என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
5. என்னை மறந்தாயோ கண்ணம்மா
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் நோக்கி அந்தி சாயும் நேரத்தில் தங்கள் பயணத்தைத் துவங்கினர் அம்மூவரும்..
விசாகன் காரோட்டியாய் வண்டியை சீரான வேகத்தில் இயக்கிக் கொண்டிருக்க, உதயனோ சாலையின் ஓரங்களில் தன் பார்வையைச் செலுத்தியிருந்தான்.. அவன் மனம் இன்னும் மட்டுப்படவில்லை.. தன் தாய்க்கு அவன் தந்தை செய்த பாவமே மனதை ஆட்டிப்படைக்க,
வாசுவின் மீது வெறுப்பை வளர்த்திக் கொண்டிருந்தான் அவன்.
அவனிருக்கும் நிலையில் வண்டி ஓட்டினால் தங்களை பரலோகத்திற்குத் தான் அழைத்துச் செல்வான் என்கிற காரணத்தால் விசாகனே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் கூகுள் ஆண்டவரின் உதவியால்.
அவன் நினைத்திருந்தால் உத்ராவை தவிர்த்து பயணத்தை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அவளை அழைத்துச் செல்ல சம்மதித்திற்கான காரணத்தை அவனே அறிவான்.
விசாகனுக்கு வாசுவை நேரில் கண்டதாலோ என்னவோ அவனது கோபம் மட்டுப் பட்டிருந்தது.. அதற்காக அவரை மன்னித்து விட்டான் என்றில்லை.. அவர்பக்க நியாயத்தையும் கேட்டே எதையும் முடிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவர் கொலைகாரனாக இருந்திருந்தால் ஒற்றை விரலால் தடுத்த துப்பாக்கியை சுழற்றி அவனையே சுட்டிருக்கலாம் தேவா. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையே...
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த உத்ராவின் நினைவோ வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. அவளுக்கு ரோகிணியை அவ்வளவு பிடிக்கும். ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு உற்ற தோழியாக, தாயாக திகழ்ந்தவள் ரோகிணி.. தன்னை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் அலைபேசியிலேயே அவளுடன் உரையாடி தன்னுடைய நன்மதிப்பை பெற்றவர் வாசுதேவர்.
அவர்கள் உயிருக்கு ஆபத்து என்றதும் அவளும் ஆடித்தான் போனாள். என்னதான் ஈஸ்வரி நல்லவராக இருந்தாலும் தேவா அவர் சொன்னது போல தவறிழைத்திருக்க மாட்டார் என்பதை உறுதியாக நம்பினாள்.
அவர்களை பார்ப்பதற்காக எந்த
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அதிகம் பழக்கமில்லாத இரண்டு ஆண்களுடன் தன் பயணத்தை தொடர்கிறாள் என்பது அவளுக்கும் தெரியவில்லை. தன்னிடம் கண்ணியமான முறையில் நடந்து கொண்ட உதயனுக்காகவா..இல்லை தன்னை வேறொருவராய் விலக்கி வைத்து பார்க்காது தன்னவர்கள் போல நடத்தும் விசாகனுக்காகவா என்று கேட்ட மனசாட்சியின் கேள்விக்கு, நிச்சயம் விசாகனுக்காக இருக்காது என அவள் அடித்துச் சொல்ல, அவள் பார்வை உதயனிடத்தில் சென்றது.
கருமைக்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறம்.. காற்று கூட புகாதபடி அடர்த்தியான சுருட்டை கேஷம்.. திடகாத்திரமான உடல்..மொத்தத்தில் ஆண்மைக்குரிய அனைத்து இலட்சனங்களும் ஒருங்கே வாய்க்கப்பட்டு ஆணழகனாய் திகழ்ந்தான் அவள் கண்களுக்கு..
அவன் பார்வை ஒன்றே சொல்லிவிடும் அவன் ஒழுக்கத்தைப் பற்றி.. பெண்ணின் கண் பார்த்து பேசும் கண்ணியவான் என்று..
அவன் பேச்சில் என்றும் மரியாதை கலந்திருக்கும்.. அவன் ஏழை பணக்காரன், ஆண் பெண் என்று பேதம் பார்த்ததில்லை..தனக்கு நெருக்கமானவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வாங்க போங்க என்று கொங்குத் தமிழால் நெஞ்சம் நிறைக்க பேசுவான். ..
பொறுமையில் பூமாதேவியைப் போன்றவன் அவன்.. அவன் முகத்தில் என்றும் ஒற்றைப் புன்னகை கட்டாயம் நிறைந்திருக்கும்..
ஆனால் என்றும் புன்னகை சிந்தும் அவன் முகமோ இன்று கடுமையை தத்தெடுத்துக் கொண்டிருந்தது.. தற்போது தாயைக் காக்க தணயனாய் தனது தந்தையை எதிர்க்க சென்று கொண்டிருக்கிறான் என்றால் அவன் உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..
அவள் தோழியை பார்பதற்காக மட்டுமா அவனுடன் செல்கிறாள்.. அவனின் இந்த இக்கட்டான சூழலில் அவனுடன் துணையாக இருக்க வேண்டும் என்றுதானே அவனைத் தனியாக விட மனமின்றி அவனுடன் செல்கிறாள்.. இது எதனால் என்பது அவள் மனசாட்சிக்குப் புரிந்தது..ஆனால் அவளுக்கு புரிந்ததா என்றால் அதனை அவள்தான் சொல்ல வேண்டும்..
நள்ளிரவு நேரத்தில் பெரிய குளத்தை வந்தடைந்தனர் வாசுவும் ரோகிணியும். வரும் வழியிலே அங்கு நடந்ததைப் பற்றி தனது தாயிடம் கூற வேண்டாம் என்று சொல்லியே அழைத்து வந்தான் அவன்.
ஏற்கனவே தனது மகன் மனைவியையும் பிள்ளையையும் பிரிந்து வாழ்வதற்கு காரணமான ரோகிணியை இலைமறை காயாக திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் தன் தாயிற்கு ,அங்கு நடந்தவை தெரிந்தால் சொல் அம்புகளால் தன்னையும் தன் அன்பு மகளையும் வாட்டி வதைத்து விடுவார் என்பது தெரியாதா அவருக்கு. பருவதம் வாசுவிற்கு நல்ல தாய் என்றாலும் ரோகிணிக்கு நல்ல அப்பத்தாவாக இல்லையே ..
ரோகிணியை அவள் அறைக்கு அனுப்பி விட்டு தன்னறைக்கு வந்து கதவினை தாளிட்டுக் கொண்டவர் தான் மறைத்து வைத்திருந்த மரப்பெட்டியிலிருந்து அந்த ஓவியத்தை எடுத்துப் பார்த்தார்..
அது வாசு திருமணமான புதிதில் தனது காதல் மனைவி பாஹியுடன் தேனிலவுக்கு சென்ற போது அங்கிருந்த புகழ்பெற்ற ஓவியரால் தீட்டப்பட்டது.. தம்பதி சமேதராய் நெருங்கி நின்று கண்ணில் காதலை தேக்கி ஒருவரை ஒருவர் பார்த்திருப்பதைப் போல தீட்டப்பட்டிருந்தது அந்த ஓவியம்.
அதனை ஆசையாக வருடியவர் " ஏன் கண்ணம்மா உனக்கு இந்த கோலம்.. உன்னை அந்த நிலையில பார்க்க முடியாம தானடி அந்த ஊரை விட்டு வந்தேன்.. என் காதல இன்னுமா சந்தேகிக்கிற.. எனக்காக ஊரையே எதிர்த்து நின்னயே எங்க போச்சுடி என் மேல வெச்ச அந்த நம்பிக்கை.. நம்ம பொண்ணை கொலை பண்ற அளவுக்கு வந்துட்டல்ல.. அவ நம்ம பொண்ணு..அவள கொல்ல பார்க்குறியேடி.. " என்று கண்ணீர் வடித்தவன் அதனை பத்திரமாக சுருட்டி பெட்டியில் வைத்துவிட்டு அதனுடன் வைத்திருந்த சிறுவர்கள் அணியும் தேர்க்கடை வண்ணக் கண் கண்ணாடியை எடுத்துப் பார்த்தார்.
" உதய் என்னம்மா வளர்ந்துட்ட நீ.. இருபது வருசத்துக்கு முன்னாடி என்னைப் பார்க்குற மாதிரியே இருந்துச்சுடா.. உத்ரா பொண்ண காப்பாத்த வந்த இடத்துல உன்னை அந்த நிலைல பார்பேனு நினைச்சுக் கூட பார்க்கல.. உன்னை
பார்த்தவுடனே என் இதயத் துடிப்பே நின்னு போச்சு..அத்தனை வருசம் கழிச்சு உன்னை அந்த நிலைமையிலா பார்க்கனும்.. யார் செஞ்ச பாவமோ நம்ம குடும்பத்த இப்படி வாட்டுது.. " என கண்ணீர் வடித்து அந்தக் கண்ணாடிக்கு வழக்கம்போல் முத்தம் ஒன்றினை வைத்தார் வாசு.
சிறிதுநேரம் அப்படியே இருந்துவிட்டு கட்டலில் படுத்தவர் உதட்டில் மெல்லிய புன்னகை .." அடேய் அரை டவுசர்
அப்படியே என் உசரத்துக்கு வளர்ந்து நிக்கற.. உன் மாமனையே சுட துப்பாக்கி எடுக்குற..ம்ம்.. உன்னை பார்க்கும் போது தீபாவளித் துப்பாக்கிய வெச்சிக்கி்ட்டு நீயும் உங்கப்பனும் என்ன சுட போறதா டிராமா பண்ணுவீங்களே அதான்டா ஞாபகத்துக்கு வந்துச்சு.. எனக்குத் தெரியும்டா.. இந்நேரம் நீயும் உதய்யும் இங்க வந்துட்டு இருப்பீங்கனு.. ஆனா நீங்க கேட்கற எந்த கேள்விக்கும் பதில் என்னால சொல்ல முடியாது.. அந்த ஊருக்கும் என்னால திரும்ப வர முடியாது.. இத்தனை நாள் கழிச்சு உங்கள பார்த்த சந்தோசமே எனக்கு போதும்டா " என்று அவர்கள் நினைப்பிலே தூங்கிப் போனார்.
தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளப் போகும் அந்த கண்கொள்ளாக்காட்சியைக் காண வானம் கூட சீக்கிரம் வெளுக்கத் துவங்கியது...
காலையில் நேரத்தில் எழுந்த ரோகிணி, குளித்ததும் வாசலில் கோலம் போட்டு விட்டு தன் அப்பத்தாவிற்கு காபி கலந்து கொடுக்கப் போனாள்..
" அடியேய்.. முட்டைக் கன்னி.. எந்நேரம்டி வந்தீக அப்பனும் மவளும்.. நானும் நீங்க வருவீங்கனு வாசல்லையே காத்துக் கிடந்தேன்" என்று எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்த பருவதம் கேட்க,
" இராத்திரி ஒரு மணிக்கு அப்பத்தா "
" ஏன்டி விரசாதான் சொல்றது.. வயசான காலத்துல காது கேட்குதா ஒன்னா.. புள்ளைய கூட்டியாரேன்னு ஆட்டங்காட்டி கிட்டு முந்தானாள் காலையிலே கிளம்புனான் உங்கப்பன்.. அதெப்படி வராதுக்கு இராத்திரியாகும் " என அவள் கொண்டு வந்த காபித் தண்ணியை குடித்துக் கொண்டே கேட்க,
" அப்பத்தா வர வழியில வண்டி பஞ்சராயிடிச்சு.. அதான் லேட்டு " என்க
" ஆகும்டி ஆகும்.. பொட்டைப் புள்ளைக்கு எதுக்கு அத்தனை படிப்பு.. காலா காலத்துல கட்டிக் குடுத்துடுன்னு சொன்னா உங்கப்பங்காரேன் சண்டைக்கு வாரான் எங்கிட்ட.. இப்போ பாரு எத்தனை செலவுன்னு " என அவர் பாட்டிற்கு யாராவது கேட்கிறார்களோ இல்லையோ என்று கூட பாராமல் பேச ஆரம்பித்தார்.. அவருக்கு ரோகிணியின் மீது பாசம் இல்லாமல் இல்லை.. இருந்தும் மகன் படும்பாட்டிற்கு இவளும் ஒரு காரணம் என்பதால் எந்நேரமும் கரித்துக்கொட்டிக் கொண்டே இருப்பார் பருவதம், தன் மகனுக்கு புரிய வேண்டும் என்பதற்காக..
அவள் வழக்கம் போல இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு சமையலுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு அரிவாள்மனையுடன் வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்தாள்..
இல்லம் சிறியதாக இருந்தாலும் பழங்கால முறைப்படி கிராமத்திற்கேற்ப கலைநயத்துடன், வெளியே திண்ணை வைத்து கட்டி, வீட்டைச் சுற்றி ஆளுயர மரங்கிழுவ மரங்களால் வேலி போல் அமைத்திருந்தனர்.
" ஸ்டாரு.. நீ வந்துட்டங்கறத உன்னோட முயல் கோலத்தை வெச்சு எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தியா " என்றபடியே வந்தான் பக்கத்து வீட்டுப் பையன் சண்முகப்
பிரியன்.பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறான். அவனுக்கு அமைதியான ரோகிணியை ரொம்ப பிடிக்கும்.. அவளை சொந்த அக்காபோல நினைத்து பாசம் செலுத்துவான்.
அவனைப் பார்த்து அவள் புன்னகைக்க " நீ மொத சிரிக்கறத நிறுத்து.. காலேஜ்லா போய் படிச்சிட்டு வந்தியே அந்த ரங்கோலியாச்சும் கத்திக்கிட்டு வந்தயா.. எப்போ பாரு முயல் கோலம்..இல்லைன்னா நாய்க்குட்டி கோலம்.. பண்டிகையப்ப மட்டும் தேர்க்கோலம்.. உங்கூட்டு பிம்பிள் கிழவி ( பரு அப்பத்தா) கூட தாமரைக் கோலம்..மயில் கோலம்னு போட்டு கலக்குது " என்று கூறியபடியே அவள் அருகே அமர்ந்து பூண்டை உறிக்க ஆரம்பித்தான்..
" நான் என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்.. எனக்கு அதெல்லாம் எப்படி போட்டாலும் வர மாட்டிங்குது..." என அவனிடம் செல்லங் கொஞ்ச, ' ரொம்ப குஷ்டமப்பா ' என தனக்குள் சளித்துக் கொண்டான்.
அவன் வந்ததைப் பார்த்ததும் தாய்க்கிழவி அதற்கும் ரோகிணியை திட்ட ஆரம்பித்தார்.
" ஓய் ஸ்டாரு.. உங்கூட்டு கிழவி நீ வந்ததும் வராததுமா உன்னைய திட்ட ஆரம்பிச்சிடிச்சா " என்று கேட்டபடியே பூண்டை உறித்து முடித்து விட்டு, அவள் அறிய வைத்திருந்த கேரட்டை எடுத்து கடித்துக் கொண்டே
" எங்க அந்த அய்யனாரு.. கண்லயே தட்டுப்படல.. ரெண்டு நாளா அவரப் பார்க்காம நம்பூர்ல பாதி பொண்ணுங்க இளச்சு போயிட்டாங்க" என்றான் குறும்பாக.
அவனிடமிருந்து வம்படியாக அவன் எடுத்த இரண்டாவது கேரட்டை பிடிங்கியவள்
" டேய்.. எங்கப்பாவ மறுக்கா அய்யனாருன்னு கேலி பேசுன்ன இந்த அருவாமனையாலே ஆஞ்சு புடுவன்டா..பார்த்துக்க.. " என்று அவனிடம் சிவக்க,
" ஆஞ்சுவியாம..ஆஞ்சு.. நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட ஸ்டாரு.. உனக்குலா அந்த தைரியம் இருந்திருந்தா உன்னைய பொழுதனைக்கும் பேசற அந்த பிம்பிள் கிழவிய அல்ல மொத ஆஞ்சிருப்ப.." என அவளை கேலி செய்தவன்
" அதென்ன உன்னை கேலி பேசுனா கூட வாயத் தொறக்க மாட்ட.. ஆனா அந்த அய்யனார எதாச்சும் சொன்னா மட்டும் வருஞ்சு கட்டிகிட்டு சண்டைக்கு வர..இருந்தாலும் அவரு உன்னை இந்தளவுக்கு பயப்படுத்தி வெச்சிருக்க கூடாது " என்றான் சாதுவாக..
அவனை முருங்கைக் காயால் அடித்தவள் " அவர அப்படி சொல்லாதன்னு சொல்றேன்லடா " என அவனை மறுபடியும் அடிக்க
" அய்யோ ஸ்டாரு .. ஐயம் சரண்டர்..அந்த ஆயுதத்த தூக்கிப் போடு.." என கையெடுத்து கும்பிட்டவன் " நான் என்ன வேணும்னா சொல்றேன்.. மனுசன் இந்த வயசுலயும் எப்படி இருக்காரு தெரியுமா.
" என வியந்து சொன்னவன் "நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தேன்..இந்நேரம் உனக்கு சித்தியா இந்த வீட்ல இருந்திருப்பேன் தெரியுமா.. நீ லெப்டுக்கா போயிடுவ..தாய்க்கிழவி ரைட்டுக்கா போயிடும்.. நான் மட்டுந்தேன் அய்யனாரோட இருப்பேன்..ம்ச். சான்ஸே இல்லல அதுக்கு..
ஆமா
அவருக்கு வயசு ஆகுமா..ஆகாதா.. இல்லை எனக்குத்தான் அப்படி தோனுதா.. " என யோசனை செய்பவன் போல தாவாயில் கைவைத்து வானத்தை நோக்க, அவனை மனதுக்குள் காரித் துப்பியவள் தக்காளியை அரிய ஆரம்பித்தாள்.
திடீரென " ஸ்டாரு " என கத்தியதில் அவள் விழுக்கென்று விழுக, " ஹேய்.. நான் சொல்லும் போது நம்புலயல்ல..அங்கப்பாரு பேண்ட் சட்டைப் போட்டு கொஞ்சமா மீசைய எடுத்ததும் அப்படியே இருபது வருசம் குறைஞ்சது மாறி இருக்கு " என்று அவன் கூறியதும், அவன் காட்டிய திசையை நோக்க, கதவுத் தட்டியை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தான் உதயதேவன்.. அவன்பின்னே விசாகனும் உத்ராவும் வந்தனர்.
அவனை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்க, தற்போது நேரில் கண்டவளின் மனதில் அவனிடத்தில் தான், தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு மேலோங்க, தலை குனிந்து கொண்டாள்.
சண்முகம் உத்ராவைக் கண்டதும் " ஸ்டாரு..அய்யனாரு எனக்கு துரோகம் பண்ணிட்டாரு..நேத்து டவுனுக்கு போய் பட்டி டிங்கரிங் பார்த்துட்டு வரும்போது எனக்கொரு காதல் கிளத்தியையும் கூட்டி வந்துட்டாரு " என்று புலம்பியதை அவள் காதில் விழாமல் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவளை உலுக்க, அதில் சுயநினைவு அடைந்தவள்
" உள்ள வாங்க.. சண்முகா..அப்பா மேற்கால தோட்டத்துக்கு போயிருக்காங்க.. வண்டியெடுத்துட்டு போயி அவர கூட்டியா" என்றாள் திக்கித் திணறி..
" என்ன கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்க "என்று அவன் உதயனையே மேலும் கீழுமாய் பார்த்து வைத்தவன் " ஆமாக்கா.. என் ஆளு இன்னும் கொஞ்சம் மேன்லியா இருப்பாரு.. அப்போ இது வேற யாரோ " என்றவாரே வாசல் வரை சென்றவன் மீண்டும் உதயனிடத்திலே வந்து நின்று " அப்போ இது யாரு " என ஆச்சரியமாக , அவள் காதில் கேட்டு வைப்பதாக எண்ணி சத்தமாகவே கேட்டான்.
அவன் அசையாது அங்கையே நிற்கவும் வேறு வழி தெரியாமல்
" அவரு எங்க அண்ணா தான்டா.. ப்ளீஸ்
அப்பாவ என் வண்டிய எடுத்துட்டு போய் கூட்டிட்டு வாடா " என மெல்லிய குரலில் கெஞ்ச,
" அவருக்கு இப்படி ஒரு பையன் இருக்குறத எனக்கு சொல்லாம மறச்சிட்டிங்கல " என அவனும் அதே குரலில் அவள் காதில் சொல்ல " ப்ளீஸ்டா " என கண்களாலயே கெஞ்ச ஆரம்பித்தாள். இவர்கள் சம்பாஷனைகள் அவர்கள் காதுகளிலும் தெளிவாக விழுந்தது..
" இந்தாரு..நீ கெஞ்சறதால தான் உன் ஓட்டை வண்டிய எடுத்துட்டு போறேன்..ஆனா திரும்பி வரைல இதை அங்கனயே போட்டுட்டு என்ட்ற அய்யனாரோட ஜீப்ல ஜோடியா வந்துருவேன் சரியா.. அதும் இந்த அய்யனார் ஜெராக்ஸ்காக.. " என்று உதயனைப் பார்த்து சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்..
அவன் போகும் போதே " எக்கோவ் மல்லியக்கா.. ஊருல இருந்து உங்கண்ணன் பையன் வந்துருக்காரு..போயி பாரு " என உதயன் வரவை ஊருக்கே உரைத்தபடித்தான் சென்று கொண்டிருந்தான்.
அவன் சென்றதும் " அப்பா அந்த தோட்டத்துல டவர் கிடைக்காதுன்னு போன வெச்சிட்டே போயிட்டாங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.. நீங்க உள்ள வாங்க " என்று அவள் அழைத்தும் அவர்கள் யாரும் அசரவில்லை.. உத்ரா மட்டும் தன் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
ரோகிணி உதயனைப் பார்த்து
" ப்ளீஸ் உள்ளாற வாங்க.. நம்ப குடும்ப விசயம் எதுக்கு வெளிய தெரிஞ்சிகிட்டு.. அப்பாவுக்குனு இங்க ஒரு நல்ல பேர் இருக்கு.. அதை கெடுத்துடாதீங்க.. ப்ளீஸ் வாங்க.. உத்ரா நீயாச்சும் சொல்லு " என உத்ராவைப் பார்த்து சொன்னவள் அவளருகே நின்றிருந்த விசாகனின் கழுகுப் பார்வையைக் கண்டதும் பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.
அவனைக் கண்டதும் பாஹேஸ்வரி தன்னைக் கொல்ல வெறி கொண்டு வந்தது நினைவில் வர, அந்த அதிகாலை வேலையிலும் அவளுக்கு முத்து முத்தாய் வியர்த்தது..
உத்ரா , தன் தோழியின் பார்வை சென்ற திசையையும் அதன் பின்பான அவளின் நடுக்கத்தையும் கண்டு விசாகனை முரைத்தவள் ரோகிணியை சமாதனப்படுத்தத் துவங்கினாள்..
" ரோகிணி..ரிலாக்ஸ்.. ஒன்னுமில்லடா.." என முதுகை நீவிவிட்டவள் " உதயன் சார் ஏன் இங்கயே நிற்கறீங்க.. உள்ள வாங்க போலாம் " என வம்படியாக அனைவரையும் உள்ளே கூட்டி வந்தாள்.
பேச்சு சத்தம் கேட்டதும் " அடியேய்.. யார்கிட்ட கதை அளந்துகிட்டு இருக்க.. நீ வந்தோனே உன் சோட்டாளிகளோட வம்பழக்க போயி்ட்டா சோறு யாரு உங்கப்பானா வந்து வடிப்பான். நானு என் ஆவி போற வரை அடுப்படியலயே கடக்கனும்னு வரந்தான் வாங்கியாந்தேன் போல," என புலம்பியபடியே வந்தவர் புதியவர்களைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த பாத்திரத்தைக் கூட அப்படியே கீழே போட்டுவிட்டு உதயனின் கன்னம் பற்றி
ஆனந்தக் கண்ணீரோடு
" ஏய்யா..உன்னைய பார்க்காமலே இந்தக் கட்டை வெந்திடும்னு நினைச்சேன்யா.. எம்மவராசன் வந்துட்டியா சாமி.. " என்று கூறி எக்கி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தார். அவர் அன்பை உதாசீனம் செய்ய
உதயனால் முடியவில்லை..
" ஆத்தாடி.. எனக்கு கையும் ஓடல.காலும் ஓடலயே.. எலே முட்டைக்கன்னி.. அந்த நாச்சிகிட்ட சொல்லி ரெண்டு வெட சேவலா பார்த்து வாங்கியாற சொல்லு.. எம் பேரனுக்கு எங்கையாலயே ஆக்கிப் போடனும் " என்றவர் அவனை நாற்காலியில் அமர வைத்து தானும் கீழே அமர்ந்து ஆசையாக அவனை கண்ணில் நிறைத்துக் கொண்டார்.. உதயன் யாரையும் எளிதில் உதாசீனப் படுத்தும் குணம் கொண்டவன் அல்ல.. அதனால் அவரது அன்பை புறக்கணிக்க அவனால் முடியவில்லை..
" ஏய்யா.. நீ மட்டுந்தான் வந்தியா.. என் மருமவளுக்கு அவ மாமியாள பார்க்க வர தோணலியா.. அவ ரோசக்காரி.. குடிசைல பொறந்த அவனே இத்தனை வீராப்பு காட்டும் போது அவ கோபுரத்துக்காரி.. அவ இறங்கி வரது நல்லாருக்காது.. எப்படியோ அவன போகும்போது கூட்டிட்டு போயிருய்யா..என்ற மகன் புள்ளைக் குட்டியோட வாழறத கண் குளிர பார்த்துட்டு செத்துப் போயிறேன் " என சொன்னதும் அவன் கண்ணில் அப்படியொரு ஆனந்தம்.. தேவாவை எளிதாக இங்கிருந்து கூட்டி சென்று விடலாம் என பகல் கனவு காண ஆரம்பித்தான்.
அதற்குள் ரோகிணி மூவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து விட்டாள். விசாகன் கூட ஏதும் சொல்லாமல் எடுத்துக் கொண்டான். அவளை பயமுறுத்த அவன் விரும்பவில்லை.
ஆனால் உதயன் நீட்டிய தட்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. தன்மேல் ஏன் இந்த வெறுப்பு அனைவருக்கும் என எண்ணியவள் தான் இல்லையென்றால் அனைத்தும் சரியாகிவிடும்.. தான்தான் இங்கு தேவையற்றவள் போல என நினைக்கும் போதே
ரோகிணிக்கு அழுகையே வந்து விட்டது. அழுதுகொண்டே உள்ளே சென்றுவிட, உத்ரா அவளைப் பின் தொடர்ந்தாள்.
" அந்த சிறுக்கிய விடு கண்ணு.. ஆனா ஊனா அவுங்க அம்மைய மாதிரி கண்ணக் கசக்கிட்டு கிடைப்பா..நான் உனக்கு நம்ம நாட்டுமாட்டுல காச்சுன பால்ல கெட்டிய கலந்து கொண்டாறேன்.. " என்றவர் ரோகிணியின் அறையை நோக்கி " ஒசறப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுடி.. எதுக்கு இந்த விசனம்..எம்பேரன் உன்ற அண்ணன் தான.. அவ உன்னைய என்னைத்த சொன்னியான்னு கண்ணக் கசக்கி்ட்டு போற.. சமையலுக்கு கூட மாட வந்து ஒத்தாசை பண்ணு " என அதட்டி அவளை கையோடு சமையல்கட்டிற்கு அழைத்துச் சென்றார்.. என்ன இருந்தாலும் ரோகிணியும் அவர் பேத்தி தானே..
விசாகன் " உதயா..அந்தப் பொண்ணு பாவம்டா.. நம்மள மாதிரி தான் அவளுக்குமே எந்த உண்மையும் தெரியாது.. ரொம்ப சாதுடா.. அப்பா மேல இருக்குற கோபத்த பொண்ணு மேல காட்டீராதடா.. என்னதான் இருந்தாலும் அவ உனக்கு தங்கச்சிடா.. உன் ராஜி சித்தியோட பொண்ணுதான.." என சொல்லும்போதே
" எனக்கு அந்தப் பொண்ணு மேல எந்தக் கோபமும் இல்லடா.. அந்தாளு வீட்ல பச்சத் தண்ணீ கூட குடிக்க விருப்பம் இல்லடா.." என வெறுப்பாக சொல்ல, சரியாக அந்தநேரம் வாசலில்
வாசுதேவனின் ஜீப் சத்தம் கேட்டது..
தந்தையும் மகனும் சந்தித்தால் பிறக்கப் போவது சண்டையா..சமாதானமா..
இந்த பாசப் போரட்டத்தில் வென்று உதயன் தேவாவை ஊருக்கு அழைத்துச் செல்வானா.. இல்லை தான் கொண்ட முடிவில் தேவா உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz