ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

17.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

இரயில் பயணம் என்றால் எப்போதும் குதூகலமாகிவிடும் உத்ராவிற்கு ஏனோ இந்தப் பயணம் இனிக்கவில்லை.. எதை நோக்கி செல்கின்றது அவள் வாழ்க்கை.. உதயனின் தவிப்பை காண முடியாது நொடியில் முடிவெடுத்துவிட்டாள்... ஆனால் அதனை எவ்விதம் செயல்படுத்துவது என்று அவளுக்கும் விளங்கவில்லை.. ஏதோ குருட்டு தைரியத்தில் தேவாவை உளவு பார்க்க செல்கின்றாள்.. திரும்பி உயிருடன் வருவாளா என்பதே சந்தேகமாய் இருக்க, அவளது காதலில் வெற்றி அடைவது சாத்தியமா.. அவளுக்கும் ஆசைதான் அவர்களோடு குடும்பத்தில் ஒருத்தியாய் வாழ, ஆனால் தேவாவை நெருங்க முடியாது என்று தெரிந்தும் தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை பயன்படுத்தி உதவவில்லை என்றால் அந்தக் குடும்பத்தின் சந்தோசம் நிலைக்காது அல்லவா.. நான்கு வயதில்
தாய் தந்தையை விபத்தில் இழந்து தத்தளித்தவளுக்கு இருக்க இடமும் கொடுத்து சிறந்த கல்வி அறிவையும் கொடுத்தவர் ஈஸ்வரி.. இலட்சக்கணக்கானோர் நலவாழ்விற்கு அடித்தளமிட்டவரின் நன்மைக்காக தான் ஒருத்தி அழிவதில் எந்த தயக்கமும் அவளிடத்தில் இல்லை என்று அவள் மனம் அவளை சமாதனப்படுத்திக் கொண்டாலும் ஏனோ மனம் முழுதும் வெறுமையே மிஞ்சியது..

அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன.. என்னோடு இருந்துவிடு கண்மணி என கெஞ்சிய விழிகளை மறக்க முடியுமா அவளால்.. அவன் பேச்சில் சொல்லாவிட்டாலும் அவனது செய்கைகளும் பார்வையும் சொன்னதே அவன் என்னவன் என்று.. பேசாமல் அவனிடம் தன் காதலை தெரியப்படுத்தி விடலாமா என்கின்ற ஏக்கம் அவளை சூழ்ந்து கொள்ள, அவனை எப்போது மீண்டும் நேரில் பார்ப்பது, தன் காதலை அவனிடத்தில் சொல்வது என பெருமூச்சு ஒன்றினை விட்டாள்..
ஏன் இந்த கடிகாரம் கூட மெதுவாக சுற்றுவது போல தெரிகின்றது.... பேசாமல் வீடியோவை பார்வர்ட் செய்து பார்ப்பது போல நாட்களையும் நகர்த்திப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. ஹூம்..இந்த நான்கு மணி நேரப் பிரிவையே தன்னால் தாங்க முடியவில்லை எனில் வரும் நாட்களை எப்படி கடத்துவேன்..தனக்கு அந்த அளவிற்கு காதல் பித்து பிடித்து விட்டதா.

. .ஏதோதோ சிந்தனையில் ஆழ்ந்தவள் நன்றாக உறங்கிவிட, அதிகாலை மூன்று மணிக்கு ரயில்வே ஸ்டேசன் சென்றடைந்தது தொடர்வண்டி..

முகம் கழுவி தன்னை தயார் படுத்திக் கொண்டவள் தற்போதுதான் அவள் அணிந்திருக்கும் ஆடையினைப் பார்த்தாள்.. தன்னை கடத்திச் சென்ற போது அவன் வாங்கிக் கொடுத்தது அல்லவா.. மனதுக்குள் மீண்டும் உற்சாகம் பிறக்க, சிரித்த முகத்தோடு இறங்கினாள்.. சோல்டர் பேக் மட்டுமே வைத்திருந்ததால் சிரமமின்றியே நடந்தாள்..
ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்க அந்த அதிகாலை வேளை கிலியை உண்டு பண்ணியது.. நான்கைந்து பேர் அவளை பார்த்து கூடி நின்று  தங்களுக்குள் ஏதோ பேசுவதைப் பார்த்து தைரியசாலியான அவளுக்கும் உதறல் எடுத்தது.. அனைவரும் அவனைப் போல தன்மையாக நடந்து கொள்வார்களா என அந்த வேளையிலும் அவன் ஞாபகமே..

ஏனோ அந்நேரம் ஒரு வண்டியை கூட காணவில்லை..
விடுதிக்கு செல்ல விடியும் வரை காத்திருக்க வேண்டும் போல எண்ணி ஒரு டீக்கடைக்கு அருகே நின்று கொண்டாள்.. டீக்கடைக் காரரும் திடீரென உள்ளே சென்று விட இவளுக்குத் தான் பக்கென்றானது.. காட்டான்கள் போன்றிருந்த நால்வர் அவளை நோக்கி நகர, பாதுகாப்பிற்காக வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயும் சின்ன கைக்கத்தியையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்..

இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது..  நாளை காலை அவள் பெயர் பத்திரிக்கையில் வந்துவிடுமோ..தான் கொண்ட இலட்சியத்தை அடையாமலே சென்று விடுவோமோ.. என் காதலை கூட அவனிடத்தில் சொல்லவில்லையே நான்.. என்னை நினைத்து வருந்துவானோ..என்ற எண்ணங்களின் சுழலில் சிக்கித் தவித்தவள், ஹூம்..பலவீனமாகதே..உத்ரா..உன்னால் இன்னும் நான்கு பேர் வந்தாலும் சமாளிக்க முடியும்..உறுதியாய் இரு என நடுங்கிய மனதிற்கு தானே தைரியம் சொல்லி தேர்த்திக்கொண்டு தன்னை நோக்கி வருபவர்களை எதிர்பார்த்திருந்தாள்..

அவள் அசந்த நேரம் யாரோ பின்னிருந்து அவள் கைகளை மடக்கி பிடித்துக் கொள்ள அந்த எதிர்பாராத தாக்குதலில் கையிலிருந்த கத்தியும் ஸ்பிரேவும் கீழே விழுந்தது..அவள் எவ்வளவு முயன்றும் அந்தப் பிடியிலிருந்து நகர முடியவில்லை. மலையென இருந்த நம்பிக்கை எல்லாம் உடைந்து கடுகாக, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.. தற்போது அவர்களும் அவளை நெருங்கி இருக்க, அவர்கள் பார்த்த பார்வையில் உடல் கூசிப் போனாள்..

ஒருவன் அவள் வாய்ப் பொத்தி கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ள,மற்றொருவன் அவளது காலை பிடித்து தூக்க முயற்சித்தான்.. பற்களை ஆயுதமாய் பயன்படுத்தி வாயை பொத்தியவனின் கையினை கடித்து, அவள் கை முட்டியால் பின்னிருந்தவனின் நெஞ்சை தாக்கி விட்டு, ஒரு சுழட்டு சுழன்று தன் காலை பிடிக்க வந்தவனை எட்டி உதைத்து அவனையும் மண்ணைக் கவ்வ செய்தாள்.. அவளது எதிர் தாக்கலில் அவர்கள் ஒரு நொடி திகைக்க, கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஓட்டம் பிடித்தாள்.. பயந்து மீண்டும் இரயில் நிலையத்திற்கே சென்று விடலாம் என்று அதனை நோக்கி ஓட்டம் பிடிக்க, அதன் வாயிலில் ஒரு உருவம் அங்குமிங்குமாய் ஓடி ஓடி தொலைநோக்கிப் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டாள்..

அருகே செல்லச் செல்ல அது உதயன் என்று தெரியவர,
இந்நேரத்தில் அவன் இங்கே எப்படி வந்தான் என்ற குழப்பத்தோடு ஒரே எட்டில் அவனை நெருங்கினாள்.
அதுவரை ஒரு அலைப்புரலுடன் தேடிக் கொண்டிருந்த அவன் கண்கள் அவளைக் கண்டதும் அவள்மேல் நிலைகுத்தி நின்றது.. குளிர்காற்று மேனியை தளுவிய போதிலும் முத்து முத்தாய் அவள் முகத்தில் படர்ந்திருக்கும் வியர்வைத் துளிகளும் மூச்சு வாங்கி நிற்கும் அவளது நிலையும் அவனை பதற்றமடையச் செய்ய,ஏனடி இந்தக் கோலம் என்று அவன் கண்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தவள், இவ்வளவு நேரம் இருந்த பயத்தைத் தூக்கிப் போட்டு விட்டு தைரியமாக வாசல்புறம் திரும்பி நின்றாள்..

அங்கே மூச்சு வாங்கியபடி ஓடி வந்த தடியர்களையும் இவளையும் பார்த்தவனால் சற்றுமுன் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.. 

கைமுஷ்டிகளை மடக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் அவர்களை அடித்து நொறுக்கிவிடும் தன் எண்ணத்தை கைவிடுத்து உத்ராவை நோக்கினான்.. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்கிற நம்பிக்கையில் அவள் இடுப்பில் கைகட்டி தைரியமாக நின்றிருக்க, அவனோ கூலாக அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து ' எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லப்பா ' என்பதை போல ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கைபேசியை எடுத்து விளையாட ஆரம்பித்து விட்டான்.

அவனையும் உள்ளுக்குள் கடிந்து கொண்டவள் அவன்மேல் எழும் கோபத்தையும் சேர்த்து வைத்து அந்த தடியன்களை பந்தாடினாள்... அவன் இருக்கும் தைரியமோ என்னவோ ஒவ்வொரு அடியும் சும்மா இடி போல விழுந்தது.. அந்த எருமைகள் பயந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பிக்க, சரியாக காவலாளிகள் வந்து பிடித்துக் கொண்டு சென்றனர்.. போலிஸூக்கு தகவல் அவன்தான் கொடுத்திருப்பான் என்பது சொல்லி தெரிய அவசியமில்லை..

அவன் நினைத்திருந்தால் ஒரே அடியில் அவர்களை நிலை குலைய செய்திருக்க முடியும்.. ஆனால் எப்போதும் தன்னை இரட்சிக்க யாராவது வருவார்கள் என நினைத்து பெண்மையின் வலிமையை குறைவாக மதிப்பிட அவன் அனுமதிக்கவில்லை.. பின் ஒரு நாள் அவர்களே உத்ராவை சந்தித்தாலும் ஐயோ இவளா என்கிற பயத்தில் ஓடி ஒழிய வேண்டுமே தவிர, மீண்டும் அவளை காயப்படுத்த நினைக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான்..

அவர்கள் சென்றதும் அவன் அருகில் சென்று  அமர, அவனும் அவளிடம் இன்னும் நெருங்கி அமர்ந்தான்.. அவள் இப்படி ஒரு சூழலில் சிக்கி விடுவாளோ என்கிற பயத்தில் தானே அடித்துப் பிடித்து ஓடி வந்தான்.. நால்வர் எழுவராய் ஒருவேளை இருந்திருந்தால் அவளால் சமாளிக்க முடிந்திருக்குமா..அவர்களிடம் ஆயுதம் எதும் இருந்து இவளை தாக்கியிருந்தால் இவள் நிலை என்னவென்று நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் விம்மி வெடுத்துவிடும் போலானது..

அவளது கையை இறுக்கிப் பிடித்தவனின் மனநிலையை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது.. அவன் வராமல் இருந்திருந்தால்
இந்த தைரியம் அவளுக்கும் இருந்திருக்குமா என்று தெரியாது..  வாசுவும் இந்தக் காரணத்திற்கு தானே  பொய் சொல்லிவிட்டு கிளம்பும் தன் மகனை மறுப்பு தெரிவிக்காமல் அனுப்பி வைத்தது.. அவன் வாழ்க்கையில் எத்தனை காதல் ஜோடிகளைப் பார்த்திருப்பான் அவன்.. அப்படி இருக்கையில் தன் மகனின் பார்வையின் அர்த்தத்தை தெரியாது போவானா..

வந்ததிலிருந்து அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை... ஹூம் கடைசியில்  தன் பொய்க்கோபம் விடுத்து அவளே பேசும்படி ஆனது..

" சாரி..இப்படிலா நடக்கும்னு நான் எதிர்பார்க்கல"

" நான் தான் சாரி கேட்டுட்டேன்ல..பேச மாட்டிங்களா"

" ம்ச்.. உங்க குடும்பத்தில கோபம் மட்டும் எல்லோருக்கும் மூக்குக்கு மேல வந்துடுது.. "

அவன் எதுமே பேசவில்லை.. மாறாக அவள் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையலை கழட்டியவன் ஜி.பி.எஸ் பொறுத்தப்பட்டு வெளியே வெள்ளிச் சாயம் பூசப்பட்ட மெட்டல் வளையலை அணிவித்தான்.. பார்ப்பதற்கு யாராலும் அதில் ஜி.பி.எஸ் இருப்பதை கண்டறிய முடியாது.. அதே போல அவளது காதணியை கழட்டிவிட்டு அழகாக ரூபியால் செய்யப்பட்ட வளையத்தையும் காதில் அணிவித்தான்..
அத்தோடு சற்றும் யோசிக்காமல் அவள் காலடியில் அமர்ந்து ஓசை எழுப்பாத மெல்லிய கொலுசினை தன் கையாலே போட்டுவிட்டான்.. எந்த வகையிலும் அவள் எங்கு இருக்கிறாள் என்பது தனது கண்ணிருப்புக்குள்ளே இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

" எக்காரணத்தைக் கொண்டும் இதை கழட்டிராத..சரியா "

அவன் குரலே சொல்லியது..இதனை கழட்டினால் கொன்றுவிடுவேன் என்று..

" இந்தா இதுல பென் கேமிரா.. குட்டி ஸ்பீக்கர்.. மினி கன், நியூ மொபைல் எல்லாம் இருக்கு.. வெச்சுக்கோ..கிளம்பு உன்னை ரூம்ல விட்டறேன்.. உனக்கு சரியா ஒரு மாசந்தான் டைம்..அதுக்குள்ள எதாச்சும் கண்டுபிடிச்சா பாரு..இல்லைனா உனைய மூட்டைக் கட்டி பெரியகுளத்துல கொண்டு போயி போட்ருவேன்.. அங்க சிபிஐ ன்னு நினச்சிட்டு எதாச்சும் அதிகப்பிரசங்கி வேலை செஞ்சேனு தெரிஞ்சது" என அவளை எச்சரிக்கும் பார்வை பார்க்க, எங்கே அவள் அதனை கவனித்தால் தானே
அவன் தன்னை வாங்கப் போங்க விலிருநது உரிமையாய் ஒருமையில் அழைப்பதனையும் அவன் அவளுக்காய் அணிகலனை அணிவித்ததையும் நினைத்து காற்றில் பறந்தவள் அவன் பேச்சை கவனிக்க மறந்துவிட்டாள்.. விசாகன் சொல்லியிருக்கானே, சம வயதுடையவராக
இருந்தாலும்
அவனுக்கு மிகவும் நெருங்கியவர்களை மட்டுமே ஒருமையில் அழைப்பான் என்று.. 

அவனோ அவளது பாதுகாப்புதான் முதலில் முக்கியம் என்று அந்த நள்ளிரவு வேளையிலும் அவனது நண்பனை எழுப்பி கெஞ்சிக் கூத்தாடி  செய்ய செய்து அவளுக்காக இந்த  நகைகளை வாங்கி வந்து அதனை சிரத்தையாய் அணிவித்திருந்தான்.

அவன் கொண்டு வந்த பையை அவள் மடியில் வைத்தவன் " நீ பண்றதல பார்த்தா எனக்கு பயமா இருக்கு.. நீ கிளம்பு இன்னும் அரை மணி நேரத்துல டிரெயின் இருக்கு.. அதிலயே நீ வந்த இடத்துக்கே திரும்பிப் போ..நான் வேற வழில இதை பார்த்துக்கறேன் " என்றதும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு
" நான் ஏன் அங்க திரும்பிப் போகனும்..எனக்கு என்ன உரிமை இருக்கு"
அவன் தன்னை எவ்வாறு நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ள கேட்டு வைத்தாள்..

அவள் கேள்வியில் கோபமடைந்தவன் தனது சுருட்டை கேசத்தை அழுந்த கோதிவிட்டு " ஏன்னு உனக்குத் தெரியும் உத்ரா " என்றான் தீர்க்கமாக,

அதில் அவன் கொண்ட காதல் அப்பட்டமாக தெரிந்தது.. வார்த்தையால்தான் காதலை தெரியப்படுத்த வேண்டுமா என்ன..

" நானும் அதே உரிமையால தான் இன்னைக்கு கிளம்பி வந்திருக்கேன் " அவளும் அவனுக்கு இணையாக காதல் பார்வை பார்த்து வைத்தாள்.. அவன் மட்டுந்தான் மறைமுகமாய் காதலை சொல்வானா என்ன.. நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பதை நிரூபித்தாள்..

அதற்கு மேல் அவன் பேச என்ன இருக்கின்றது.. பார்வையால் ஆயிரம் தடவை பத்திரம் சொல்லி அவளை விடுதியில் விட்டுச் சென்றான்.. அவளே அறியாது இரண்டு உளவாளிகளையும் அவளுக்கு பாதுகாப்பாய் அமர்த்திச் சென்றான்.

அடுத்து தனக்கிருக்கும் வேலையை கணக்கிட்டுக் கொண்டவன் தனது கெஸ்ட் ஹவுசிற்கு வண்டியை செலுத்தினான்..
வாசுவின் முகத்தை ஒத்திருக்கும் அவன் முகம் தேவாவின் கண்களுக்கு இனி புகப்படாமல் போகுமா என்ன?
அதனை அறியாமல் அவன் மீண்டும் இங்கு வந்திருப்பானா.. இனி மறைந்து இருந்து தாக்காமல் நேரடியாக எதிர்க்க முடிவெடுத்து விட்டான்..

இவன் கத்துக்குட்டி என்றால் தேவா காட்டிற்கே ராஜாவான சிங்கம் அல்லவா.. இந்த சிறுமுயல் எவ்வாறு அவனை வீழ்த்த போகின்றான் என்பதை பொறுத்திருந்து காண்போம்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

பெரியகுளம்..
ஏதோ அதிசயத்தினைப் பார்ப்பது போல ஊர் மக்கள் அனைவரும் வாசுவின் பாஹீயை பார்த்துவிட்டு சென்றனர்.. உதயனையும் சிலர் முந்தைய நாள் பார்த்திருக்க, ஊருக்குள்ளே அவர்களின் பேச்சே உரலில் அரிசியாய் இடிபட்டது..

" பார்த்தியாக்கா.. பொண்டாட்டி புள்ளையும் இருக்க போயித்தான் வாசுண்ணே நாம இன்னொரு கலியாணம் பண்ணிக்க சொல்லி கேட்கும் போது கூட வேண்டான்னு மறுத்திருக்காக"

" ஏதோ குடும்பச் சண்டை போல இருக்குது.. பொண்ணு ஒருத்தர்கிட்டயும் பையன் ஒருத்தங்க கிட்டயும்னு பேசி வெச்சு பிரிஞ்சிருப்பாங்க போல "

" ஹூம்..என்ன பண்ண, என்ற கொழுந்தியாள வாசண்ணாக்கு கட்டி வெச்சிப்புடலாம்ங்கற என் கனவு தான் சிதைந்து போச்சு "

" ஏண்டி..அந்த முழியாங் கண்ணிக்கு வாசண்ணே கேட்குதாக்கும்..பாத்தியல்ல..நாப்பது வயசுலயும்  செஞ்சு வெச்ச செலை மாதிரி இருக்க பொண்டாட்டிய விட்டுட்டு அவரு உங்கொழுந்தியால கட்டிக்குவாராக்கும்..
அந்த மதினிய பாத்தியா.. ரெண்டு பசங்க தோளுக்கு மேல இருக்காங்கனு சொன்னா யாராச்சும் நம்புவாகளா.. "

" அவுக கூட இருக்க பையன் யாரு.. எந்நேரமும் வாசண்ண கூடவே ஜீப்ல அங்கையும் இங்கையும் சுத்திட்டு இருக்குறது? "

" அது மதினியோட அண்ணம்பையன் போல இருக்கு.. பார்த்தாலே பெரிய இடத்து பையன் போல தெரியுது.நம்மூருல படிக்கற பசங்களுக்கு உதவி பண்றதா சொல்லி இருக்காக,. ஹூம்.. பாவம் எல்லாத்தையும் விட்டுட்டு தான் அண்ணே இங்கன கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்கு பாரேன்"

இப்படித்தான் ஊர் மக்கள் தங்களுக்குள்ளே  எதையோ பேசிக் கொண்டிருந்தனர்..

விசாகன் ரோகிணியின் மடிக்கணினியை வாங்கிக் கொண்டு இத்தனை நாள் கடப்பில் போட்டு வைத்திருந்த
அலுவலக வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தான்.. ரோகிணியும் பருவதமும்தான் அவ்வப்போது உண்பதற்கு கொண்டு வந்து கொடுத்த வண்ணம் இருந்தனர்.
எதேர்ச்சையாய் திரும்பியவன் கண்களில் விழுந்தது, வாசு கருப்புச் சட்டை அணிந்து மீசையை முறுக்கி விட்டவாரே உள்ளே வந்தது..

பாஹீ வைத்த கண் வாங்காமல் வாசுவையே பார்த்திருந்தாள்.. அவள் குணமான பின் முதல்தடவை அவனை இவ்வாறு பார்க்கின்றாள்..  இந்த விழி ஏங்கும் பார்வைக்காகத் தானே அவனும் இந்தக் கோலத்தில் வந்தது.. செல்லமாய் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அதில் சுயநினைவடைந்தவள் ' ஐயோ ' என்று தலைகுனிந்து மீண்டும் செய்தித்தாள் வாசிப்பதை போல பாவனை செய்தாள்.. ஆனால் புன்னகையால் விரிந்த அவள் உதடு அவளைக் காட்டிக் கொடுத்துவிட உரக்கச் சிரித்து விட்டான்.. அவன் கேலிச் சிரிப்பில் இன்னும் சிவந்தவள் பேப்பரால் தன் முகத்தை மூடிக் கொண்டாள்..
அதில் அவன் இன்னும் சத்தமாக சிரித்தான்..

அவன் வேண்டும் என்றே விசாகனை நோக்கி புருவம் உயர்த்த
" சோதிக்காதீங்கடா எனைய " என்று வடிவேலு சார் பாணியில் கைக்காட்டி விட்டு வேலையை தொடர்ந்தான்.. ஏனோ மனதில்   இவ்வளவு நேரம்
தனக்கிருந்த சோம்பல் கூட காணாமல் சென்று உற்சாகம் பிறந்தது..

ரோகிணி இன்றுதான் முதல்முறையாக வாசுவின் இந்த உரக்கச் சிரிப்பை பார்க்கின்றாள்..

மாலை கோயிலுக்கு தம்பதி சமயந்திராய் வாசுவும் பாஹீயும் கோவிலுக்கு சென்றிருக்க, அங்கே அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இலயித்திருந்தது.. இருவருக்குமே ஏதோ திருமணமான புது தம்பதியர்களாய் கோவிலுக்கு வந்த உணர்வு.. மனம் நிறைந்த உணர்வோடு கடவுளை தரிசித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்..
  பருவதம் அவர்களை வாசலில் நிற்க வைத்து திருஷ்டி கழித்த பின்னரே உள்ளே அனுப்பினார்..
கூடத்தில் விசாகன் வேலையாக இருக்க,
ரோகிணி சமைத்துக் கொண்டிருந்தாள்.

" பாப்பா "
அவன் குரலில் உள்ள சந்தோசத்தைக் கண்டு தானும் சந்தோசமடைந்தவள்
" இதோ வரேன்பா "
அடுப்பை அணைத்து விட்டு காபியோடு வந்தாள்..

அவளை அருகில் அமர்த்திக் கொண்டவன்
" பாப்பா "

" சொல்லுங்கப்பா.. "

"படிப்ப முடிச்சிட்ட.. அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க"

" "

" எதும் வேலைக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கியா "

" ஐயோ அப்பா அம்மா இப்போதான நம்மகிட்ட வந்துருக்காங்க.. அவுங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு அதுக்கு அப்ரோ வேலைக்கு போறேன்பா"என்றவள் அருகிலிருந்த பாஹீயை கட்டிக் கொண்டாள்.

அவரும் அவளை அணைத்துக் கொள்ள,
" பாப்பா.. நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கற.. நீ என்னடா சொல்ற"

அவளது முட்டைக் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிய, " அப்பாக்கு நீ சந்தோசமா வாழ்றத பாக்கனும்னு ஆசைடா.. உன்னை அவசரப்படுத்தல.. நீ சரின்னு சொன்னாதான் கல்யாணம்..தரகர் வந்து உன் ஜாதகத்த கேட்டாங்க மாப்பிள்ளை பார்க்குறதுக்கு..நான் என் பொண்ண கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்..நீ என்னடா சொல்ற"

" எதுக்குப்பா இவ்ளோ அவசரம்.. நம்ம குடும்பத்துல இருக்கற பிரச்சனை தீர்ந்த பின்னாடி "

" அதையெலாம் நாங்க பார்த்துக்கறோம் பாப்பா.. உனக்கு சம்மதமான்னு சொல்லு..இல்ல உனக்கு யாராச்சும் பிடிச்சிருந்தா தயங்காம சொல்லுடா "

" என்னப்பா நீங்க... நீங்க யாரப் பார்த்தாலும் கட்டிக்கறேன் பா.. "

அவள் அப்படி சொன்னதும் வாசுவின் முகத்தில் அப்படி ஒரு பெருமை..

" ஆனா உங்களை எல்லாம் விட்டுட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியுமான்னு தெரிலப்பா.  " என்று தன் தாயிடமிருந்து தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அதுவரை பேசாது இருந்த பாஹீ " உங்க ரெண்டு பேர் பிரச்சனைக்கும் நான் ஒரு சொலுயூசன் சொல்லட்டுமா "என்க

விசாகன் கூட தனது வேலையை நிறுத்திவிட்டு பாஹீ என்ன கூற போகிறார் என ஆவலாக கவனிக்கலானான்..

" ஏன் வாசு.. நாம ஏன் ரோகிணிக்கும் விசுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது ? "

கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிரவும் நண்பர்களே..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz