ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

14.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

விசாகன் பின்னிருந்து தன்னை இடித்தவனைப் பிடி என்று கத்தியதும் உதயனும் தேவாவை பிடிக்க அவனைத் துரத்தினான். இருவரும் தாங்கள் கொண்ட மொத்த ஆத்திரத்தையும் ஒன்று திரட்டி அவனைப் பிடித்து நையப் புடைத்தெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளில் அம்மருத்துவமனையின் காவலாளிகள் வந்து அவர்களிடமிருந்து தேவாவை மீட்டு மன்னிப்பினைக் கோர, அவன் அவர்களை பார்வையால் சுட்டெரித்துவிட்டு வெளியே சென்றிட, இவர்களுக்குத் தான் கொலைவெறி ஏறியது..

விசாகன் அவர்களிடமிருந்து திமிறிக் கொண்டு தப்பித்து தேவாவை பிடிக்க முயல, அவனோ வெளியே தனக்காக காத்திருந்த விலையுயர்ந்த வாகனத்தினை ஒருவன் அவனுக்காய் மிகுந்த பணிவுடன் திறந்துவிட, அவர்களை திரும்பி ஏளனமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பி விட்டான்.

உதயனும் விசாகனும் அவனை பின் தொடர முயற்சிக்க, ஆனால் அதற்கு அந்தக் காவலாளிகள் முட்டுக் கட்டையாக இருந்தனர்.. சரியாக அந்நேரம் ரஞ்சித் வந்திட, அவன் வேலை செய்யும் இடம் என்பதால் பதற்றத்தோடு " செக்கியூரிட்டி.. என்ன பண்ணிட்டு இருக்கிங்க " என்று மிரட்ட,

" டாக்டர் சார்.. இவங்க தான் இன்னைக்கு ரவுண்ட்ஸ் வந்திருந்த நம்ம கே.எஸ்.ஆர் சார அட்டேக் பண்ணாங்க சார்.." என்று குற்றம் சாட்டிட, விசாகனும் உதயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இரஞ்சித் அவர்களை விடச் சொல்லிக் கேட்க, அவர்களோ ஏற்கனவே போலிஸில் தகவல் சொல்லியாயிற்று என்றனர்.. வெறும் ஒரு நிமிடத்தில் அத்தனையும் நடந்துவிட்டது.

உதயன் தன்னைப் பிடித்திருந்த காவலாளியின் கைகளை தட்டி விட்டு தர்க்கம் பண்ண, ரிசப்சனிஸ்ட் ஓடி வந்து
" செக்கியூரிட்டிஸ்.. அவுங்கள விட சொல்லி ஆர்டர் வந்திருக்கு " என்றதும் அனைவரும் சென்று விட்டனர்.

இரஞ்சித் " விசாகா என்னடா இதெல்லாம்.. கே.எஸ்.ஆர் பத்தி தெரியாமா அவர்மேல கைய வெச்சிருக்கிங்க " என்றான். அவர்களுமே கே.எஸ்.ஆரை பற்றி கேள்வி பட்டிருக்கின்றனர்.ஆனால் இதுவரை பார்த்ததில்லை..ஈஸ்வரி தொழில் நிறுவனம் தமிழ்நாட்டில் பிரசித்து பெற்றது என்றால் கே.எஸ்.ஆர் நிறுவனம் இந்தியாவில் தலைசிறந்தது.

" அவன் எவ்ளோ பெரிய ஆளா இருந்தா எனக்கென்னடா. அவந்தான்டா எங்க குடும்பத்த அழிச்ச தேவா.. அவனை எங்கையாலயே கொல்லனும்னு எம்மனசு துடிக்குது.. .. அவன கொன்னுட்டு தான் மறுவேலையே " என்று விசாகன் கூறிட,கிட்டத்தட்ட உதயனும் அதே நிலையில்தான் இருந்தான்.

இரஞ்சித் சுற்றுமுற்றும் பார்த்தவன் அவர்கள் இருவரையும் தனது கேபினிற்கு அழைத்துச் சென்றான்.

" யார் டாக்டர் சார் அவன்.. எதுக்கு நீங்க கூட இவ்ளோ பயப்படறீங்க "

" ப்ளீஸ் கொஞ்சம் ரெண்டு பேரும் அமைதியா இருங்க.."

" எப்படிடா எங்கத்தை இருக்கற நிலைய பார்த்துட்டும் அமைதியா இருக்க சொல்ற.."

" வேற வழியில்ல.. ஏன்னா நீங்க நினைக்கற மாதிரி அவர் தேவா இல்ல..கே.எஸ்.ஆர். பெரிய கோடீஸ்வரர்.பணத்தில உங்களை விட பல மடங்கு உயர்ந்தவர்."

" ஏன் பணக்காரன்னா இதை செய்யக் கூடாதா... "

" நான் அதுக்கு சொல்லல உதயன்.. அவர் இந்தியாவிலேயே டாப் பைவ் பணக்காரர்.. அவர் கால் பதிக்காத பிசினஸே கிடையாது.அது உங்களுக்குமே தெரியும்.
.அவ்ளோ ஏன் நாம இப்போ இருக்கற இந்த ஹாஸ்பிடல் கூட அவரோடது தான்.. அதும் அவருக்கு அரசியல் செல்வாக்கும் அதிகம்.. நீங்க அவுங்கள அடிச்சதுக்கே எந்த மாதிரியான எதிர் விளைவுகள் வரும்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.. தயவுசெஞ்சு கொஞ்சம் பொறுமையா எதையும் செய்யுங்க.. உங்க அம்மாவோட மனநிலை சரியாயிட்டு வர சமயத்தில உங்களுக்கு எதுக்கு பிரச்சனை"

" நீதானடா சொன்ன.. அத்தை முழுசா குணமாகனும்னா அந்த தேவா வரனும்னு.. இப்போ நீயே மாத்தி சொல்றியே"

" ம்ச்.. கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணு விசாகா.. அவரே உண்மையான தேவாவா இருந்தாலும் அதை ஈஸ்வரி மேடம் ஒத்துப்பாங்களா.. இல்ல அதை நிரூபிக்க சரியான ஆதாரம்தான் இருக்கா.. பர்ஸ்ட் அவர்கி்ட்ட பொறுமையா பேசிப் பார்த்தா தான் அவர் யாருங்கற உண்மையே நமக்குத் தெரியும்.. "

" ஆமா விசாகா.. டாக்டர் சொல்றதும் உண்மைதான்..ஒருவேளை அவன் உண்மையான தேவாவா இருந்தா நமக்கு இனனும் பிரச்சினை கொடுக்க முயற்சிப்பான்.. நமக்கு இப்போ அம்மாவோட பாதுகாப்புதான் முக்கியம்..என்னதான் நமக்கும் போலிஸ் ஆபிசர்ஸ தெரிஞ்சு இருந்தாலும் அவனோட செல்வாக்கோட முன்னிலைல நாம செல்லாக்காசுதான்.. இனி நம்மளோட சேப்டி தான் முக்கியம்.. நாம நம்ம குடும்பத்துல அவனால இழந்த உயிர்கள் போதும்.. இனி யாரையும் நாம இழக்க கூடாது..அடுத்துதான் அந்த தேவாவ தோலுருச்சி இந்த உலகத்துக்கு அவனோட உண்மையான முகத்தை காமிக்கனும் " என்று உறுதியாக சொல்லவும் விசாகனும் அதற்கு சம்மதித்தான்.

" ரஞ்சித் அத்தைய நாங்க எப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போறது.. நீ சொல்றத பார்த்தா இங்க இருக்கறது அவுங்களுக்கு ஆபத்தா கூட மாறலாம்"

அவனைப் பார்த்து புன்னகைத்த இரஞ்சித்
"அவுங்க மனநிலைய வெச்சுத்தான் நான் எதுமே சொல்ல முடியும்.  ஆனா அவுங்க எனக்குத் தெரிஞ்சு கிட்டத்தட்ட குணமாயிட்டாங்க.. அவுங்களோட இந்த நிலைக்கு காரணமான கோபமே அவுங்களுக்கு இப்போ மருந்தா அமைஞ்சிருக்கு..அதும் இல்லாம வாசு சாரோட அன்பால அவுங்க நிச்சயமா குணமாகிடுவாங்க.. அவுங்களுக்கும் இந்த மாதிரி நேரத்துல ஒரு புதிய சூழல்ல தங்கி இருந்தா அவுங்க மனசுக்கும் ஆறுதலா இருக்கும். அவுங்களோட கடந்த கால நினைவுகளோட தாக்கமும் அதிகம் இல்லாம  இருக்கும். சரி வாங்க.. அவுங்க என்ன பண்றாங்கனு பார்க்கலாம்.. " என்று அவன் வெளியே செல்ல முயற்சிக்க,
அவன் கைப்பிடித்து உதயன் " ரொம்ப நன்றி டாக்டர் சார்..நாங்க ஒவ்வொரு டைமும் சோர்வடையும் போதும் உங்க பேச்சுத் தான் எங்களுக்குக் புத்துணர்ச்சி அளிக்குது.. இப்போ கூட உங்க வேலையைப் பத்தி கூட பயப்படாம எங்களுக்காக உதவி செய்யறீங்க.. நிஜமா நீங்க ரொம்ப கிரேட் " என்றிட,

" அட என்னங்க உதயன்..நான் ஒரு மனநல மருத்துவரா என் வேலைய செய்யறேன்.. அதுமில்லாம நான் படிச்சதே ஈஸ்வரியம்மா பவுண்டேசன்ல தான்.. அவுங்களுக்காக  உயிரையே கொடுக்க இருக்கற இலட்சம் பேர்ல நானும் ஒருத்தன்தான்.. அவுங்க சரியானாலே போதும்.. அவுங்களுக்காக வேலை என்ன என் உயிரையே கொடுக்கலாம்.." என்றதும் விசாகன் அவனைக் கட்டிக் கொண்டு " தேங்க்ஸ்டா மச்சான் " என்றிட,

" பார்த்திங்களா நீங்க ரெண்டு பேரும் தேங்க்ஸ் சொல்லி அந்நியப்படுத்தீறீங்க " என்றான் பொய் கோபத்தோடு

உதயன் " பிரெண்ட்ஸ் " என்று கை நீட்ட,
" நண்பனின் நண்பன் எனக்கு எப்பவே நண்பன் தான் பாஸ்.." என்று அதனைப் பற்றிக் கொள்ள அங்கே இனியதொரு நட்பின் சங்கமம் நிகழ்ந்தது.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

அதேநேரம் மின்னலென சீறிப் பாய்ந்து சென்ற அவ்வாகனம் பெரிய மாளிகையின் கோட்டைக்குள் புகுந்தது...
அந்த வாகனத்தைக் கண்டதும் அதுவரை ஏனோ தானோவென்று வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரர்கள் நடுங்கிக் கொண்டு தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

கோபமாக உள்ளே நுழைந்த கே.எஸ். ஆர் வழக்கமாக தான் பயன்படுத்தும் மின்தூக்கியைக் கூட உபயோகிக்காமல் வேகமாக படிக்கெட்டுகளில் ஏறி மின்னலென தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.
அங்கே மாட்டியிருந்த தனது தந்தையின் புகைப்படத்தை உற்று நோக்கியவன் உதட்டில் புன்னகை படர்ந்து அது எக்காளச் சிரிப்பாக மாறியது.. தானே மறந்திருந்த அவனது கருப்புப் பக்கங்கள் ஒவ்வொன்றாய் நிழலாடிட, அவனது கைங்காரியத்தால் நிகழ்ந்த கொலைகள் வரிசைக்கட்டி மாணிக்கம், சுந்தர், ரேவதியின் உருவங்களாய் நிற்க, அத்தோடு தன் காதல் லீலையால் ராஜியின் அவல நிலை, பாஹீயின் கைம்பெண் கோலம், வாசுவின் அனைத்தையும் துறந்த நிலை என அனைத்தையும் நினைவில் மீண்டும் கொண்டு வந்து இரசித்தவன் மனது உற்சாகத்தில் நிறைந்தது..

அடுத்து சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்தியவன் உதட்டில் விசாகன் அடித்த அடியால் காயம் ஏற்பட்டிருக்க அதனைத் தொட்டு பார்த்துவிட்டு
" உங்களோட விளையாண்டு எனக்கு போரடிச்சுப் போனதால தான் இத்தனை நாள் உங்கள விட்டு வெச்சிருந்தேன்..பழைய கணக்கையே முடிக்காம  இருக்கும்போது இப்போ புது கணக்க தொடங்கிட்டியே விச்சுக்கண்ணா.. பரவாலை நீயாச்சும் எனைய கண்டுபிடிச்சியே..இல்லைனா கடைசி வரை 
நான் யாருங்கற கேள்விக்கு பதில் தெரியாமலே போயிருக்கும்.
  இந்தத் தடவையாது விளையாட்டு சூடு பிடிக்குதான்னு பார்ப்போம் " என சிரித்துக் கொண்டவன்
மடிக்கணினியில் மருத்துவமனை ஒளிப்பதிவுகளைப் பார்த்துவிட்டு
" ஓ.. அந்த முட்டாள் பொண்டாட்டிய தேடி வந்துட்டானா.. நல்லது.நல்லது.. அடியே பாஹீ.. நீ புருசங்கோட சந்தோசமா இருக்கப்போறீயா.. அதை நடக்க விட்டுடவனாடி நானு.. உனக்கு எதிரியா உன்னோட ஆங்கார கோபம் உருவாக காரணமே நான்தான்டி..  " என்று சிரித்தவன் திருமணத்திற்கு முன்பு அவளுக்கு தலைவலி என்று மருத்துவமனை வந்தவளுக்கு மூளையில் மின்அதிர்வு கொடுத்து அவளது மூளையில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வை நினைவு கூர்ந்தவன் கண்களிலும் சிறு கண்ணீர்த்துளி..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
உதயன் மெதுவாக கதவினைத் திறக்க, அங்கே வாசு கட்டிலின் காலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருக்க, அவன் மடியில் பாஹீ அமர்ந்தவண்ணம் அவன் நெஞ்சில் தலை வைத்து தூங்க, அவளை அரவணைத்தவாறே தன் கண்களை இமைக்கக் கூட மறந்து பாஹீயையே பார்த்திருந்தான் வாசு.
பாஹீயின் முகத்தில் இருக்கும் நிம்மதியை அவர்கள் இதுவரை அவர் முழித்திருக்கும்போது கூட பார்த்ததில்லை..
இதற்குத் தானே இவர்கள் ஆசைப்பட்டனர்..

கதவு திறந்ததில் வாசு அவர்களை நோக்க, விசாகன் பாஹீயைத் தூக்கிக் கொண்டு வெளியே வருமாறு சைகை செய்ய அவன் முகத்தில் இருக்கும் தீவிரம் அறிந்து பாஹீயின் தூக்கம் கலையாமல் மென்மையாக தூக்கினான்.. பாஹீயும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் எழுந்து கொள்ளவில்லை..

இரஞ்சித் " விசாகா அவுங்க கண்டிப்பா சரியாகிடுவாங்க.. நான் கொடுத்துருக்க மாத்திரைய தவறாம தாங்க.. நான் கண்டிப்பா உங்களப் பாக்க வரேன்.. அவுங்களுக்கு மீண்டும் கோபம் வராது பார்த்துக்கோங்க.. எதா இருந்தாலும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க..
நானும் அவுங்க கேஸ பத்தி இன்னும் ஸ்டடி பண்ணிட்டு இதுக்கான கம்ப்ளீட் சொலியூசன் இருக்கானு எங்க சீப்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன்.. "

" உனக்கு இதுனால எந்த பாதிப்பும் "

" உதயா எனக்கு எதும் ஆகாது.. பார்த்துப்போங்க.. " என்று தைரியம் சொல்ல நால்வரும் பெரிய குளத்தை நோக்கி பயணித்தனர்.. வாசுவைப் பற்றியோ அந்த ஊரைப் பற்றியோ அதிகம் யாருக்கும் தெரியாது என்கிற காரணத்தால் கே.எஸ்.ஆரால் அவர்களை பின்தொடர முடியாது என்று   அங்கேயே செல்லலாம் என முடிவெடுத்து எதிரியை குழப்புவதற்காக பல செக் போஸ்ட்களை கடந்து எட்டு மணி நேர பயணத்தை 12 மணி நேரமாக மாற்றிக் கொண்டு பயணித்தனர்.
விசாகன் வண்டியைச் செலுத்த  உதயன் தனது நண்பர்களிடம் கே.எஸ்.ஆரைப் பற்றி விசாரிக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். பாஹீ இப்போதும் அவள் பிடித்திருந்த வாசுவின் சட்டைக் காலரைக் கைவிடாது தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். வாசுவின் கால்கள் மருத்துப் போய் வலி எடுத்தாலும் பாஹீக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என தெரிந்ததால் அசையாமல் அமர்ந்திருந்தார்.

உதயன் தனது மாமா நாகராஜனிற்கும் நிலைமையை எடுத்துக்கூறி பத்திரமாக இருக்கச் சொன்னான்.. அடுத்து உதிக்கு அழைத்து தாங்கள் அங்கேதான் வந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் தெரிவித்தான்.. ஏனோ அந்த இக்கட்டான இறுக்கமான மனநிலையிலும் அவளுடனான சில நொடிகளே ஆன உரையாடல் மனதிற்கு இதமாய் இருந்தது.. நேற்றிலிருந்து பட்ட அலைச்சல் கூட மறந்துபோய் காற்றில் பறப்பது போன்று இருந்தது.. சூழ்நிலை அறிந்து தன்னையே திட்டிக் கொண்டவன் பின்னோக்கி பார்க்க,அவனது தாயும் தந்தையும் ஒன்றாய் அமர்ந்திருந்த காட்சியை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான்.

அவர்களது இத்தனை வருட பிரிவிலும் ஒருவரது செயல் மற்றொருவரை காயப்படுத்தி இருந்தாலும் கூட ,
ஒருவரை ஒருவர் மறக்காது தான் கொண்ட காதலில் உறுதியாக இருந்தனரே, இவர்களில் யார் அன்பு பெரியது.. காதல் மனைவியின் உடல்நலத்துக்காக பிரிந்து சென்றும் அவருக்காய் உருகிக் கொண்டிருந்த வாசுவுடையதா .. கணவனுக்கு எதிரான சாட்சிகள் இருந்தும்..அவரது உடல்நிலை ஒத்துழைக்காத போதும் அவர் வார்த்தைக்காக தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பாஹீயுடையதா..இருவரும் சந்தர்ப்ப வசத்தால் சூழ்நிலைக் கைதிகளாய்
தவறிழைத்து பிரிந்திருந்தாலும் அவர்களின் நேசம் என்றுமே குறையவில்லை என்றாலும்
உதயனுக்கு பாஹீயின் காதலே சிறந்தது என்றே தோன்றியது.. விரைவில் அவனுமே வாசுவின் காதலின் ஆழத்தை உணரும் காலம் தூரமில்லை..

இதற்கிடையில் பெரிய குளத்தை அடைய இன்னும் அரை மணி நேரமே இருந்த நிலையில் பாஹீ மெதுவாக தூக்கம் கலைந்து கண் திறந்தாள்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
அங்கோ ரோகிணி பாஹீ தன்னைக் கண்டால் எவ்விதம் நடந்து கொள்வாரோ என்கிற குழப்பத்திலே ஆழ்ந்திருந்தாள்.

ரோகிணியின் மனநிலை உதிக்கும் புரியாமல் இல்லை.. ஆனால் பாஹீ ஒருவேளை ரோகிணியை வீட்டை விட்டு துரத்திவிடுவாரோ என்கிற பயம் அவளுக்குமே இருந்தது.. பருவதம் உதயன் வந்ததும்  ரோகிணியை வேற்றாளாய் நினைக்க ஆரம்பித்ததையே தாங்காத அவள் மனம் வாசுவின் பிரிவை எவ்வாறு தாங்கும்.

" ரோகிணி உங்கப்பா அப்படிலா தனியா விட மாட்டார்டி"

" அதான்டி எனக்குமே பிரச்சனை..நான் இருந்தா அவங்கனால சந்தோசமா இருக்க முடியாதுடி.. என்னை கண்ணுங்கருத்துமா பார்த்துக்கிட்ட என் அப்பாவுக்கு என்னால வலிய மட்டுந்தான கொடுக்க முடிஞ்சுது "

" பைத்தியம் மாதிரி பேசாதடி.. உங்கோட பழகுன யாரும் உனைய வேற ஆளா பிரிச்சுப் பார்க்க மாட்டாங்கடி.. போகப் போக ஈஸ்வரி அம்மாவும் உனைய புரிஞ்சிக்குவாங்க.. அவுங்களுக்கு மனநிலை கொஞ்சம் சரியில்லாதனால தான கோபமா நடந்திட்டாங்க..அவுங்க சரியானதும் உனைய ஏத்துப்பாங்க.. உங்கம்மா உனைய திட்டி இருந்தா அவுங்கள மன்னிச்சிருப்ப தான அந்த மாதிரி ஏத்துக்கோடி.. "

" ஆனா உதயன் அண்ணா..அவருக்கு எனைய  பார்த்தாலே பிடிக்காத மாதிரி தான முகத்தை வெச்சிக்கிறாரு.. ஈஸ்வரி அம்மாக்காக இல்லைனாலும் அவருக்காகவாது நான் விலகிதான்டி இருக்கனும்.. " என்று அழுகத் துவங்க, அவளை மடியில் சாய்த்துக் கொண்டவள்
" அடியேய்.. அரவேற்காடு.. ஓவரா திங்க் பண்ணாதடி..உனக்கு உங்க அம்மா, அண்ணா.. அம்மாச்சி.. மாமா அத்தை.. மாமா பையன், அத்தை பொண்ணுனு எத்தனை புது சொந்தங்க கிடைச்சிருக்காங்க.. அதை நினைச்சு சந்தோசப்படாம விலகிப் போறேன்னு சொல்ற, இப்படி குடும்பமா இருக்கறதுதான் சந்தோசமே.. என்னைப் பாரு..அநாதையான என்னை, யாரும் கொன்னு போட்டா கூட எனக்காக கண்ணீர் வடிக்க பிரண்ட் உன்னைத் தவிர வேற யாரு இருக்கா எனக்கு.. அந்த நிலைமை உனக்கு வேணாம்டி.." எனும்போது உத்ராவுக்குமே கண் கலங்கியது.. இருந்தும் தான் அழுதால் இவள் இன்னும் பலவீனமாகி விடுவாள் என்கிற காரணத்தால் தன்னை திடப்படுத்திக் கொண்டு,
கேலியாக,
" நீ தான சொன்ன, உனக்கு அண்ணா மட்டும் இருந்திருந்தா எனைய கட்டி வெச்சிருப்பனு..இப்போ உனக்கு அண்ணா வந்தவுடனே அவர எங்கிட்டிருந்து காப்பாத்த  பிரிஞ்சி போகலாம்னு சொல்ற பாத்தியா.. அப்போ உங்க அப்பத்தாவோட குடுமிச்சண்டை போடனும்ங்கற என் கனவு என்னாகுறது.. ஹான்" என்று செல்லமாக ரோகிணியின் கண்ணம் கிள்ள, இதுவரை அழுது கொண்டிருந்தவளின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது..

" ஒழுங்கா சமத்துக்குட்டியா எதையும் நினைச்சு பயப்படாம அங்கிள் சொல்றத கேட்டு பொறுப்பா நடந்துக்கனும்..இந்த மாதிரி அழுமூஞ்சி பாப்பாவா இருக்கக் கூடாது சரியா " என்கவும் ரோகிணியின் தலையும் சம்மதமாக அசைந்தது..

அவர்களுக்கு தேநீர் கொண்டு வந்துவிட்டு அவர்கள் பேச்சை இதுவரை கேட்டுக் கொண்டிருந்த பருவதம்
அவர்கள் அருகே அமர்ந்து
" ஏன்டி பொண்ணுங்களா..நான் தான் எம்பேரன கண்ட குஷியில ஏதோ உலறிப்புட்டேன்.. அதனால எனைய வில்லின்னே நினைச்சுப் புட்டீகளாக்கும்..இந்த முட்டைக்கன்னிய தொறத்தி வுட்டா எங்குடும்பம் தலைக்குமா..பொட்டப்புள்ளைய தவிக்க விடற அளவுக்கு நான் கொடுமைக்காரி இல்லைடி.. என்ற நல்ல குணத்தால தான் எம்பையனும் நல்லவனா இருக்கியான்னு எங்கூராளுங்க சொல்லிட்டே திரிவாங்க..அதை மறந்துப் புடாதீக" என்றவர் தேநீரை எடுத்து தந்துவிட்டு " என்ற பேரனுக்கு விருப்பம்னா அவனுக்கே உனைய கட்டித் தந்து நாம ஆயுசுக்கும் குடுமிச் சண்டை போடாளாம்டி யாத்தா " என்று உத்ராவின் தலையை ஆதரவாய் வருடி விட்டார்.

நினைவு தெரிந்த நாட்களிலிருந்து முள்ளாய் கீறிக் கொண்டிருந்த பருவதத்தின், இந்த ஆறுதல் பேச்சில் இருவருமே அதிர்ந்துதான் போயினர். ஏதோ தன் மகனின் வாழ்வு சூனியமாக காரணமாயிருந்த ராஜியின் மீது இருந்த கோபத்தை மூதாட்டி மகளிடம் காட்டிக் கொண்டிருந்தார் போலும்.. ரோகிணியின் தற்கொலை முயற்சியும் அவளது தியாக மனப்பான்மையும் அவரின் மனதையும் மாற்றிவிட்டது..

அவர் எழுந்து சென்ற பிறகு, ரோகிணி உத்ராவை சந்தேகமாய் பார்க்க அவள் தலை குனிந்து விட்டாள்.
" ஹேய்..என்னடி..அப்பத்தா உனைய அந்த சிடுமூஞ்சி அண்ணாவோட ஜோடி சேர்த்துட்டு போவுது "

அவள் கேள்வியை கவனிக்காது
" போடி அவர சிடுமூஞ்சினு சொல்லாத.. எனைய கடத்தி இருந்தாலும் எங்கிட்ட எவ்ளோ பண்பா நடந்துகிட்டாரு தெரியுமா.. நான் விசங்கலந்தது தெரிஞ்சும் கூட அதைப் பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம எனைய மன்னிச்சிட்டாரு ரொம்ப மரியாதை தெரிஞ்சவரு..எனைய கூட வாங்க போங்கனு தான் கூப்டுவாங்க தெரியுமா " என்று வெட்கப்பட,

" போதும்டி லிஸ்ட் பெரிசா போகுது..ஹூம்..ஆக மொத்தம் இந்த விஸ்வாமித்திரியையே வெட்கப்பட வெச்சிட்டாரு.. அண்ணே பெரிய ஆளு தாண்டி.. அதெப்டிடி உனைய கடத்துனவன் மேல உனக்கு காதல் வந்துச்சு.. ஒரு மூனு நாள் பார்த்திருப்பீங்களாடி"

" லூசு.. அவரப் பிடிக்கும்டி..ஆனா காதல்லா இல்லைடி.. அவர் எங்க..நான் எங்க.. எங்களுக்குள்ள ஒரு நல்ல பாண்டிங் இருக்கு அவ்ளோதான் " என சமாளிக்க

" அடேங்கப்பா இதை காதுல பூ வெச்சிருக்கவங்கிட்ட சொல்லு நம்புவான்..எங்கிட்ட அளந்து விடாத.. நான் முடிவு பண்ணிட்டேன் எங்கண்ணே எனைய ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காம போனாலும் என்னோட அண்ணி நீ மட்டுந்தான்.. அதுல எந்த மாற்றமும் இல்ல.. "

" ஒருவேளை அவருக்கு எனைய பிடிக்கலனா.. ஈஸ்வரியம்மா ஏத்துக்கலைனா"

" ஓ.. யாரோ இப்பதான் காதல்ல கிடையாதுன்னு சொன்னாங்க.. ஆனா அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்டாங்க"

" ஹேய்.. சும்மா ஓட்டாதடி..உனக்குத் தெரியும்ல..எனக்கு இதுவரை யார்மேலயும் இந்த மாதிரி தாட் வந்ததே இல்ல..ஒரே கன்பியூசனா இருக்கு..நீ வேற அண்ணினு பொய்யான நம்பிக்கை கொடுக்காதடி..ஒருவேளை நான் ஆசை அதிகமா வெச்சதுக்கு பிறகு எதும் கிடைக்காம போயிட்டா ரொம்ப வலியா இருக்கும்.. எதுக்கும் அவர்கிட்ட பேசி கன்பார்ம் பண்ணிட்டு எதா இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம்.. நீ அதுவரைக்கும் சும்மா இரு" என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் உத்ரா...

அவள் அப்படித்தான் ரோகிணியைப் போன்று மனதில் அதுவா இதுவா என்று எந்நேரமும் குழப்பிக் கொள்ளாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தை அறிந்து செயல்படுபவள்.. பாவம் அவளையே உதயன் திணறடிக்கப் போகிறான் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

உதயன் - உத்ராவைப் போல ரோகிணி விசாகனுக்கு எந்தக் குழப்பமும் நேரிடவில்லை. ரோகிணி அவனை, தன்னைக் கடத்திக் கொடுமை செய்தவன் தற்போது தங்களின் உறவுக்காரன் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறாள்..
விசாகனும் தனது ராஜியின் ஏஞ்சல் என்கிற முறையிலே நினைத்துக் கொண்டிருக்கிறான்..பார்ப்போம் அடுத்த சந்திப்பிலாது இவர்கள் உறவில் எதும் மாற்றம் நிகழுமா என்று..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
விசாகனும் உதயனும் கடைவீதிக்கு இறங்கிச் சென்றிருந்தனர்.
உறக்கம் கலைந்து பாஹீ மெல்ல கண்களைத் திறக்க, அவள் கண்டது தனது கூந்தலில் முகம் புதைத்து தூங்கிக் கொண்டிருக்கும் வாசுவைத் தான்... இதுவும் கனவாக இருக்குமோ என நினைத்துக் கொண்டே அவனை இன்னும் அணைத்துக் கொண்டவள் " வாசு " என்று பிதற்ற, அவள் அணைப்பில் கண் திறந்தான் வாசு..

பாஹீ தன்னைக் கண்டதும் கோபமும் தான் தேவா என்கிற குழப்பமும் அடையாமல் சுயநினைவோடு இருப்பதை அறிந்து சந்தோசம் கொண்டவன்
" நான் வந்துட்டேன் கண்ணம்மா..எனைய மன்னிச்சிடுடி..இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன் " என்று அவள் முகத்தை கையில் ஏந்திக் கொண்டு கூற, அவன் கண்ணோடு கண் கலந்தவள் அவன் நிழலல்ல நிஜம் என்பதை அறிந்து
" நான் தாலிய கலட்டுனதும் நீ ரொம்ப துடிச்சிருப்பல்ல.. வாசு.. அதான் ..அந்தப்பாவத்துக்கு தான் நீ திரும்பி வரவரை இதே கோலத்துலயே இருந்துட்டேன்.. இது உனக்கான தண்டனை இல்ல..உன்னை அவமதிச்ச எனக்கு நானே கொடுத்துட்ட தண்டனை.. நான் செஞ்ச பாவத்த ஒரு நொடி கூட மறக்கக்கூடாதுன்னு தான் இந்தக் கோலம்.. என்னை மன்னிப்பியா வாசு " என்றிட,

" ச்சூ..வாயை மூடு.. நீ பேசுன வரைக்கும் போதும்.. இனி நான் தான் பேசனும் " என்றவன் அவனை வண்டியை விட்டு கீழே இறக்கினான்..
விசாகனும் உதயனும் அவர்களை நோக்கி வர தற்போது அவர்களிடம் என்ன பேசுவது என்று பாஹீ தயங்க, அவர்களோ பாஹீயைக் கண்டதும் வந்து அணைத்துக் கொண்டனர்..
தன் பிள்ளைகளிடம் இத்தனை நாள் வாசுவைப் பற்றி சொல்லாத குற்றவுணர்வு அவரைத் தாக்க, அதனை அவர்கள் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.. பாஹீ திரும்பி வந்ததே பெரிதாகத் தெரிந்தது அவர்களுக்கு..

" டேய்.. அவ என் பொண்டாட்டிடா..விடுங்கடா..ரெண்டு பேரும்..நானே இப்போதான் அவள சந்திச்சிருக்கேன் " என்று வாசு உதயனுக்கும் விசாகனுக்கும்  முதுகில் அடிபோட, அதன்பிறகே இருவரும் நகர்ந்தனர்.

அவன் கேலியில் பாஹீ சிவக்க அவளையே இரசனையாய் பார்த்திருந்தான்.. இளைஞர்கள் இருவருக்கும் இந்தக் காட்சி புதிதாய் தோன்ற, அவர்களும் சிறு புன்னகையுடனே இருவரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்..அங்கே ஐய்யர் திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்க, அங்கே எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டி பாஹீயிடம் பட்டுப்புடவையை அளித்து அதனை கட்டி வரச் சொன்னார்.. பாஹீக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டதுமே வாசுவைப் பார்க்க, அவன் கண்களாலயே ஆறுதல் சொல்லி அந்த முதியவரோடு அவளை அனுப்பி வைத்தான்.
பெற்றோருக்கு திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் எத்தனை பிள்ளைகளுக்கு கிடைக்கும்.. விசாகனும் உதயனும் தங்களுக்கு கிடைத்த அந்தக் குறைந்த நேரத்தில் அனைத்து ஏற்பாட்டையும் செய்து மணமக்களுக்காக காத்திருந்தனர். வாசுவிற்கு ஏனோ அவர்கள் இருவரைப் பார்க்கும்போது மாணிக்கம் சுந்தரும் உடனிருந்து இந்த ஏற்பாடுகளை செய்வது போல மன நிறைவாக இருந்தது..
வாசு மஞ்சள் நிறச் சட்டையும் பட்டுவேட்டியுடன் மாப்பிள்ளையாய், நாப்பதுகளின் இறுதியில் இருந்தாலும்   கம்பீரமாய் வந்தமர, பாஹீயோ எளிமையான அலங்காரத்திலும் இலட்சுமி கடாட்சமாய் சிறு வேலைப்பாடுகளுடன் கூடிய இளஞ்சிவப்பு நிறப்பட்டில் சற்று தயங்கியவாரே வந்தமர்ந்தாள்.

விசாகனுக்கு இளம்வயதில் தான் கண்ட பாஹீயைப் போன்றே அவர் தெரிய, உதயனுக்கோ
இதுநாள் வரை வெண்ணிற உடையினில் மட்டுமே காட்சியளித்த தன் தாயை செம்பட்டில் கண்டதும் அத்துனை மன நிறைவாய் இருந்தது.

அன்று பாஹீயின் நலனுக்காய் நேரங்காலம் பார்க்காமல் வாசு , பாஹீயின் மயங்கிய நிலையில் தாலி கட்டியிருக்க, இன்றோ பிள்ளைகளின் முன்னிலையில் அவள் நிதானத்தில் இருக்கும்போது அவள் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளை மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டான். பாஹீ, இத்தனை நாள் தன் கழுத்தில் மீண்டும் தவழாதா என ஏங்கிக் கொண்டிருந்த அந்தப் பொன் தாலியை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

அடுத்து நெற்றியில் அவன் குங்குமம் சூட்டிவிட, அவள் கண்களில் மீண்டும் வெள்ளிக் கீற்றாய் கண்ணீர்த் துளிகள் வழிந்தது.. சாதாரணமாய் தன் நெற்றிப்பொட்டு விழுந்தாலே தாங்காதவனுக்கு தான் அளித்த தண்டனையின் வலி எப்படி இருக்கும் என்று புரியாமல் இருக்குமா..

" பாஹீ.. இனி அழுகுறதால ஒன்னும் ஆகிடாது..  பசங்கள நாம ரொம்ப காயப்படுத்தி இருக்கோம்..இனியும் அவுங்கள வருத்தக் கூடாது" என கண்களை துடைத்துவிட்டவன் தன் மனையாள் பிள்ளைகளோடு பயணத்தைத் தொடர்ந்தான்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz