என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
7.என்னை மறந்தாயோ கண்ணம்மா
உத்ரா, ரோகிணியைக் கூட்டிக்கொண்டு வாடகை வண்டியில் பெருங்குளம் வந்து சேர்ந்தாள். அப்பத்தா வாசலை வெறித்தவாரே கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார்.
ரோகிணியைக் கண்டதும் அந்த தள்ளாத வயதிலும் ஓடிவந்து " அட கூறுகெட்ட சிறுக்கி மவளே.. நானு என்னத்த சொல்லிட்டேனு கைய அறுத்துக்கிட்ட சாவப் போன.. உன்ற இரத்தத்த கண்டதும் என் அஞ்சு உசிரும் பஞ்சாப் போயிடுச்சிடுடி ஆத்தா.. நீ போயிட்டா என் மவனே என்னைய கொண்டுருப்பானே..பாதகத்தி.. " என்று அக்கறை பாதியும் சுயநலம் மீதியாய் விசனப்பட,
" கவலைப்படாத.. நான் சாகல..அதுனால நீ அவர்கிட்டருந்து தப்பிச்சிட்ட..என்னோட அப்பா.. மன்னிச்சிக்க.. உன்னோட பையன நீ சொன்ன மாதிரியே உன் சொந்த பேரனோடயே அனுப்பி வெச்சிட்டேன்..இனிமே சந்தோசமா இரு.. " என்று அவர் முகம் காணாமல் சொல்ல, பருவதத்திற்கு தன் மகன் அவன் குடும்பத்தோடு சேர்ந்து விட்டான் என்ற சந்தோசத்தோடு ரோகிணியை நினைத்தும் கவலையாக இருந்தது..
முந்தானையை உதறி இடுப்பில் செருகியவர், அவளது இடக்கையைப் பிடித்துக் கொண்டு " சரி அவன் போனா போகட்டும்...நீ உள்ளாற போயி படுத்துக்க, நான் கஞ்சி வெச்சாறேன் " என்றழைக்க, அவர் கையை தட்டி விட்டவள்
" எனக்காக நீ எதும் செய்யாத..நான் உன் சொந்த பேத்தி இல்லையே.. ஒன்ட வந்தவ மகதான.." என்றவள் " உன்னோட பையன் கொஞ்ச நாள்ல வந்து உன்னைய கூட்டிட்டு போயிருவார் .நீ, உன் மகன், பேரன் ,மருமவளோட சந்தோசமா இரு.. " என்று உள்ளே செல்லப்போக,
அவருக்குள் ஏதோ ஒன்று நெஞ்சை பிசைவது போல இருந்தது..
" ஏன்டி.. நான்தான் பேரன பாத்த சந்தோசத்துல சூதானம் இல்லாம பேசிப்புட்டேன். அதுக்காக பேசாம இருந்திருவியா டி.. உன்ற ஆத்தா உன்னைப் பெத்திட்டு செத்து போயிட்டா.. நான்தான் உன்னைய இதுநாள் வரைக்கும் சீராட்டி பாராட்டி வளத்து விட்ருக்கேன். அந்த மட்டு மருவாத கொஞ்சங்கூட இல்லாம நன்றி கெட்டத்தனமா பேசுற.. " என நொடித்து கொள்ள,
" அதனால தான் .. அந்த நன்றிக்காக மட்டுந்தான் அவர அவுங்களோட அனுப்பி வெச்சேன் போதுமா... உன் அவரோட சொத்துலயோ,உன் பேரனோட உரிமைலயோ பங்குலா கேட்க மாட்டேன்..நான் அவருக்கு வாக்கு கொடுத்திருக்கேன் அவர் வரும் வரை இங்க இருப்பனு.. அதை காப்பத்தனும்னு தான் இங்க வந்தேன்.. இவ்வளவு சொல்லியும் நான் இங்க இருக்கறது உனக்கு கஷ்டமா இருந்துச்சுனா சொல்லு.. கிளம்பி போயிக்கிட்டே இருக்கேன்.." என்று உடல் களைப்பையும் மீறி விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டாள்.
இத்தனை வருடங்கள் தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாதவள் இன்று தன்னை வார்த்தையால் சாடிவிட்டு செல்வதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரும் மாற சிறிது காலம் தேவைப்படும் போல..
உத்ரா, " ஹேய் ரோகிணி..நான் காண்பது கனவா இல்ல நினைவா."
" ஏன்டி"
" என்னைக்கும் இல்லாத திருநாளா உங்க அப்பாத்தாக்கிட்ட ஜான்சிராணி மாறி பேசுனியே.. அதான் நம்ம ரோகிணியா இல்ல ஹாஸ்பிடல் டிரீட்மென்ட் பண்ணும் போது உன்னை மாதிரியே இருக்கற வேற யாரையாச்சும் கூட்டிட்டி வந்துட்டாங்களான்னு சந்தேகமா இருக்கு..அதான் கேட்டேன் "
" ஹேய் போடி "
" போடின்னு சாதாரணமா சொல்லிட்ட.. உனைய நினைக்கும்போது எவ்வளோ பெருமையா இருக்கு தெரியுமா.. உன் இடத்தில நான் இருந்தாக் கூட இந்தளவுக்கு தைரியமா இருப்பனானு தெரியல..நிச்சயமா கிரேட் டி.. உங்கப்பா உனைய நினைச்சி கண்டிப்பா பெருமைப்படுவார்.. "
" அடபோடி.. எங்கப்பா தான் கிரேட் " எனும்போதே அவர் ஞாபகம் வந்துவிட, கண்ணில் திரை கட்டத் துவங்கியது..
" ரோகிணி"
" நான் அழலடி.. அழவும் மாட்டேன்.. அவர் பாவம்டி.. அவுங்க பையனையும் மனைவியையும் பிரிஞ்சு வாழ நானும் எங்கம்மாவும் ஒரு காரணம் ஆயிட்டோம்.. அதான் சின்ன பிராயச்சித்தமா அவர அங்க அனுப்பிட்டேன் .
உனக்குத் தெரியுமா உதி.. அவரு நைட்லா உக்கார்ந்து ஈஸ்வரியம்மா பெயின்டிங்க பார்த்துட்டே இருப்பாரு.. அவுங்க மேல அவருக்கு சொல்ல முடியாத அளவுக்கு காதல்.. நானும் அவரோட காதல அனுபவிக்க முடியாம எங்கம்மா இறந்துட்டாங்கனு நினைச்சு ப்பீல் பண்ணியிருக்கேன்.. ஆனா அவரோட காதல் மனைவி உயிரோட இருக்கறப்ப பிரிஞ்சிருந்தா எவ்ளோ கஷ்டமா இருக்கும்..
நான் மட்டும் ஈஸ்வரியம்மாவ முன்னாடியே சந்திச்சிருந்தனா அவுங்கி்ட்ட அப்பாவ பத்தி சொல்லி அவுங்கள சேர்த்தி வெச்சிருப்பேன்.. அவுங்கள பார்த்தல..செம அழகா இருந்தாங்கல்ல.. அவுங்க ரெண்டு பேரும் செம ப்பேர் தான " என சோகமாய் ஆரம்பித்து சந்தோசத்துடன் முடித்தாள்.
சிறிது நேரத்தில் உத்ரா ரோகிணிக்கு உணவு, மாத்திரைகளை கொடுத்துவிட்டு அவளை படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
ரோகிணியைப் பார்த்துக்கொள்ள வாசு, சண்முகனிடம் சொல்லியிருந்தார்.. தன் நிலையை மேலோட்டமாக சொல்லி, அவளை சந்தோசமாக பார்த்துக் கொள்வது உன் கடைமை என்று அவர் கூறியதை உள்வாங்கியவன் அவளைக் காண வந்தான். காலையில், புத்தம் புது மலராக மலர்ந்திருந்தவள் காய்ந்த சறுகுபோல வாடி வதங்கி படுத்திருக்கும் தன் உடன் பிறவா சகோதரியைக் கண்டு கலங்கித்தான் போனான்..
அவன் வருகையை உணர்ந்தவள் கண் திறந்து பார்க்க, அவளை முரைக்க ஆரம்பித்தான்.
" யாரக்கேட்டு இப்படிலா நடந்துகிட்ட நீ.. உன்னைய அப்பத்தா எதும் சொன்னாங்கனா மொதல்ல எங்கிட்டதான சொல்ல சொல்லிருந்தேன்.. நான் ஒருத்தன் இருக்கிறது ஞாபகம் இருக்கா இல்லையா.. சொல்லு"
"டேய் "
" வாயத் தொறந்தா கொன்றுவேன்.. ஆளையும் மூஞ்சியும் பாரு.. சரியான தொடநடுங்கிய வெச்சிட்டு என்னாதான் பண்றதோ.. அதே கத்திய வெச்சு அந்த கிழவிய நாலு இழு இழித்திருந்தனா சந்தோசப்பட்ருப்பேன்.. அதைவிட்டுட்டு..ச்சே"
" டேய் சண்முகா .சாரிடா"
" அந்த சாரியா தூக்கி உங்கொப்பத்தாவோட சுருக்கு பையில போட்டு முடிஞ்சு வெச்சுக்கோ.. எனக்குல கொடுக்காத..ஏதோ வராதவங்களாம் வந்துருக்காங்க..மனச விட்டு எதும் பேசுவாங்கனு நினைச்சு வீட்டுக்கு போனா.. போன் வருது..ஒருத்தி கைய அறுத்துட்டு சாக கிடைக்கறானு.உனையலாம் " என கோபத்தில் அங்கிருந்த ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தான்.
அவனின் இந்த கோபம் ரோகிணிக்கு புதிது.. விளையாட்டுபிள்ளையாகவே சுற்றித் திருந்தவன் இன்று வீரவசனம் பேச, பயந்து நடுங்கியவள் உதட்டை பிதுக்கி அழத் தயாராக, வாசுதேவர் சொன்னது நினைவு வர, தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு அவள் கவனத்தை திசை திருப்ப முயன்றான்.
அந்நேரம் உத்ரா குளித்துவிட்டு தலையை துவட்டியவாரே உள்ளே வந்தாள்.
" ஹேய் அங்கென்னடி சத்தம் "
என கூறியபடி வந்தவளின் முன் சென்று நின்றவன் அவளை மேலுங்கீழுமாய் பார்த்துவிட்டு, வைரமுத்து போல
குரலை மாற்றி,
" சூரிய சந்திர ஒளிகளை இருவிழிகளில் கடத்தி வைத்திருக்கும் தாரகையே..
உன் கற்றை முடி மேகத்தில் மறைத்து வைத்திருக்கும் மழைத்துளிகளை பூஞ்சாரலாய் சிதறவிடும்
பூமகளே..
உன் பவளவாய் திறந்து தேன்மொழியாய் உன் திருநாமம் உரைப்பாயா
தேவதையே" என்று கவிதை முறையில் அவளை வட்டமடித்தபடியே கூற, உத்ரா ' திறுதிறுவென்று முழித்தாள்..
" சகியே.. ஐயம் ஏன்.... உன் பெயரைச் சொல் கண்மணியே " என்று ரோகிணியைக் கண்காட்டி ஜாடை செய்ய, அதனை புரிந்தவள்
" உத்ரா . " என்றாள்.
" இதுவும் நட்சத்திரத்தின் பெயரல்லவா.. அருமை .அருமை..இந்த அழகுப் பெண்ணிற்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் " என்று கை கூப்பி வணங்கினான்.
தன்னிடம் கோபமாக பேசியதை மறந்தவள் அவன் உத்ராவிடம் கேலி செய்வதை உணர்ந்து
" சண்முகா என்னடா இதெல்லாம் .. கோபத்துல பைத்தியம் பிடிச்சிருச்சாடா. கிறுக்கா" என்க,
" என்னை மன்னித்துக் கொள் எனது முன்னாள் காதலனின் மகளே.. நான் என் மனதை இரண்டாம் முறை இக்கன்னிகையை, இந்த அழகிய மஞ்சள் வண்ண தாவணியில் கண்டதுமே இழந்து விட்டேன். " என்றான் வெட்கத்தோடு..
" டேய்.. இதே தாவணிய தானடா நான் பொங்கலுக்கு போட்ருந்தேன்.. அப்போ நாய் புடிக்க வந்தவ மாதிரி இருக்கனு கலாச்சில"
என அவனை முரைக்க,
' ஐயயோ ' என புலம்பியவன்
" அட மண்டே.. பேரழகி..கந்தல் ஆடை அணிந்தாலும் அது அழகாகத்தான் இருக்கும்.. அழகு உடுத்தும் உடையில் இல்லை.. உடுத்துபவர் யார் என்பதில்தான் இருக்கின்றது.." என்று சமாளித்தான்.
" டேய் அதுக்க ஏன்டா இப்படி தூய தமிழ பேசற"
" எங்களுக்குள் பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன்.. அதனால்தான் போன ஜென்மத்தில் உரையாடிய அதே மொழி தற்போது என் நாவில் நர்த்தனம் புரிகின்றது.."
"அவ உன்னை விட மூத்தவ..
மரியாதையா பேசு " என்க,
உத்ரா,
" அட விடு.. ரோகிணி..அவன விட நான் ரெண்டு வருசந்தானே "
ரோகிணியின் முறைப்பை பார்த்து
" இஇஇஇ மூனு வருசம்தானே மூத்தவ " என்க,
" அப்படி சொல்லடி, என் சீமை அழகே " என்று அவன் டி போட்டு சொன்னதும் உத்ராவும் தற்போது அவனை முறைக்க ஆரம்பித்ததும் ' கொஞ்சம் ஓவரா போயிட்டமோ ' என நினைத்துக்கொண்டு
" அடியேனே மன்னித்தருளுங்கள் தேவீ " என சாஷ்டாங்கமாய் காலில் விழுந்தான்.
உத்ரா " காலைல உனைய பார்க்கும்போதே கண்டுபிடிச்சிட்டேன்டா..சரியான வினையம் புடிச்ச பையன்னு.. ஒழுங்கா எந்திரிடா " என்க,
" மாட்டேன்.. மன்னித்துவிட்டேன் என்று கூறி என்னைத் தூக்கிவிட்டு சாபவிமோசனம் அளியுங்கள் " என அவன் எழாமலே இருக்க
அவன் செய்கையில் தன் கவலை மறைந்து சிரித்த ரோகிணி
" இவன் அடங்கமாட்டான் போலயே.. உதி..அங்கப்பாரு.. உன் பின்னாடிதான் அப்பாவோட சாட்டை இருக்கு.. எடுத்து நடுமுதுகுல நச்சுனு ஒன்னு வை.. பையன் எப்படி எழுந்து ஓடுவான்னு மட்டும் பாரு " எனப் போட்டுக் கொடுத்தாள்.
உத்ரா சாட்டையை எடுக்கவும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தவன்
" யெக்கா.. தெரியாம பேசிட்டேன்க்கா..
நான் பார்க்கத்தான் பெரிய ஆள் மாதிரி தெரிவேன்.. நெஜத்துல பஞ்சு பாடி..பிஞ்சு பேபிக்கா.. வுட்ருக்கா " என கெஞ்சிய படியே ஓட, உத்ரா அவனை அடிப்பதுபோல செல்லமாய் துறத்திக் கொண்டிருந்தாள்.. அநாதையாய் ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு அவனின் அக்கா என்றழைப்பு மகிழ்ச்சியைத் தர ரோகிணியுடன் அவளும் தன் கவலைகளை மறந்து அவனுடன் விளையாட ஆரம்பித்தாள்..
அவர்கள் மூவர் தான் சின்ன பிள்ளைகள் விளையாடுகிறார்கள் என்றால் இங்கே வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கும் மேல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர்.
வாசுவிற்கு, தான் கூற வருவதைக் கூட கேட்க விரும்பாது முகத்தை தூக்கி வைத்திருக்கும் இரு பிள்ளைகளின் மீது செல்ல கோபம்..
உதயனுக்கு அப்போதும் தான் கூப்பிட்டு வராமல் அவரது செல்ல மகள் சொன்னதும் மறுக்காமல் வருகிறார் என்ற கோபம்.
விசாகனுக்கு அவர்கள்தான் தந்தை மகன்..அதில் தலையிட தான் யார். எனக்கு என்ன உரிமை இருக்கிறது..
என்று வருத்தம்.. ஆக மொத்தம் மூவரும் மூன்று திசையில் ஒரு வண்டியில் பயணம்.
உணவு விடுதியில் உண்ணும் உணவினை தேர்ந்தெடுப்பதில் சண்டை..ஒருவர் கூறும் உணவையே இன்னொருவர் கூறினால் அதற்கும் சண்டை..
உண்ட உணவிற்கு பணம் செலுத்தும்போது யார் செலுத்துவது என சண்டை.. வண்டியை யார் ஓட்டி வருவதென்று சண்டை.. அவ்வளவு ஏன் வரும்வழியில் இயற்கை உபாதையினை கழிக்க வண்டியை நிறுத்தும் இடத்தில் கூட தான் சொல்லும் இடத்தில்தான் நிறுத்த வேண்டும் என்று சண்டை.. மூவரும் ஒருவர் சொன்னதை மற்றவர்கள் கேட்பதில்லை என்ற ஒற்றுமையைத் தவிர வேறு எதிலுமே அவர்கள் பொருந்திப் போகவில்லை..
உதயனின் கூற்றையே எப்போதும் ஆதரிக்கும் விசாகன் கூட முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்.
வாசுவிற்கு தன் கண்முன்னே ஐந்து வயது விசாகனும் நான்கு வயது உதயனும் வந்து போயினர். அவர்கள் இத்தனை நாள் இந்தச் சண்டை எல்லாம் தவற விட்டிருப்பார்களே என எண்ணி அவர்கள் பாணியிலே விட்டுப் பிடித்தார். இந்தப் பயணத்தில் சண்டை எவ்வளவு போட்டனரோ அதே அளவு அவர்கள் விருப்பு வெறுப்புகளையும் அறிந்து கொண்டனர் அவர்களை அறியாமலே..
எப்படியோ சண்டை போட்டுக் கொண்டே மருத்துவமனையை வந்து சேர்ந்ததும்
இதுவரை இருந்த மனநிலை இறுக்கமாக மாறியது..
அங்கே ஈஸ்வரி தங்கியிருந்த அறையே அலங்கோலமாய் இருந்தது..
தலையில் கட்டுடன்
மருத்துவர் இரஞ்சித் அவரை சமாதனப்படுத்த முயல,
கையில் வைத்திருந்த கத்தரிக் கோலில் இரத்தம் சொட்டச் சொட்ட
பத்ரகாளியாய் நின்று கொண்டிருந்தார் பாஹேஸ்வரி.
அனைவருக்கும் என் இனிய ரமலான் வாழ்த்துகள் நண்பர்களே..
அடுத்த பதிவில் கட்டாயம் பிளாஸ்பேக் தொடங்கிவிடும்.. நம்புங்கள் ☺️☺️
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz