என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
15.என்னை மறந்தாயோ கண்ணம்மா
பருவதம் தனது மருமகளின் வரவினை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். ரோகிணி விசயத்தில் எப்படியோ, ஆனால் பாஹீயிடம் அவருக்கு சற்று பயம் கலந்த பாசம்.. மாணிக்கத்தின் மகள் என்கிறதாலயே பாஹீயின் முன் பம்மிக் கொண்டுதான் இருப்பார். சரியான பாட்டாளி..மாடிவீட்டு மகராணி அவரது ஓட்டு வீட்டில் சிரமப்படாமல் இருக்க, ஓடி ஓடி அனைத்து வேலைகளையும் தானே செய்துவிடுவார்.
பாஹீயும் அவரோடு நன்றான பழகினாலும் பருவதத்தின் இந்த பயத்தினை போக்க முடிந்ததில்லை.. வாசு குழந்தையோடு ஊரை விட்டு கிளம்ப அழைத்ததும் பாஹீக்கு செய்யும் துரோகமாகவே அதனைக் கருதினார்.ஆனால் மகனை எதிர்த்துக் கொண்டு மருமகளுக்காய் பரிந்து பேசும் அளவிற்கு துணிச்சல் அவரிடம் இல்லை.. மருமகளை விட தான் பெற்ற மகன் தான் முக்கியம்... அவனுடன்தான் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார்..ஆனால் அவர் மனதிலும் தன் மகன் மனைவி பிள்ளைகளோடு ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்துவிட்டே கண் மூட வேண்டும் என ஆசை கொண்டிருக்க, அதன் பலனாய் இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து தன் மருமகள் வந்து கொண்டிருக்கிறாள் என்ற செய்தியில் உச்சி குளிர்ந்து போனார்.
இரவு எட்டு மணிக்கு பெரியகுளத்தை வந்தடைந்தவர்களை உத்ராவை ஆர்த்தி எடுக்கச் சொல்லி உள்ளே அழைத்து வந்தார் பருவதம். பாஹீ தனது மாமியாரின் காலில் விழுந்து மன்னிப்பினைக் கேட்க, அவரை உச்சி முகர்ந்தவர் " என்ற மருமக எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.. அந்த வாசுப்பய எதும் கோக்குமாக்கு பண்ணிருப்பியான் தாயி. " வாசுவிலிருந்து அனைவரும் அவரை முரைக்கவும் பேச்சை மாற்றி,
"அதேன் நீ வந்துட்டியல்ல.. இனி எத்துக்கு அந்தப் பேச்செல்லாம் " என்றவர், அருகில் நின்றிருந்த உதயனை சீராட்ட ஆரம்பித்தார்..
தனது ஒரே மகனின் மகனல்லவா.. வாசுவிடம் காட்டாத அத்துனை அன்பையும் உதயனிடம் கொட்டித் தீர்த்தார். அவனுமே தனது தந்தை குற்றமற்றவர் என்பதை அறிந்ததனால் அவனது அப்பத்தாவின் பாசமழையில் நனைய தயாரானான்.
அவர்கள் வந்த பின்பும் சமையலறையே கதியென கிடந்தாள் ரோகிணி..பயம். நடுக்கம்..பரிதவிப்பு என எல்லாம் கலந்த கலவையான உணர்வுடன் கைகளை பிசைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.. வாசுவுக்கோ வந்ததிலிருந்து தன்னை எட்டிப்பார்க்காத தன் மகளை எண்ணி கவலை கொண்டிருந்தான்.அன்று மருத்துவமனையில் கண்ணீர் வடிந்த முகத்துடன் கடைசியாக அவளைப் பார்த்தது.. பாஹீயின் மனநிலை ரோகிணி விசயத்தில் எப்படி இருக்கும் என்பதை அறிய முடியாததால், தான் அவளிடம் உரிமையாக நடந்து கொள்ள போய் பாஹீ்க்கு கோபம் வந்துவிடுமோ என்கிற பயம்தான் அவனை அமைதியாக இருக்கச் செய்தது... மற்றவருக்கும் அதே பயம்தான்.. அனைவரும் பாஹீ என்ன செய்வார்களோ என்கிற பயத்திலே இருந்தனர்.
வாசு தயங்கியவாறு இருக்க, பாஹீ " வாசு.. ராஜியோட பொண்ணு எங்க " என்று கேட்கவும், அவள் கேட்டு முடிப்பதற்கு முன்னமே " அவ என்னோட பொண்ணு பாஹீ" என எதையும் யோசிக்காமலே கூறி விட்டான் ..அவன் சொன்ன பின்னரே அவள் முகம் காண, பாஹீயின் முகத்தினைப் பார்த்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை..
" நான் அவளக் கொன்னுருவேன்னு பயப்படறீயா வாசு.. "
" ஏன் பேச மாட்டிங்கற.. நான் கொலை பண்ணிடுவேன்னு நினைச்சுதான அவள எங்கிட்ட காட்ட மாட்டீங்கற " என பொறுமையாக கேட்க, அனைவருள்ளும் பயப்பந்து உருள ஆரம்பித்தது.. புயலுக்கு முன் வரும் அமைதியைப் போல இருந்தது அவரது தோற்றம்.. விசாகன் அவருக்கு தேவையான மருந்தை முன்னெச்சரிக்கையாக கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.
" உன்னை பார்க்காத வரைக்கும் தான் வாசு நான் கெட்டவ.. உன்னைப் பார்த்ததும் நான் மாறிட்டேன்..எனக்கு இப்போதான் உம்மேல வெச்சிருந்த பாசத்தை என் தங்கை மேலயும் வைக்காம போயிட்டனோனு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவ சாகும்போது கூட அக்கா எனைய புரிஞ்சிக்கலன்னு நினச்சி வருத்தப்பட்டுருப்பால.. அவ பொண்ண நான் கொலை பண்ண நினைச்சது தெரிஞ்சா அவ ஆத்மா கூட எனைய மன்னிக்காதுல "
" பாஹீ..நீ என்மேல வெச்சிருந்த. அந்தக் கண் மூடித்தனமான பாசத்தாலதான்.எங்க. என்னை இழந்திடுவியோன்னு சுயநினைவு இல்லாம அப்படி நடந்துக்கிட்ட..என் பாஹீ கோபப்படுவாலே தவிர கொலை பண்ண மாட்டா..அப்போ இருந்தது பாஹீ இல்லமா..உணர்வுகளோட பிடில சிக்கியிருந்த கணவனோட சாதாரண மனைவி.. தன் தாய் தகப்பன் உடன் பிறந்தவங்கள இழந்து நின்ன துர்பாக்கியவதி.. அப்போ
நடந்தத யாராலயும் மாத்த முடியாது.. ஆனா இனி நடக்கறத உன்னால மாத்த முடியும்.அவகிட்ட பேசுமா.. அவ ரொம்ப அப்பாவி..அதிர்ந்து பேசுனா கூட அழுதுருவா.. நீ பேசறதுலதான் அவ மனசு மாறுவா . "
வாசுவின் பேச்சில் சித்தம் தெளிந்த பாஹீ நம்பிக்கையாய் அவரைப் பார்க்க, வாசு
" பாப்பா " என்று சமையல்கட்டை நோக்கி கூப்பிட்டார்.
ரோகிணி அப்போதும் தயங்கவும் உத்ரா அவளை தைரியப்படுத்தி அழைத்து வந்தாள். மருண்ட கோலி குண்டு விழிகளுடன் கைகளைப் பிசைந்த வண்ணம் தயங்கியவாறே வந்த ரோகிணி குணாதியசத்தில் ராஜியை ஒத்திருந்தாள்.
தன்னை கொலை செய்ய முயற்சி செய்த பாஹீ.. தன்னைக் கடத்தி சென்ற விசாகன்.. தான் வலிய சென்று பேசினாலும் பார்வையில் அனலைக் கக்கிய உதயன் என அனைவரும் அந்நியவர்களாய் இருக்க பயந்தவாறு தன் தந்தையை மட்டுமே நோக்கிச் சென்றாள். வாசுவின் பார்வை அவளது காயம்பட்ட கையினை ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்துச் சென்றது.
அவளை பாஹீக்கும் தனக்கும் நடுவே அமர வைத்துக் கொண்டவன் " பாப்பா.. நீ சொன்னத நான் செஞ்சுட்டேன்.. இனி முட்டாள்தனமா எதும் பண்ணமாட்ட தானடா.. " என்க, அவனை நோக்கி இல்லை என்று உதடு பிதுக்கியவள் அழுகத் தயாராக, " போதும்டா..எதுக்கெடுத்தாலும் அழுகுறது.. கண்ணை கசக்குறது..இனியாச்சும் எது நடந்தாலும் தைரியமா இருக்கனும் சரியா" என்றதும் சரி என தலையை மட்டும் ஆட்டினாள். ஆனாலும் பாஹீ அருகில் அமர்ந்திருந்ததால் இன்னும் அவளது நடுக்கம் குறையவில்லை.
பாஹீ குற்ற உணர்வில் அமைதியாகவே இருக்க, வாசு ரோகிணியிடம் நடந்ததை இரத்தின சுருக்கமாக கூறி பாஹீயிடம் பேசு என சைகை செய்ய, பாஹீ பட்ட பாட்டை அறிந்து மனம் நொந்தவள் அவருடன் பேச தயாரானாள் ஆனால் அவரை என்னவென்று அழைக்க வேண்டும் என அவளுக்குத் தெரியவில்லை. அம்மா என்றழைத்தால் கோபம் கொண்டு விடுவாரோ என்ற பயம் வேறு..
அவள் தயங்க, அவள் தயக்கத்தினைப் புரிந்து பாஹி, அவளது கைவிரல்களை தனது கண்ணீர் வழியும் கண்களில் பொத்தி வார்த்தையில்லா மன்னிப்பினைக் கேட்டவர் அவள் முகம் காண கூனி தனது இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த உதயனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டார். அந்த செயலிலே அவர் எவ்வளவு வருந்துகிறார் என்பது அவளுக்கும் புரிந்தது..
" அம்மா.. அழுகாதீங்கமா.. ரோகிணி உங்கள புரிஞ்சிக்குவாமா..அவகிட்ட பேசுங்க.. நம்ம பாப்பா மா.. பேசுங்கமா " என்று உதயன் அவரை நிமிர்த்தி ரோகிணியைக் காட்ட, உதயனின் நம்ம பாப்பா என்ற அழைப்பில் அவனும் ரோகிணியை தன் தங்கையாக ஏற்றுக் கொண்டான் என்பது புரிய, இந்த சிறுவர்களின் முன்பு தான் இன்னும் சிறுமையானவளாக உணர்ந்தார்..
துக்கம் தொண்டையை அடைக்க, வாயில் வார்த்தை வராதவாராக எச்சிலை மெல்ல விழுங்கியபடி, தன்னை சமன்செய்து கொண்டு
"மன்னிக்கூடிய தப்ப நான் பண்ணலமா.. உங்கிட்ட மன்னிப்புக் கேட்கற தகுதி கூட எனக்கில்லடா..
என்னை உங்கம்மா வா ஏத்துப்பியாடா..எனக்கு சாபவிமோசனம் கொடுப்பியாடா" என்க, அவளும் தனது தந்தையின் முகத்தினை ஒரு தரம் பார்த்துவிட்டு " அம்மா " என்றழைத்தாள்.
அந்தக் கள்ளம் கபடமில்லா அன்பு ஒன்றினை மட்டுமே கொண்டிருந்த அழைப்பில் மயங்கியவர் அவளைத் தோள் சாய்த்து அணைத்துக் கொண்டார். அவளும் பாஹீ என நினைத்திருந்தால் கண்டிப்பாக அம்மா என்று ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள்.. அவள் இப்போது ஈஸ்வரியாய் அன்பிற்கு ஏங்கும் சிறு குழந்தையாய் தெரிந்ததால் தன்னால் தன் தந்தை இன்னும் வருந்தக் கூடாது என்கிற காரணத்தால் தன் பயத்தினை ஒதுக்கி வைத்து அவரை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாள்..
உதயனும் " சாரிடா.. நானும் உங்கிட்ட கொஞ்சம் ரூடா நடந்துகிட்டேன். இந்த அண்ணாவையும் மன்னிப்பியா " என்க, அவளும் சந்தோசத்துடன் தலையாட்டினாள்.
அவள் அடுத்து விசாகனை நோக்க, அதுவரை அவர்களை சந்தோசமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பார்வை தன்புறம் திரும்புவதை உணர்ந்து முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான்.. அவன் கடைசியாக மருத்துவமனையில் தன்னிடம் மன்னிப்பு கேட்கும் போது கூட தன்னிடம் நன்றாகத்தானே பேசினான்.. தற்போது கோபப்படுகிறான் என்று குழம்பிப் போனாள்..
" சரி வாங்கய்யா . எல்லோரும் சாப்பிடலாம்..மருமகளே உனக்குப் பிடிச்ச அடை செஞ்சிருக்கேன்.. சாப்பிட்டு உங்க மாமியாரோட கைப்பக்குவம் இன்னும் மாறாம அப்படியே இருக்கானு சொல்லு " என அனைவரையும் சாப்பிட அழைத்தார்..இந்த வயதிலும் ஓய்வெடுக்காமல் சுறுசுறுப்பாக இருக்கும் பருவைக் கண்டு வியந்துதான் போனார்கள் பேரன்கள்.
உதியும் ரோகிணியும் சாப்பாட்டை கூடத்திற்குள் கொண்டு வந்து வைக்க, தரையில் வட்டமாக அமர்ந்து அனைவரும் உணவு உண்ணத் துவங்கினர்.. . உத்ரா உதயனை ஓரக் கண்ணால் பார்க்க, அவனோ காலுறை அணிந்திருந்ததால் தரையில் சம்மனம் இட்டு அமர சிரமப்பட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். அதனைப் பார்த்ததும் அவள் மனதில் தோன்றிய வார்த்தை
" க்யூட் " என்பதே.. அவள் பார்வை வீச்சு அவன்மேல் படர்ந்ததை உணர்ந்ததாலோ என்னவோ அவனும் அவளைப் பார்க்க, இருவரும் சுற்றுப்புறம் அறிந்து பார்வையை திருப்பிக் கொண்டனர்.
பல வருடங்கள் கழித்து இப்படி குடும்பமாய் உணவுண்பதில் மனம் நிறைந்து போயினர் வாசு பாஹீ தம்பதியினர்.. இனியாவது வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என நினைத்தக் கொண்டு, ஒருவரை ஒருவர் பார்வையால் வருடிக் கொண்டே உணவுண்டனர்..
உணவினை உண்ணும்போதோ என்னவோ இத்தனை நாட்களாய் தன் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த அதி முக்கியமான கேள்வியை தோழிக்காக உதயனிடம் கேட்டாள் ரோகிணி.
" அண்ணே.. அதெப்டினா காபில விசம் கலந்தா அதோட டேஸ்ட் மாறாதா.. அப்ரோ எப்படினா முழுக்காப்பியையும் குடிச்ச.." ( உணவில் நஞ்சு கலந்தால் அதன் சுவை உறுதியாக மாறும் என நினைத்துத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.. )
அந்தக் கேள்வியில் உதயனுக்கு புரையேறிட, உதி ரோகிணியை செல்லமாக முரைத்தாள்..
'அவள் மேல் தான் கொண்ட காதலால் ' என்ற பதிலை எதிர்பார்த்திருந்த உதியின் காதுகளில்,
" பாப்பா..நிஜமா அதை நான் காப்பினு நினைச்சு குடிக்கவே இல்ல.. விசம்னு நினைச்சுதான் குடிச்சேன்.. " என்றதும் அனைவரும் அவனை புதிராய் நோக்க,
"என் வாழ்க்கைலயே அப்படி ஒரு மட்டமான காபிய நான் சாப்பிட்டதில்லடா.. விசம்லா அதைவிட கொஞ்சம் பெட்டர் டேஸ்டா இருக்கும்னு எனையவே தேர்த்திக்கிட்டு பல்ல கடிச்சிக்கிட்டு தான் குடிச்சேன்.. பாவம் கடத்திட்டு வந்துட்டு அவுங்கள கஷ்டப்படுத்தக் கூடாதேன்னு " என்றதும் அங்கே சிரிப்பலை எழுந்தது.. உதி பொசுபொசுவென்று மூச்சு வாங்க அவனை முரைக்க, அவனோ அந்தப்புறம் திரும்பினால்தானே.. நல்லபிள்ளையாய் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.. ஆனால் அதைக் கேட்டதும் பருவின் முகம் தான் ஏதோ புரியாத பாவத்தைக் காட்டியது..
ரோகிணி ' எங்கண்ணாவ பாரு.. கடத்தினவங்க மனச காயப்படுத்த கூடாதுன்னு எவ்ளோ டீசன்டா நடந்துகிட்டாங்க.. ஆனா நீ என்ன பண்ண..சாப்பாடு போடாம பட்டினி போட்டு, எனைய வார்த்தையால காயப்படுத்தி, இருட்டு ரூமுல அடைச்சு வெச்சே ' என பார்வையால் குற்றம் சுமத்த, விசாகன் அதனை கண்டு கொள்ளாது அவளை அலட்சியம் செய்தாள்.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் பழங்கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.
இருக்கும் நான்கு அறைகளில், ஒரு அறையில் உதியும் ரோகிணியும் தங்கி்க்கொள்ள, இரண்டாம் அறையில் வாசுவும் பாஹீயும், மூன்றாவது அறையில் பருவதம் தங்கிக் கொள்ள, கடைசியாக இருந்த பெரிய அறையில் உதயன் விசாகனுக்கு கொடுக்கப்பட்டது..
வாசுவின் வேட்டியை ஆளுக்கொன்றாய் கட்டிக் கொண்டவர்கள் படுக்கத் தயாராக, உதி அவர்களுக்கு போர்வையும் தலையணையும் கொண்டு வந்து கொடுத்தாள்.. உதி உதயனிடம் பேசுவதற்காக தயங்கி நிற்க, அதனை புரிந்து கொண்ட விசாகன் வெளியேறினான்..
நீர்க்குடுவையை நிரப்பிக் கொண்டு அதனை அவர்களிடம் கொடுக்கலாம் என்றிருந்த ரோகிணி வாசலில் நின்றிருந்த அவனை பார்த்ததும் அப்படியே நிற்க, அவள் முகபாவத்தைக் கண்டு கோபம் கொண்டவன் வெடுக்கென பாட்டிலை பிடிங்கி அதனை பாதி காலி செய்து அவளிடம் கொடுத்து விட்டு வேறுபுறம் திரும்பிக் கொள்ள,
" சட்டப்படி நான் தான் உங்க மேல கோபப்படனும் " என்றாள் சற்று தைரியத்தை வரவைத்துக் கொண்டு,
" என்ன சொன்ன" என்று அவளை கோபமாக நெருங்கவும், கைகால்கள் உதறல் எடுத்தது.. அவன் அவளிடம் நெருங்கி வலது கையைப் பற்ற, அவள் மயங்கியே விழப்போனாள்..
" எ.ன்.னை. வி.டு.ங் க"என்ற வார்த்தை அவளுக்கே கேட்கவில்லை..பயத்தில் கண்ணீர் வரத் துவங்கியது.. அவன் இன்னும் சற்று கோபமாக பிடித்த கையை அவள் முகத்திற்கு நேராக காட்டி,
" என்னை விடலைன்னா..மறுபடியும் கைய அறுத்துக்க போறியா "
என்க, அவளிடம் பதிலில்லை..
" நான் பண்ணது ரொம்ப தப்புதான்.. அதை மறுக்கல..ஆனா அப்போதைக்கு எனக்கு வேற வழி தெரியல..அதான்..அதுவும் உனக்கு நம்பிக்கை வரனும்னுதான் வீட்டுல கடத்தி வெச்சேன்.. ஆனா அதையும் நியாயப்படுத்த விரும்பல..அதுக்காக உங்கிட்ட மன்னிப்பையும் கேட்டேன்.. ஆனா நீ என்ன பண்ண..அந்த வயசான பாட்டி ஏதோ சொன்னாங்கனு சாக துணிஞ்சிட்ட..
.உயிர எடுக்குற உரிமைய உனக்கு யார் கொடுத்தா ஹான்.. அவன் அவன் உயிர் வாழனுங்கற ஒரு காரணத்துக்காக எவ்ளோ கஷ்டத்தையும் வலியையும் தாங்கிட்டு எதிர் நீச்சல் போட்டு சாதிச்சிட்டு இருக்காங்க..ஆனா நீ " என்று மறுபடியும் காயத்தை சுட்டிக் காட்டியவன்
" உப்பு சப்பில்லாத விசயத்துக்கு சாகப் பாத்துருக்க .உங்கப்பா உனைய பாப்பான்னு கூப்டறதால நீ எப்பவும் பாப்பா கிடையாது.. வளர்ந்துட்ட..ஒரு செயல் செய்யறக்கு முன்னாடி அதுனால நமக்கு என்ன லாபம்..பாதிப்பு..அதுனால மத்தவங்க பாதிக்கப்படுவாங்களான்னு எல்லாத்தையும் யோசிச்சிட்டுதான் செய்யனுங்கறத புரிஞ்சுக்கோ.. இந்த சமுதாயம் ஒரு பொம்பளப்பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன காரணம் சொல்லும்னு நான் உனக்கு சொல்னும்னு இல்ல..நீ பாட்டுக்கு போய் சேர்ந்துடுவ..உங்கப்பாவ பத்தி நினைச்சுப் பார்த்தியா.. அவரே என்னிக்காச்சும் நீ அடுத்தவுங்க பொண்ணுனு சொல்லிக் காமிச்சிருக்காரா..
ம்ச்.. உங்கிட்ட சொல்றேன் பாரு..எனைய சொல்னும்.. உனக்கு ஆவுன்னா அழுகுறது..பயந்து சாகுறது..அது மட்டுந்தான தெரியும்.. உத்ராவும் உன் பிரண்ட் தான.. அவளையும் தான் கடத்துனோம்.. ஆனா அவ பயப்படல..அழுகல..தைரியமா அங்க இருந்து எப்டி தப்பிச்சி போகனும்னு தான் நினைச்சா..ஆனா நீ என்ன பண்ண " என்று மூச்சை இழுத்துவிட்டவன்
" ராமன்கிட்ட இருந்து பிரிச்சு சீதாதேவிய இலங்கைல சிறைவாசம் புடிச்ச மாதிரியும்..நான் என்னமோ ராவணன் மாதிரியும் நினைச்சிக்கிட்டு பச்சைத் தண்ணீ பல்ல படாம விரதம் இருந்த.. " அவள் முகத்தைப் பார்க்க அவள் முகத்தில் இன்னமும் வருத்தத்திற்கான சாயல் மட்டுமே இருந்தது..
" இப்போ கூட உன் கைய நான் புடிச்சிருக்கேன்..எனைய அடிச்சிட்டு கைய விலக்கனும்னு தோனலையே உனக்கு..பொண்ணுங்கனா போல்டா இருக்கனும்.. எங்க அமைதியா இருக்கனுமோ அங்க அமைதியா இருந்தா போதும்..இல்லைனா இந்த கொடூர உலகம் உன்னை சுட்டு சாப்பிட்டு போய்க்கிட்டே இருக்கும் " என்றவன் இன்னும் அவள் கையை விடவில்லை.. அவன் பேசிய பேச்சில் வீறு கொண்டு எழுந்தவள் அவன் சொன்னது போல அவனது கையை தட்டிவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.. அது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை..மாறாக சந்தோசத்தை அள்ளித் தெளித்தது..
" அட்வைஸ் பண்றக்காக கூட ஒரு பொண்ணோட கைய விருப்பம் இல்லாம பிடிக்காதீங்க " என்றவள் அவனைக் கடந்து போக, மீண்டும் அவன் அவள் கையை பிடித்து நிறுத்தியவன் " இதே மாதிரி எப்பவும் தைரியமா இருக்கனும் ரோகிணி..வெளியாளுங்க யாரையும் அதிகமா நம்பீராத..பத்தடி தள்ளியே நிறுத்திருமா..என்னால என் ராஜிய போல உனையவும் இழக்க முடியாது.. அதுக்காக உனைய காதலிக்க வேணாம்னு சொல்லல..உனக்கு பிடிச்சிருந்தா எங்கிட்டையோ இல்ல உங்கப்பா கிட்டையோ மறைக்காம சொல்லு..உனக்கு அவன் பொறுத்தமானவனான்னு பார்த்துட்டு அவனையே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..ராஜி மாதிரி யாரையும் நம்பிராதமா" என்றான்.. அவன் குரலில் உள்ள வலியை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவளுக்கும் ராஜி பற்றி தெரிந்து கொள்ள ஆசை..ஆனால் யாரிடம் கேட்க என தெரியாமல் தவிக்க, தன் தாயைப் பற்றிக் கூறியதும் விழி விரித்து அவனை நோக்கினாள்...
அதனை புரிந்து கொண்டவன்
"உன்னைப் போல தான் ராஜியும்.. ரொம்ப பயந்த சுபாவம்..சட்டுனு கண்ணுல கண்ணீர் வந்துடும்..ராஜிக்கு நான்னா ரொம்ப இஷ்டம்..
எங்கிட்ட எப்பவும் சொல்லும் உன்னோட ஏஞ்சல நீதான் பத்திரமா பாத்தக்கனும்னு ..ம்ச்
.. தேவா கெட்டவன், தன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்ச பின்னும் உனைய அவ வெறுக்கல.. நீ தான் பெரிய ஆளாகி அவனுக்கு நல்ல பாடம் சொல்லித் தரனும்னு சொல்லிட்டே இருக்கும்.. ராஜி சொன்ன மாதிரி அது கண்டிப்பா நடக்கும்.. ஆனா அதுக்கு நீ தைரியமா மாறனும்..
இன்னைக்கு நாங்க தேவாவ பார்த்தோம்..அவன் இப்போ எட்டாத உயரத்துல இருக்கான்.. ஆனா அது நிரந்தரமல்ல.. ஆகாயத்துல இருக்குற அவன் பாதாளத்துக்கு போக ரொம்ப நாள் எடுத்துக்காது.. எப்படி என் அப்பா அம்மா ராஜி தாத்தான்னு எல்லாத்தையும் துடிதுடிக்க கொன்னானோ அது மாதிரி அவனும் துடிக்கத் தான் போறான்.. ஆனா அந்த செயல்ல நீயும் ஒரு பங்கா இருக்கனும்னு ஆசை படறேன். எனக்கு துணையா இருப்பியா ரோகிணி " என்றதும் அவளுக்குள்ளும் புது இரத்தம் பாய்ந்து தேவாவை அவளே கொல்ல வேண்டும் என்கிற வெறி உண்டானது..
அவள் கையை விடுவித்தவன் அவள் நிலை அறிந்து அமைதி காக்க, " அவன நானே என் கையால கொல்லனும் " என்றாள் உக்கிரமாக,..
அவளைப் பார்த்து புன்னகைத்தவன் " இதே வெறியோடவே இரு.. சரியா " என்றவன்
" குட் நைட் " என்று சொல்லிவிட்டு திரும்பவும் உத்ரா வெளியே வரவும் சரியாக இருந்தது.. அவளிடமும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்..
அதுவரை விசாகனின் பேச்சு மாயையில் கட்டுண்டு இருந்தவள் தோழியை கண்டதும்
" என்னடி அண்ணாட்ட பேசிட்டியா..அவர் என்ன சொன்னாரு " என்க, புன்னகையை வரவைத்துக் கொண்டவள்
" இந்த ஜென்மத்துல உனக்கு இந்த மாதிரி அழகான அண்ணி கிடைக்க வாய்ப்பே இல்லனு சொன்னாரு " என கேலியாக சொல்ல,அதன் அர்த்தம் உணர்ந்தவள் அதிர்ந்து அவளை நோக்க,
" லூசு.. இது ஜஸ்ட் கிரஷ் தான்டி.. அதுக்கு நானே ப்பீல் பண்ணல.. நீயேன் இப்படி மூஞ்ச வெச்சிக்கிற..வாடீ..எனக்கு தூக்கம் வருது " என்று உள்ளே சென்று விட்டாள்.. அவள் பொய் சொல்லி சமாளித்தாலும் தோழியின் வலியை அவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன.. காலையில் இது பற்றி உதயனிடம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றாள்..
இ
ங்கே வாசுவின் அறையில் பாஹீ வாசுவின் தோளில் சாய்ந்திருக்க, வாசு அவள் கூந்தலினை தூக்கம் வரவைப்பதற்காக இதமாக வருடிக் கொண்டிருந்தான்.. ஆனால் அவளுக்கு தூக்கம் வருவேனா என்றிருந்தது.. முன்பு வாசுவைக் காணாது தூக்கம் வரவில்லை.. இப்போது வாசுவின் அருகாமை கிடைத்த சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை..
" வாசு.. "
" ம்ம் "
" வாசு.. "
" ம்ம்..சொல்லு பாஹீ "
" வாசு.. இது கனவில்ல தான.. நான் கண்ணை தொறந்தா இந்த அழகான நொடி எனைய விட்டு மறைஞ்சு போகாது தான "
" ம்ம்.இது கனவு தான் பாஹீ " என்றான் வாசு.. அவன் கூற்றில் வெகுண்டு எழுந்தவள் அவனை நோக்க
" ஆமா பாஹீ இது கனவு தான்.. இருபத்தி மூனு வருசமா நான் கண்ட ஒரே கனவு .. நீ இப்படி என் பக்கத்துல..என் கை வளைவுல..எங்கூடயே எப்பவும் இருக்கனுங்கறது தான்..
அந்தக் கனவு தான் இப்போ நிஜமாகிருக்கு" என்றவனை அணைத்துக் கொண்டவள் அவன் அன்பில் மூழ்கிப் போனாள்..
அங்கு அதே நேரம் "நீங்க என்ன பண்ணுவீங்கனு எனக்கு தெரியாது.. நாளைக்கு காலைல நான் எழும்போது அந்த வாசுவும் பாஹீயும் எங்க இருக்காங்கனு எனக்கு தெரிஞ்சாகனும் " என்று தன் வேலையாட்களிடம் உறுமிக் கொண்டிருந்தான் கே.எஸ்.ஆர் என்றழைக்கப்படும் தேவா..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz