்ள இருக்கிறது ரெண்டு தான். மத்த எல்லாமே சிட்டிக்கு வெளியில தான் இருக்கு." தன் கையில் இருந்த பட்டியலைச் சுதர்சனிடம் கொடுத்தான் இந்திரன்.

"நம்மகிட்ட அட்ரஸ் இருக்கு. ஆனாலும், உமாவை கண்டுபிடிச்சிட முடியும்னு நீ எப்படி நினைக்கிற?" என்றான் இந்திரன்.

"எனக்கு ஒண்ணுமே புரியல, மாலா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல. அவ ஏன் சென்னையை விட்டு கிளம்பி வந்தாள்னும் புரியல."

"உப்புமா ரொம்ப சுயநலவாதி. அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல." என்றான் மாலன். அவன் உப்புமா என்றது சாட்சாத் உமாவைத் தான்.

"கவலப்படாத, சுதா. நம்ம அவனைக் கண்டுபிடிச்சிடலாம்." என்றான் இந்திரன்.

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, சுதா. எந்தக் கேள்வியும் கேட்காம அந்தப் பொண்ணு அவங்க அண்ணனோட கிளம்பி போயிருக்கான்னா, அந்தப் பெண்ணை நீ ஏன் தேடணும்? உன்கிட்ட ஃபோன் இருக்குன்னு அவளுக்குத் தெரியுமே... அவளால உன் கூட பேச முடியாதா?" என்றான் மாலன்.

"சென்னையில இருந்து அவங்க குடும்பம் பெங்களூர் போயிட்டாங்கன்னு நான் கேள்விப்பட்டு ரெண்டு நாளாச்சு. என் மனசுல எவ்வளவோ எண்ணங்கள் சுழண்டுக்கிட்டு இருக்கு. அது என்னை ரொம்ப தவிப்புல வச்சிருக்கு. ஆனாலும் என்னால ஹரியைத் தப்பா நினைக்க முடியல, மாலா. அவ ரொம்ப நல்ல பொண்ணுடா. அவளுக்குப் பார்வை இல்ல. ஆனாலும் அவ கண்ணு என்னோட பேசும். கண்ணு தெரியாத ஒரு பொண்ணு, நிச்சயம் அவளோட உணர்வுகளைப் பொய்யா காட்டவே முடியாது. நான் அவ கண்ணுல பார்த்ததெல்லாம் பொய் கிடையாது. அவ ரொம்ப நேர்மையான பொண்ணு. அப்படியே உமாவுக்கு எதிர்ப்பதம். நான் அவளோட எக்ஸாமுக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ணேன். அது அவளை எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வச்சிது தெரியுமா? அவளோட நடவடிக்கையில நான் நன்றி உணர்ச்சியைப் பார்த்தேன். என்னை விட்டு பிரியறதை நினைச்சி அவ ரொம்ப வருத்தப்பட்டா. அவ தப்பானவளா இருப்பான்னு என்னால நினைக்க முடியல."

"உப்புமாவோட தங்கச்சியா இருந்து அவங்க அப்படி இருக்கிறத நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு." என்று சிரித்தான் மாலன்.

"உன்கிட்ட அவங்க போட்டோ இருக்கா?" என்றான் இந்திரன்.

தனது கைபேசியை எடுத்து, அதில் இருந்த ஹரிதாவின் புகைப்படத்தை அவர்களிடம் காட்டினான்.

"இவங்க உண்மையிலேயே உப்புமாவோட தங்கச்சி தானா?" என்றான் மாலன்.

"ஏன்?"

"இவங்க ரொம்ப அழகா இருக்காங்களே..."

இந்திரன் சிரித்தான். ஆனால் சுதர்சன் சிரிக்கும் நிலையில் இல்லை.

.......

மறுபுறம்

திவ்யமூர்த்தி தனியறைக்கு மாற்றப்பட்டான். ஹரிதாவைப் பார்த்து அவன் புன்னகைக்க, அவளும் புன்னகைத்தாள். அவளிடம் அவன் சைகையில் ஏதோ கூறினான். அதைப் புரிந்துக் கொள்ள முடியாமல் குழம்பினாள் ஹரிதா.

"அவனால பேச முடியலன்னு சொல்றான்."

ஆம் என்று தலையசைத்த திவ்யமூர்த்தி, தன் கழுத்தில் இருந்த பட்டையைக் காட்டினான்.

"நீங்க பேச வேண்டாம். ரெஸ்ட் எடுத்துக்கோங்க." என்றாள் ஹரிதா.

நன்றியோடு புன்னகைத்தான் திவ்யமூர்த்தி.

"ரொம்ப வலிக்குதா?"

ஆம் என்று தலையசைத்த அவன், மீண்டும் செய்கையில் ஏதோ கூறினான். தன்னால் பேச முடியவில்லை என்று அவன் கூறுவதைப் புரிந்து கொண்டாள்.

அப்பொழுது நடுத்தர வயதில் இருந்த தம்பதியினர் அங்கு வந்தார்கள். திவ்யமூர்த்தியின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்ட அவர்கள்,

"திவ்யாமூர்த்தி..." என்று அவன் தலையைத் தொட்டார்கள்.

"திவ்யமூர்த்தியா?" என்று குழம்பினாள் ஹரிதா.

"அவர் திவ்யமூர்த்தி இல்ல, சுதர்சன்." என்றான் உமாபதி.

"இல்லப்பா. இவன் திவ்யமூர்த்தி. நாங்க தான் அவனோட உண்மையான அம்மா, அப்பா."

"நீங்க என்ன சொல்றீங்க?"

"எங்களுக்கு அந்த உண்மை இப்ப தான் தெரிய வந்தது."

"என்ன உண்மை?"

"இவன் பிறந்தப்போ, இவனை வளர்த்த அம்மா அப்பாவுக்குப் பிறந்த குழந்தையோட இவனை மாத்தி வச்சிட்டதா அந்த நர்ஸ் என்கிட்ட சொன்னாங்க."

"இவ்வளவு நாள் கழிச்சு அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"

"அந்த நர்ஸ் தான் சாகறதுக்கு முன்னாடி சொன்னாங்க."

"ஆனா அவங்க ஏன் குழந்தைகளை மாத்தணும்?"

"அது வேணும்னு நடந்த விஷயமில்ல. குழந்தைகளைக் குளிக்க வைக்க போகும் போது மாறிட்டாங்களாம். நாங்க ஹாஸ்பிடலை விட்டு கிளம்பினதுக்குப் பிறகு தான் அவங்களுக்கு அந்த உண்மை தெரிய வந்திருக்கு. ஹாஸ்பிடல் பேர் கெட்டுடக் கூடாதுன்னு அவங்க சொல்லாம மறைச்சுட்டாங்க."

"அந்தக் குழந்தை சுதர்சன் தான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அந்த நர்ஸ் சென்னையைச் சேர்ந்தவங்க. எனக்கு டெலிவரி நடந்தது சென்னையில தான். அவங்க சுதர்சன் மேல ஒரு கண்ணு வச்சுக்கிட்டே இருந்திருக்காங்க. அவனுக்கு ஆக்சிடென்ட் நடந்த விஷயத்தை அவங்க அக்கா ராஜஸ்ரீ மூலமா கேள்விப்பட்டு இருக்காங்க. அதனால அவனைப் பார்க்க இங்க வந்தாங்க. அதிர்ஷ்டவசமா எங்களைச் சந்திச்சாங்க. அப்ப தான் விஷயத்தைச் சொன்னாங்க."

"அப்படின்னா உங்க குழந்தை எங்க?"

"அவன் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்."

"நம்பவே முடியலயே." என்றான் உமாபதி.

"இதெல்லாம் விதி. இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு, எங்க பிள்ளை எங்களுக்குக் கிடைச்சிருக்கான்."

"திவ்யா..." என்று அவனை அழைத்தார் அந்த மனிதர்.

"அவன் பேர் சுதர்சன்."

"இல்ல. இவன் எங்க பிள்ளை திவ்யமூர்த்தி. எங்க எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசு. எங்களோட ஐநூறு கோடி ரூபாய் சொத்துக்கு இவன் தான் வாரிசு. அந்தச் சொத்து மொத்தமும் திவ்யமூர்த்தி பேர்ல தான் இருக்கு. இந்த நிமிஷத்திலிருந்து இவன் தான் திவ்யமூர்த்தி."

"ஐநூறு கோடியா?" என்று வாயைப் பிளந்தார் சிவகாமி.

ஹரிதா திகைத்து நின்றாள்.

"எங்களால இதை நம்ப முடியல." என்றான் உமாபதி.

"இவன் எங்க பிள்ளை இல்லனா, நாங்க ஏன் ஐநூறு கோடியை அவனுக்குக் கொடுக்கப் போறோம்?"

"நீங்க சொல்றது சரி தான். உங்க பிள்ளை இல்லன்னா நீங்க ஏன் குடுக்கப் போறீங்க?" என்றார் சிவகாமி.

"எங்க பிள்ளை இறந்தப்போ, நாங்க நொறுங்கிப் போயிட்டோம். ஆனா உண்மையான பிள்ளையைக் கடவுள் கொண்டு வந்து எங்ககிட்ட சேர்த்துட்டாரு." என்றார் அவனது அம்மா.

"நீங்கல்லாம் யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?" என்றார் அவனது அப்பா.

'அவளை நான் மணந்து கொள்ள போகிறேன்' என்று சைகையால் அவர்களுக்குக் கூறினான் திவ்யமூர்த்தி. ஹரிதாவைப் பார்த்து அவர்கள் புன்னகைத்தார்கள்.

"என் மருமகள் எவ்வளவு அழகாக இருக்கா!"

ஹரிதா செயற்கை புன்னகை உதிர்த்தாள்.

"அப்படின்னா, இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் தானா?" என்றார் சிவகாமி.

"நிச்சயமா... எங்களுக்கு எங்க பிள்ளை திரும்ப கிடைச்சிட்டான். எங்களுக்கு அதுவே போதும். அவன் சந்தோஷத்துக்கு நாங்க குறுக்க நிக்க மாட்டோம்." என்றார் அவனது அப்பா ரோஜாபாபு.

அவனது அம்மா சுந்தரவல்லி ஆம் என்று தலையசைத்தார்.

எல்லாமே நாடகம் போல் அரங்கேறியது. சுதர்சன், சுதர்சன் அல்ல, திவ்யமூர்த்தி. அவனது பெற்றோர் இறந்து விட்டதாய் அவன் கூறினான். ஆனால் அவர்கள் அவனது பெற்றோர் அல்ல. அவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாய் இருந்தான். ஆனால் இப்பொழுது, அவனது பொருளாதார நிலை பன்மடங்காய் உயர்ந்து, கோடீஸ்வரனாய் மாறிவிட்டான். இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்று ஹரிதாவுக்குப் புரியவில்லை.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz