ZingTruyen.Xyz

காதலுக்குக் கண் உண்டு!

17 பெங்களூரில் ஹரிதா

NiranjanaNepol

17 பெங்களூரில் ஹரிதா

மறுநாள்

விடுப்பு எடுத்துக்கொண்டு உமபதியின் வீட்டிற்கு வந்தாள் வாசுகி. அவர்களது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்துக் குழம்பினாள். உமபதியின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தால், அவனது கைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. சிவகாமியின் கைபேசியும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

அப்போது வேறு ஒருவருடன் அங்கு வந்தார் ராதாகிருஷ்ணன். அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் வாசுகி.

"எப்படி இருக்க, வாசு?"

"நல்லா இருக்கேன், அங்கிள். ஹரிக்குக் கண் ஆபரேஷன் நடந்திருக்குன்னு பார்க்க வந்தேன்."

"அவங்க இங்க இல்லையே,"

"இங்க இல்லன்னா?"

"அவங்க வீடு காலி பண்ணிக்கிட்டு போயிட்டாங்க."

"என்ன்னனது? நீங்க என்ன சொல்றீங்க? இது அவங்களோட சொந்த வீடு."

"அவங்க எனக்கு வித்துட்டாங்க."

"வித்துட்டாங்களா? எப்போ? எதுக்கு?"

"உமாவுக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்..."

"வேலை கிடைச்சா வீட்டை ஏன் விக்கணும்?"

"பெங்களூர்ல வேலை கிடைச்சதுக்கப்புறம் அவன் இங்கிருந்து என்ன செய்யப் போறான்?"

"பெங்களூர்லயா?"

"ஆமாம். இதைப் பத்தி அவங்க உன்கிட்ட எதுவும் சொல்லலயா?"

இல்லை என்று தலையசைத்த வாசுகி, ஆயிரம் இடிகள் தன் தலையில் இறங்கியதாய் உணர்ந்தாள். அவளது கண்கள் கலங்கின. தான் கைவிடப்பட்டதாய் உணர்ந்தாள். உமாபதி எப்படி அவ்வாறு செய்யலாம்? அவனது புதிய வேலையைப் பற்றி அவளிடம் ஒன்றுமே கூறவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? அந்த வேலையைப் பற்றிச் சுதர்சனுக்கும் தெரியவில்லை. அவன் தான் ஹரிதாவுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்ய காரணமானவன். அப்படி இருக்கும் போது, அவனிடம் கூட ஏன் அவர்கள் ஒன்றும் கூறவில்லை? ஹரிதாவுக்கு என்ன ஆனது? அவளும் ஏன் சுதர்சனிடம் ஒன்றும் கூறவில்லை? அவன் தான் அவளுக்கு ஒரு கைபேசியைக் கொடுத்திருந்தானே... அவளுக்குத் தெரிந்தவரை ஹரிதா அவளது அண்ணனை போல் இல்லை. பல சமயங்களில் உமாபதி விசித்திரமாய் நடந்து கொள்வான் தான். ஆனால் ஹரிதா அப்படி இல்லையே! ஏதோ தவறய் நடந்திருக்க வேண்டும்.

உடனே சுதர்சனைக் கைபேசியின் மூலம் அழைத்தாள். அவளது அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்த அவன், அதை உடனே ஏற்றான்.

"வாசு, நீ ஹரியைப் பார்த்தியா?"

"நம்மளால அவங்களை எப்பவுமே பார்க்க முடியும்னு தோணல, சுதா."

"நீ என்ன சொல்ற?"

"அவங்க சென்னையில இல்ல."

"சென்னையில இல்லனா, எங்க போனாங்க?"

"பெங்களூருக்குப் போயிட்டாங்களாம்."

"எதுக்கு?"

"உமாவுக்கு அங்க வேலை கிடைச்சிருக்கு."

"யார் சொன்னது?"

"அவங்க வீட்டை வாங்கின பக்கத்து வீட்டு ராதா அங்கிள் சொன்னாரு..."

"வீட்டை வாங்கினாரா?"

"ஆமாம், அவங்க வீட்டை வித்துட்டாங்க."

"என்ன்னனது?"

"ஆமாம், சுதா. உமாவுக்கு வேலை கிடைச்சதால, அவங்க வீட்டை வித்துட்டு பெங்களூருக்குப் போயிட்டாங்களாம்."

"ஆனா, நம்ம கிட்ட சொல்லாம ஏன் போனாங்க?"

"தெரியல, சுதா. ஏதோ தப்பா தெரியுது."

"இல்ல, எனக்கு ஹரியை நல்லாத் தெரியும். எந்தத் தப்பும் அவ நடக்க விடமாட்டா."

"எனக்கும் அவ மேல நம்பிக்கை இருக்கு. ஆனா என்ன நடந்திருக்கும்? யாருக்கும் சொல்லாம அவங்க காதும் காதும் வச்ச மாதிரி பெங்களூருக்கு ஏன் போனாங்க? உமாவுக்குக் கிடைச்ச புது வேலையைப் பத்தி யாருக்குமே தெரியலையே..."

சுதர்சனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"எனக்கு பயமா இருக்கு, சுதா. தன்னோட சுயலாபத்துக்காக உமா என்ன வேணா செய்வான்."

சுதர்சன் மென்று விழுங்கினான்.

"நீ ஹரிக்குப் படிக்கிறதுக்காக ஒரு ஃபோன் வாங்கி கொடுத்தல்ல? அப்புறம் ஏன் அவ உனக்கு ஃபோன் பண்ணல?"

"ஆபரேஷனுக்கு முன்னாடி அவ ஃபோன் தொலைஞ்சி போச்சி."

"எப்படி?"

"எனக்குத் தெரியல. அவளோட ஆப்பரேஷனுக்குப் பிறகு என்னால அவ கிட்ட பேசவே முடியல. உமாவோட ஃபோன் எப்பவுமே ஆஃப் ரேஞ்சிலயே இருந்தது. அவ டாக்டர் மூலமா தான் அவகிட்ட நான் பேசினேன். அதுக்கப்புறம் அவ டிஸ்டார்ஜ் ஆகுற வரைக்கும், உமா ஃபோன்ல அவகிட்ட பேசிக்கிட்டு தான் இருந்தேன்."

"சுதா, என் உள் மனசு ஏதோ தப்பா சொல்லுது."

"நீ ஏன் அப்படி நினைக்கிற, வாசு?" என்றான், அவளது மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ள. அது எதையாவது யூகிக்க அவனுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினான்.

"உமாவும், சிவா ஆன்ட்டியும் ரொம்ப சுயநலவாதிங்க. உனக்கு ஹரியை ரொம்ப பிடிச்சிருந்தது. அவளுக்கு ஆபரேஷன் பண்ணி வச்சிருக்க. அவளுக்காக என்ன வேணா செய்ய தயாரா இருக்க. நீ உன் லைஃப்லையும் செட்டில் ஆயிட்ட. உனக்குச் சொந்த வீடு இருக்கு. அம்மா அப்பா கிடையாது. அதனால, ஹரி உன் கூட எந்தப் பிரச்சனையும் இல்லாம இருப்பா. இவ்வளவு பாசிட்டிவ் பாய்ண்டையும் விட்டுட்டு அவங்க இங்கிருந்து பெங்களூர் போயிருக்காங்க. ஏன்?"

சுதர்சனின் மனதில் நடுக்கம் பிறந்தது. அவன் இவ்வளவு ஆழமாய் வாசுகியைப் போல் யோசிக்கவில்லை.

"இதையெல்லாம் விட பெட்டரா அவங்களுக்கு ஏதோ ஒன்னு கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்."

"பெட்டர்னா என்ன அர்த்தம், வாசு? ஹரி என்னை ஏமாத்திட்டான்னு சொல்றியா?" என்றான் கோபமாய்.

"அவளும் தானே அவங்க கூடப் போயிருக்கா? அவளுக்குப் பார்வை திரும்ப கிடைச்சிடுச்சு. இப்போ அவ பிளைன்ட் இல்ல. அப்படி இருக்கும் போது, எதுக்காக அவங்க கூட பெங்களூர் போகணும்? அவங்களை அவள் ஏன் எதுவுமே கேட்கல?"

"உனக்கு ஹரியைப் பத்தித் தெரியாதா?"

"அவளைப் பத்தி எனக்குத் தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியல, சுதா. நான் யாரையும் நம்புற நிலைமையில இல்ல."

"உன்னோட நிலைமை வேணா அப்படி இருக்கலாம். ஆனா நான் எப்பவுமே ஹரியைச் சந்தேகப்பட மாட்டேன். அவளை நேரில் சந்திக்கிற வரைக்கும் நான் எந்த முடிவுக்கும் வரவும் மாட்டேன்."

"நீ பெங்களூர் போகப் போறியா?"

"அதுல என்ன சந்தேகம்? அவங்க பெங்களூர் போயிட்டாங்கன்னு தெரிஞ்ச பிறகு நான் எப்படி போகாம இருப்பேன்?"

"சரி, அங்க என்ன நடந்தாலும் எனக்குச் சொல்லு."

"நிச்சயமா சொல்றேன்." என்று அழைப்பைத் துண்டித்து, சீதாராமனைச் சந்திக்க சென்றான் சுதர்சன்.

பெங்களூர்

திவ்யமூர்த்தி தங்களுக்காக பதிவு செய்து வைத்திருந்த ஹோட்டல் அறைக்கு அவர்களை அழைத்து வந்தான் உமாபதி. அவர்களுக்குச் சாதாரண ஹோட்டலிலேயே பதிவு செய்து வைத்திருந்தான், ஹரிதாவுக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக. அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானார்கள். முதலில் தயாரானவள் ஹரிதா தான்.

ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். வரவேற்பில் சென்று விசாரித்தான் உமாபதி. தனக்குச் சொல்லிக் கொடுத்ததைக் கூறினாள் அந்தப் பெண்.

"அவரு ஐசி யூ ல இருக்காரு. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்."

கட்டுக்கடங்காத இதயத்துடிப்புடன் முதல் மாடியை நோக்கி பயணித்தாள் ஹரிதா. அவள் இன்று சுதர்சனைப் பார்க்கப் போகிறாள். அவளுக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக் கொண்டது. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த போது ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.

"டாக்டர்..." என்று அழைத்தான் உமாபதி.

"சொல்லுங்க."

"நாங்க சுதர்சனுக்கு சொந்தக்காரங்க. இவ தான் அவனைக் கல்யாணம் பண்ணிக்க போறவ..."

"ஐ சி..."

"நாங்க அவரைப் பார்க்க சென்னையில இருந்து வந்திருக்கோம்."

"அவர் உங்களைப் பாக்குற நிலைமையில இல்ல. மயக்கமா இருக்கார். அவரோட தொண்டை ரொம்ப மோசமா காயப்பட்டு இருக்கு. அவரால் பேச முடியுமான்னே தெரியல."

ஹரிதாவின் கண்கள் கட்டுக்கடங்காமல் பொழிந்தது.

"அவருக்கு நினைவு திரும்பின பிறகு தான் எதுவும் சொல்ல முடியும்."

"நாங்க அவரைப் பார்க்கலாமா, டாக்டர்?"

"வழக்கமா ஐசியுல இருக்கும் போது நாங்க யாரையும் அலோ பண்றது இல்ல. ஆனா நீங்க சென்னையிலிருந்து வந்திருக்கிறதா சொல்றீங்க. உங்களை ஏமாத்த வேண்டாம்னு பாக்குறேன். பார்த்துட்டு உடனே வந்துடுங்க."

"தேங்க்ஸ், டாக்டர்."

அவர்கள் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே சென்றார்கள்.

"ரொம்ப பக்கத்துல போகாதீங்க. இங்க இருந்தே பாருங்க." என்றாள் ஒரு செவிலி.

அதே இடத்தில் நின்றாள் ஹரிதா. கழுத்தில் பெரிய கட்டோடு ஒருவன் கட்டிலில் படுத்திருந்தான். அவன் உடல் முழுக்க சிறுசிறு கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவனைப் பார்த்த ஹரிதாவின் மனதில் ஏதோ ஒன்று உரைத்தது. ஒரு முறை அவள் சுதர்சனின் முகத்தைத் தன் கையால் தொட்டுப் பார்த்திருக்கிறாள். அதை வைத்து, அவன் இப்படி இருக்கக்கூடும் என்று ஓர் உருவத்தைத் தன் மனதில் வரித்து வைத்திருந்தாள். ஏனோ, அந்த முகம் இந்த முகத்தோடு பொருந்தவில்லை.

.........

சீதாராமனைப் பார்க்க வந்தான் சுதர்சன். அவனைப் பார்த்த உடனேயே அவன் ஏதோ தவிப்பில் இருப்பதைப் புரிந்து கொண்டான் சீதாராமன்.

"சுதா, என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?"

"மாமா, நான் உடனே இந்தியாவுக்குப் போகணும்."

"இந்தியாவுக்கா? ஏன்?"

"ஹரிதாவோட குடும்பம் யார்கிட்டயும் சொல்லாம பெங்களூர் கிளம்பி போயிட்டாங்களாம். ஏன்னு தெரியல."

"நீ என்ன சொல்ற? யாருக்கும் சொல்லாம போயிட்டாங்களா? ஏன்?"

"எனக்குத் தெரியல, மாமா. என் மூளை வேலையே செய்ய மாட்டேங்குது."

"சரி, நான் என்ன செய்யணும்?"

"நான் ஹரியை உடனே பாக்கணும்."

"சரி, நான் உன் டிக்கெட்டுக்கு அரேஞ்ச் பண்றேன்."

"சாரி, மாமா. நான் பாதியிலேயே கிளம்ப வேண்டியதாயிருக்கு..."

"நீ இங்க ஒன்றரை மாசமா வேலை செஞ்சுகிட்டு இருக்க. நம்ம வேலை என்னன்னு நீ நல்லா புரிஞ்சு வச்சிருக்க. கிட்டத்தட்ட நம்ம பாதி ப்ராஜெக்ட்டை முடிச்சிட்டோம். நம்மளோட டீமை நீ ஆன்லைன்ல லீட் பண்ணு. அது போதும்..."

"ரொம்ப தேங்க்ஸ், மாமா."

"கொஞ்சம் இரு." என்று ஒரு திர்ஹாம் கட்டை எடுத்து அவன் கையில் திணித்தான் சீதாராமன்.

"வச்சுக்கோ. இது உனக்கு தேவைப்படும்."

"நீங்க தான் எனக்கு ஏற்கனவே பணம் கொடுத்துட்டீங்களே..."

"பரவாயில்ல. ப்ராஜெக்ட் முடிஞ்ச பிறகு மிச்ச பணத்தைக் கொடுக்கிறேன். ஏதாவது வேணும்னா தயங்காம கேளு."

"தேங்க்ஸ், மாமா." என்று அங்கிருந்து கிளம்பினான் சுதர்சன்.

தனது அறைக்கு வந்து, தன் பொருள்களை எல்லாம் பையில் அடுக்கியபடி பெங்களூரில் இருக்கும் தன் நண்பனான இந்திரனை அழைத்தான். அந்த அழைப்பை ஏற்றான் இந்திரன்.

"இந்து, நான் பெங்களூர் வரேன்."

"பெங்களூருக்கா? ஆனா நீ உன் மாமா கூடத் தானே வேலை செஞ்சுகிட்டு இருக்க?"

"நான் ஹரியைத் தேடி வரேன்."

"என்ன சொல்ற? ஹரிதா பெங்களூர்லயா இருக்காங்க? அவங்க கண் ஆபரேஷன் போன வாரம் தானே நடந்தது? அப்படி இருக்கும் போது அவங்க ஏன் பெங்களூர் வந்தாங்க? அதுவும் நீ ஏன் அவர்களைத் தேடுற?"

"அவ யார்கிட்டயும் எதுவும் சொல்லாம சென்னையில இருந்து கிளம்பிட்டா. அவளோட ஃபோனும் மிஸ் ஆயிடுச்சு. உமாவோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு."

"இப்ப நீ என்ன பண்ணப் போற?"

"அவளைத் தேட எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்."

"பெங்களூர் ரொம்ப பெரிய ஏரியா. ஒரு பொண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல."

"அது எனக்குத் தெரியும். போன மாசம் உமா அங்க இன்டெர்வியூக்கு வந்தான். அவன் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண ஏதோ ஒரு கம்பெனியில தான் அவனுக்கு வேலை கிடைச்சிருக்கணும். அங்க இருக்குற கெமிக்கல் கம்பெனிஸோட லிஸ்ட்டை மட்டும் எனக்குக் கொடு. நம்ம நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம்."

"சூப்பர் ஐடியா, மச்சான்!"

"நான் பெங்களூர் வரேன்..."

"நான் உனக்காக காத்திருக்கேன்..."

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz